அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Thursday, February 28, 2013

அவசரம் ஆபத்தானது !!
அவசரம் என்பது ஒரு பொருளை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பு தேடுவதும் அதைப்பெற முயற்சிப்பதுமாகும். விளங்காமல் பேசுவது புரியாமல் பதிலளிப்பது அனுபவப்படுவதற்கு முன்பு ஒரு ஆளைப் புகழ்வது புகழ்ந்தபின் பழிப்பது. இதுவெல்லாம் அவசரத்தால் விளையும்  அபத்தங்களாகும்.

"நிதானம் அல்லாஹ்வினால் வருவது. அவசரம் ஷைத்தானால் விளைவது(நபி மொழி- முஸ்னது அபீயஃலா. 4256)
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு. அதனால் தான்  "நீதிபதி கோபத்தில் இருக்கும் போது தீர்ப்ப‍ளிக்க வேண்டாம்" எனக்கூறினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) (புகாரி7158 - முஸ்லிம்1717)

பதறாத காரியம் சிதறாது. எனவே பதறினால் எந்தக் காரியமும் சிதறிவிடும்''கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்''எனவே எதைப் பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசவோ வெடுக் வெடுக் என அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதோ கூடாது.
'' நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால், (அதன் உன்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரனை செய்து கொள்ளுங்கள் (இல்லையெனில் அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கும் நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர்,நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும்'' (அல்குர் ஆன் . 49;06)

அவசரப்பட்டு மனிதன் பல காரியங்களை செய்து விடுகிறான் செய்து முடித்தபின் அடடா காரியத்தை கெடுத்துவிட்டோமேஎன கைபிசைந்து நிற்கிறான் ஆபத்தான அவசரத்தின் பொல்லாத விசயம் சாபமிடுவதாகும். கோபத்தில் தன் மனைவி மக்கள் மற்றும் உடமைகள் மீதும் கேடான துஆவை செய்து விடுகிறான்.
'' மனிதன் நன்மையைக் கோரி பிராத்திப்பது போலவே தீமையைக் கோரியும் பிராத்திக்கிறான் ஏனெனில் மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்'' (17 ; 11)
'' உங்களுக்கு எதிராகஉங்கள் பிள்ளைகள்பொருட்களுக்கு எதிராக சாபமிட்டு விடாதீர்கள். அல்லாஹ் துஆவை ஏற்றுக்கொள்ளும் சமயமாக அது இருந்துவிட்டால் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட்டுவிடும்'' (நபிமொழி. முஸ்லிம்;3009) நாம் பார்க்கிறோம் அதிகமான வேதனைகள் வியாதிகள்பிள்ளைகளின் சீரழிவும் நமது கெட்ட துஆவினால்தான் சம்பவிக்கின்றன. ஆனால் இதை அதிகமாக நாம் விளங்கிக் கொள்வதில்லை. விழித்துக் கொள்வோர் உண்டா?

அவ்வாறே நாம் செய்த பிரார்த்தனைகள் உடனடியாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அவசரப்படுகிறோம்இதுவே அந்த பிரார்த்தனை அங்கிகரிக்கப்படாமல் போவதற்கு காரணமாகி விடுகிறது.
''உங்கள் பிரார்த்தனை அவசரப்படாதவரை - நானும் எனது இறைவனிடம் (பலமுறை) கேட்டுவிட்டேன் ஆனால் அவன் அதை ஏற்காமலே இருக்கிறான் என்று சொல்லாதவரை- உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்'' (நபிமொழி. முஸ்லிம்; 2735)

அவசரப்பட்டால் நம்முடைய பிரார்த்தனைகளை அல்லாஹ் நிராகரித்து விடுகிறான்  என்பது இந்த நபிமொழி சொல்லும் செய்தியாகும்.

இந்தக் காலத்தில் நிதானம் காட்டவேண்டிய பல விசயத்தில் அவசரம் காட்டியதன் விளைவு நிரந்தரமாக வேதனைப்படும்படி ஆகிவிடுகிறது. சமாதானமும் சுபிட்சமும் சுரக்கவேண்டிய இல்லத்தில் சண்டை சச்சரவுகள் முளைத்துவிடுகின்றன. முடிவில் அற்ப காரணங்களுக்காக தலாக் - விவாகரத்து சொல்லி விடுகிறோம்.இதனால் குடும்ப அமைப்பு சிதறி சிதைகிறது. அமைதி குலைகிறது. பிள்ளைகள் பாழாகி விடுகிறார்கள். கவலைகளும் துக்கமும் சுழ்ந்து கொள்கிறது. இதுவெல்லாம் அவசரத்தால் விளைந்த தீவினையல்லவாநல்லுணர்ச்சி பெருபவர்கள் உண்டா?
''அனுமதிக்கப்பட்டதில் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமானது தலாக் ஆகும்'' (நபிமொழி. அபூதாவூத்2178)

இன்றைய அவசர உலகில் சாலை விபத்துக்கள் தினசரி செய்திகளாகி விட்டது. 'வாகனத்தை மெதுவாக ஓட்டிச்செல். வீட்டில் மனைவி மக்கள் உனக்காக காத்திருக்கிறார்கள் '' என்பன போன்ற வேகத்தடுப்பு வாசகங்கள் வற்புறுத்தும் சாலை விதிகளைமதிக்காததால் சாவு விதிகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த மிக வேகவிபத்துகளால் வாகனமும் நொருங்கிஉடல் நசுங்கிஏராளமான உயிர் பலிகளும்மோசமான காயங்களும்நிலைபட்ட ஊனங்களும்ஏராளமான பொருள் நஷ்டங்களும்ஏற்பட்டு விடுகின்றது. இது அவசரத்தால் ஏற்பட்ட அவதி அல்லவா.

குறுக்கு வழியில் பணக்காரனாகிவிட வேண்டும் என்பதற்காக எந்த வழியிலாவது செல்வம் சேர்க்க வேண்டும் என்று அவசரப்படும் இந்தக் காலகட்டத்தில் ஹராமான - அநீதியான முறைகளையும் பொருட்படுத்தாமல் பொருளீட்ட முனைந்துள்ளனர்.
இதனால் மார்க்க உணர்வு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் மனித நேயமில்லாத,மார்க்க விரோத காரியங்கள்கொஞ்சம்கூட கூச்சமின்றி சமூகஅரங்கில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

"மக்களே! அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் (வாழ்வாதாரத்தை) அழகாக முறையாக தேடுங்கள். வாழ்வாதாரம் தாமதமனாலும் அதை முழுமையாகப் பெறாமல் எந்த ஒரு ஆத்மாவும் நிச்சயமாக மரணமாகாது. (செல்வத்தை) தேடுவதில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் ஹலாலை (நியாயமானதை) எடுத்துக்கொண்டு ஹராமான (அநியாயமான)தை விட்டு விடுங்கள்". (நபிமொழிஇப்னுமாஜா)

நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!!

என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி. 
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Monday, February 18, 2013

கீழக்கரை முதுபெரும் மார்க்க அறிஞர் மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் காலமானார்!கீழக்கரை குத்பா கமிட்டி முன்னால் தலைவரும்,கீழக்கரை பேரூராட்சி மன்றத்தின் முன்னால் தலைவரும்,இராமநாதபுர மாவட்ட ஷரீஅத் கோர்ட்டின் தலைவர்,கீழக்கரை முதுபெரும் மார்க்க அறிஞர் மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,வயது 92 (3-02-2013) ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் (4-02-2013) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை அமீருன்னிஸா பேகம் கபரஸ்தானில் நடைபெற்றது.

தமிழ் நாட்டில் இன்று வாழும் மார்க்க மேதைகளில் மிகச் சிறந்த அறிஞரும்,ஷரீஅத் கவுன்சில் உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவரும், மஙானீ  (மார்க்க சட்டக் கருவூலம்) போன்ற மிகப்பெரிய கிரதங்களை வெளியிட்டு,மார்க்க சேவைக்கு பெரிதும் பாடுபட்ட மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மறைவு தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்க்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சென்னையில் சுலைமான் ஆலிம் டிரஸ்ட் நிறுவி பல்வேறு உதவிகளை செய்து வந்த பெருமைக்குரியவர்,கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்,ஸதக்கத்துல்லாஹ் அப்பா போன்ற பெரிய மகான்களின் வழித்தோன்றல்களாக திகழ்ந்தவர்.

அவரது மறைவால் வாடுகின்ற அவர்களது குடும்பத்தினருக்கு,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள்.மறைந்த மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆச்செய்வோமாக.ஆமீன் !வஸ்ஸலாம்..

நன்றி ;- மணிச்சுடர் நாளிதழ்.


வெளியீடு ;- மன்பஈ ஆலிம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, February 10, 2013

ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனிதம் வாய்ந்த மௌலிது ஷரீஃப் துவக்கம்!

வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி  (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் இன்ஷா அல்லாஹ் வரும் ரபீவுல் ஆகிர் பிறை 1- (1-02-2014) சனிக்கிழமை மாலை முதல் தொடங்கி,பிறை 11- 4-1434 
(11-02-2014) செவ்வாய்க்கிழமை வரை 11 நாட்கள்,மலேசியத் தலைநகர் நமது மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெறும்,அஸர் தொழுகைக்குப்பின் மௌலிது ஷரீஃப்,மஃரிபு தொழுகைக்குப்பின் சிறப்பு துஆ ஓதப்படும்.இது போன்று உலகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்...

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, February 7, 2013

நபிகள் நாயகம் (ஸல்) பயோடேட்டா
நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் 
(BIO _DATA))
- தொகுப்பு மௌலானா மௌலவி . அப்துல் அஜீஸ் பாக்கவி
பெயர் : முஹம்மது
( பாட்டனார் சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவர் என்று பொருள் )

பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திங்கள் கிழமை
பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா
தகுதி:
1 - 40 வயதில் நபி
( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தேர்வு செய்யப்பட்ட மனிதர்)
2 - ரஸுல் - இறைத்தூதர் ( புதிய சட்ட அமைப்பு வழங்கப்பட்டவர்)
3 - இறுதித் தூதர்
கல்வி :எழுதப்படிக்க கற்காதவர்
தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்
(முஹம்மது நபி (ஸல்) ஆமினா அம்மாவின் கர்பத்தில் ஆறு மாத சிசுவாக இருக்கும் போது அப்துல்லாஹ் மரணமடைந்தார். )
தாயார் : ஆமினா பின்து வஹப்

(முஹம்மது நபியின் ஆறாவது வயதில் தாயார் ஆமினா இறையடி சோந்தார்)

பாட்டனார் (கள்) அப்துல் முத்தலிப் -பின் - ஹாஸிம் பின் - அப்து மனாப் பின்- குஸை
பெரிய தந்தை : அபூதாலிப்
முதல் திருமணம் 25 வயதில் 40 வயதுடைய விதவைப்பெண் கதீஜா ( ரலி)  அவர்களை திருமணம் செய்தார்கள். 25 ஆண்டு மணவாழ்விற்குப்பின் கதீஜா (ரலி) மரணமடைந்தார்கள்.

மற்ற திருமணங்கள் கதீஜா (ரலி) வின் மரணத்திற்குப்பின் அரசியல் / சமூகநல்லிணக்கம் சமய மேம்பாடு ஆகிய காரணங்களுக்காக அண்ணலார் மேலும் பல பெண்களை திருமணங்கள் செய்தார்கள். அதில் ஜைனப் பின்து ஹுசைமா நபிகளாரின் காலத்திலேயே இறந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்த போது அவருக்கு 9 மனைவியர் இருந்தனர். ( 2 )

மனைவியர் பெயர்கள்
1) சவ்தா (ரலி)
2) ஆயிஷா பின்து அபூபக்கர் (ரலி)
3) உம்முசல்மா (ரலி)
4) ஹப்ஸா பின்து உமர் (ரலி)
5) ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி)
6) ஜுவைய்யா (ரலி)
7) உம்மு ஹபீபா பின்து அபீசுப்யான் (ரலி)
8) ஸபிய்யா (ரலி)
9) மைமூனா (ரலி)
10) ஜைனப் பின்து ஹுசைமா (ரலி)


குழந்தைகள் ( 4 பெண் 3 ஆண் மொத்தம் 7 )
1) காஸிம் (ரலி)
2) ஜைனப் (ரலி) - கணவர் - அபுல் ஆஸ் (ரலி)
3) ருகய்யா (ரலி) - கணவர் - உஸ்மான் (ரலி)
4) உம்முகுல்ஸும் (ரலி) - கணவர் - உஸ்மான் (ரலி) 5) ஃபாத்திமா (ரலி) - கணவர் - அலி (ரலி)
6) தாஹி (ரலி) ( இவர்கள் 6 பேரும் கதீஜா (ரலி) அம்மையாருக்கு பிறந்தவர்கள். )

7) இபுறாகீம் (ரலி) ( இவர் மாரிய்யதுல் கிப்திய்யா ( ரலி ) அவர்களுக்கு பிறந்தவர். ஆண்குழந்தைகள் மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர் )
முக்கிய நிகழ்வுகள்
40 வயதில் ஹிரா மலைக்குகையில் வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை சந்தித்தார்கள் . முதல் வேத வசனம் அருளப்பட்டது

தாயிப் பயணம் - ஹிஜ்ரத்திற்கு முந்தைய ஆண்டு
தனது 52 வயதில் மிஃராஜ் விண்ணுலகப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இறைவனை சந்தித்து உரையாடினார்கள்.
தனது 53 வயதில் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் குடியேறினார்கள்.
இதுவே ஹிஜ்ரத் எனப்படுகிறது.
ஹிஜ்ரி 10 ம்ஆண்டு சுமார் 1 லட்சம் தோழர்களுடன் ஹஜ் செய்தார்கள். அதற்கடுத்த வருடம் பெருமானார் (ஸல் ) அவர்கள் இறந்து விட்ட காரணத்தால் அது விடை பெறும் ஹஜ் ( ஹஜ்ஜத்துல் வதா ) என அழைக்கப்படுகிறது. ( 3 )

போர்கள்
பல போர்கள் அவரது வாழ்க்கையின் மீது திணிக்கப்பட்டன. வலிய வந்து தொல்லை கொடுத்த அக்கிரமக்காரர்களை தடுக்கவும் உயிருக்கு நிகராகப் பாதுகாத்துப் போற்றி வரும் இஸ்லாமியப் பயிரைப் பாதுகாப்பதற்காகவும் மதீனாவில் அவர்  வாழ்ந்த 10 வருட காலங்களில் தானே 27 போர்களை மேற்கொள்ளவும் 38 படையெடுப்புகளுக்கு தனது தோழர்களை அனுப்பி வைக்கவும் நேர்ந்தது. ஆதிக்க விவாக்கமோ/ வலுவில் மதத்தை திணிப்பதோ அப்போர்களின் நோக்கமல்ல. .அப்போர்களின் போது மிக எச்சரிக்கையாக மனித உயிர்கள் வீண் பலியாகாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டார்கள் . இப்போர்களில் மொத்தம் உயிரிழந்தவர்கள் 1018 போர் மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் மேற்கொண்ட 27 படையெடுப்புகளில் 9 ல் மட்டுமே சண்டை நடந்தது. அவையாவன.
1 பத் ஹிஜ் 2
2 உஹத் ஹிஜ் 3
3 அகழ்யுத்தம் ஹிஜ் 5
4 பனூகுறைழா ஹிஜ் 5
5 முரைஸிஃ ஹிஜ் 5
6 கைபா ஹிஜ் 7
7 பத்ஹ் மக்கா ஹிஜ் 8
8 ஹுனைன் ஹிஜ் 8
9 தாயிப் ஹிஜ் 8


ஒப்பந்தங்கள்
அகபா ஒப்பந்தங்கள்
நபி (ஸல் அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை ரகசியமாக சந்தித்து மதீனா மக்கள் செய்து கொடுத்த சத்தியப்பிரமாணங்கள் அகபா உடன்படிக்கைகள் எனப்படும் . கி பி 620 முதலாம் அகபா உடன்படிக்கையின் போது மதீனா வாசிகள் ஆறு பேர் முஸ்லிம்களாயினர்.
621 இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது 12 பேர் முஸ்லிம்களாயினர் 622 மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது 70 பேர் முஸ்லிம்களாயினர்
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மதீனாவைச் சுற்றி இருந்த பனூகைன்காஃ - பனூன்னழீ - பனூ குறைழா ஆகிய மூன்று யூதக் குழுக்களுடனும் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ்ரத் 6 ம்ஆண்டு முஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுக்கும் இடையே நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் 3 அம்சங்களில் இரண்டு அம்சங்கள் ஒரு தரப்பாக / எதிரிகளுக்குச் சார்பாக இருந்த போதும் ( 4 )

10 வருடங்களுக்கு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்ற 3 வது அம்சத்திற்காக இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். இது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது/ எனவே இந்த ஒப்பந்தத்தை தெளிவான வெற்றி என அல்லாஹ அருள்மறையில் (1-48) வர்ணித்தான்.
அற்புதங்கள்
அல்லாஹ்  ஒருவரை நபி எனத் தேர்வு செய்யும் போது மக்களிடம் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக அவருக்கு சில அற்புதமான காரியங்களைச் செய்யும் ஆற்றலை வழங்குகிறான். ஒரு நபி நிகழ்த்திக்காட்டும் வழக்கத்திற்கு மாற்றமான செயல்களுக்கு முஃஜிஸா ( அற்புதம் ) எனப்படும். நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களது பிரதான பெரிய அற்புதம் குர்ஆன் எனும் இறை வேதமாகும்/ ஆயினும் வேறு பல அற்புதச் செயல்களும் நபி ( ஸல் ) அவாகளது வாழ்வில் நடந்ததுண்டு அவற்றில் முக்கியமானது. நபிப் பட்டம் பெற்ற 5 ம் ஆண்டு அண்ணலாரது விரலசைவுக்கு ஏற்ப சந்திரன் இரு கூறாகப் பிளந்து தனித்தனியே சென்று பிறகு ஒன்றானது.
சீர்திருத்தங்கள்
மது / சுதாட்டம் / விபச்சாரம் / திருட்டு ஆகியவற்றை ஒழித்தார்கள்.
பெண் சிசுக்கொலையை முற்றாகத் தடுத்து நிறுத்தினார்கள்.
ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத் தந்தார்கள்.
பெண்களுக்கு வாழ்வுரிமை /மண உரிமை மணவிலக்கு உமை எல்லாவற்றுக்கும் மேலாக சொத்துரிமையையும் பெற்றுத் தந்தார்கள்.
வட்டி / மோசடி/ கொலை /கொள்ளை ஆகிவற்றை தடுத்து நிறுத்தினார்கள்.

இனவெறி / நிறவெறி / ஜாதிக் கொடுமைகளை நீக்கி மனித சமத்துவம் நிலைநாட்டினார்கள்.
சாதனைகள்
தனது நாற்பதாவது வயதில் நபி எனப் பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து தொடாந்து 23 ஆண்டுகாலப் பிரச்சாரத்தின் காரணமாக சிலை வணக்கத்தில் மூழ்கிப்போயிருந்த அரபுலகத்தை ஏகத்துவ வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்து வந்தார்கள் . எந்த அளவுக்கென்றால் அதன் பிறகு அம்மக்கள் நெருப்பில் விழுவதை விடக் கொடிய விஷயமாக அதைக் கருதினார்கள்.
மூடப்பழக்க வழக்கங்களும் மூக்கத்தனமான நடைமுறைகளுமே வாழ்வாகக் கொண்டிருந்த அம்மக்களை மென்மைப் படுத்தி / அவர்களது அறிவாற்றலை வளர்த்து ஒரு சிறந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்களாக மாற்றினார்கள்.
சிறு சிறு குடும்பங்களாக வாழ்ந்து வந்த அரபுக்குலங்களை ஒரு தேசிய இனமாக உருவாக்கினார்கள்.

அரபுலகின் அறியப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக அரபு தீபகற்பம் / எமன் / பஹ்ரைன் உள்ளிட்ட பெரிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார்கள். உலகம் முழுமைக்கும் இறைவனின் இறுதித் தூதராக இருந்து முழுமையான இஸ்லாமிய நெறியை செயல்படுத்திக்காட்டினார்கள். இன்றைக்கு உலகில் வாழும் 3 ல் ஒரு பகுதியினர் நேரடியாகவும் மற்றும் பலர் மறைமுகமாகவும் அவரது வாக்கையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
தோழர்கள்
அன்னாரது தோழர்கள் சஹாபாக்கள் எனப்பட்டனர். தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறியோ முஹாஜி ( அகதி ) என்றும் மதீனாவைப் பிறப்பிடமாக கொண்ட தோழர்கள் அன்சார் ( உதவியாளர் ) என்றும் அழைக்கப்பட்டனர்.
முக்கியமான தோழர்கள்
1 அபூபக்கர் (ரலி)
2 உமர் (ரலி)
3 உஸ்மான் (ரலி)
4 அலி (ரலி)
5 சஃதுப்னு அபீவக்காஸ் (ரலி)
6 சயீதுப்னு ஜைத் (ரலி)
7 அபூ உபைதா (ரலி)
8 சுபை (ரலி)
9 தல்ஹா (ரலி)
10 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
உயர்ந்தோனை நோக்கி
தனது 63 வயதில் ஹிஜ்ரி 11 ரபீஉல் அவ்வல் 12 ம் தேதி ( கி பி 632 ) திஙகட்கிழமை பயணமானார்கள். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னை ஆயிஷா ( ரலி ) அவர்களின் அறையில் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இன்னா லில்லாஹி `வஇன்னா இலைஹி ராஜிஊன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் எங்கள் தலைவர்
அவருக்கு கீழ்பணிந்ததனால் எங்களுக்கு மரியாதை வந்தது 

( ஓரு அரபுப் பாடல் )
தொகுப்பு ;- மௌலானா மௌலவி அல்ஹாஜ் கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு