அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Monday, April 7, 2014

ஓட்டு யாருக்கு?


மக்களாட்சி நடைபெறுகிற ஜனநாயக நாட்டில் ஆட்சியாளரை ஓட்டு போட்டு தேர்வு செய்கிற பழக்கம் இருக்கிறது. கி.பி 7 - ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனுடைய ஆட்சியைப்பற்றி ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டிலே பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்ற முறைகளைப் பற்றி சொல்லப்பட்டிருந்ததது. “குட ஓலை” மூலம் அப்பொழுது தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

பொது இடத்திலே குடத்தை வைத்திருப்பார்கள். மக்கள் விரும்பக்கூடிய ஒருவரின் பெயரை எழுதி அதிலே போடுவார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கிற அந்த வேட்பாளர், கொலை, கொள்ளை, சூது, ஏமாற்றுதல், காமம், கற்பழிப்பு போன்ற வன்குற்றங்கள் செய்யாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடி ஆட்சி நடைபெற்ற அந்த காலத்திலேயே குடியாட்சியைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற ஒரு வியப்பான செய்தியை நாம் பார்க்கிறோம்.

ஓட்டு போடுவது ஜனநாயக நாட்டில் அது ஒரு ஜனநாயக கடமை. அதை நாம் ஒவ்வொருவரும் செலுத்தியே ஆக வேண்டும்.
இன்று ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறுகின்ற இந்த ஓட்டு முறை, ஷரீஅத்தினுடை [இஸ்லாமி] ய பார்வையில் அதனுடைய அந்தஸ்து என்ன என்று நாம் சிந்தித்துப் பார்த்தால், ஓட்டு போடுவது சாதாரணமான ஒரு விஷயமல்ல.யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது தெரிய வரும்.

முதலாவது ; ஓட்டு என்பது ஒரு அது அமானிதம். அந்த அமானிதத்தை அதற்குரியவர்களிடத்தில் கொடுத்து விட வேண்டும்.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

[நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட] அமானிதப் பொருட்களை அதற்குறியவர்களிடத்தில் நிச்சயமாக ஒப்படைத்து விடும்படி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடு கிறான். [4 ; 58]

قَالَ فَإِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَةَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் ஒரு நபித்தோழர் கியாமத் நாள் எப்பொழுது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அமானிதம் பாழடிக்கப்பட்டால்,வீணடிக்கப்பட்டால் கியாமத் நாளை எதிர்பார்த்துக் கொள் என்றார்கள். அமானிதம் எப்படி வீணாக்கப்படும்? என்று கேட்டார். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரம் அதற்குத் தகுதியில்லாதவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டால் கியாமத் நாளை எதிர்பார்த்துக் கொள் என்று சொன்னார்கள். [புகாரி ; 59]

ஆட்சி செய்கின்ற அதிகாரத்தை அதற்குத் தகுதியில்லாதவர் களிடத்தில் நாம் ஒப்படைக்கும் பொழுது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, இந்த உலகத்தில் குழப்பங்கள் தலைவிரித்தாடி, அது உலகத்தினுடைய அழிவிற்குக் காரணமாகி கியாமத்திற்கு அது வித்திடுகிறது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் தெளிவு படுத்துகிறார்கள்.

தகுதியானவர் யாரென்றால், அவரிடத்தில் அதற்கான தகுதியும், நேர்மையும் இருக்க வேண்டும். தகுதி இருந்தால் மட்டும் போதாது. நேர்மையும் அவரிடத்தில் இருக்க வேண்டும்.

إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ

நிச்சயமாக நம்பிக்கையுள்ள பலசாலியை நீங்கள் கூலிக்கு [பொறுப்புக்கு] அமர்த்திக் கொள்வது மிக்க நல்லது. [28 ; 26]

இந்த வசனத்தில் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதற்கு அவரிடம் இரண்டு விஷயம் இருக்க வேண்டும். 

ஒன்று ; தகுதி. பலசாலி என்று வசனத்தில் இதைத்தான் சொல்லப்பட்டிருக் கிறது. 

இரண்டாவது ; நேர்மை இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிமிடத்தில் ஒரு பதவி,பொறுப்பு கொடுக்கப்பட்டு, அவர் பொறுப்புகளை நியமிக்கக்கூடிய அந்தஸ்தில் இருக்கிறார் என்று சொன்னால், தகுதியானவரையும் நேர்மையானவரையும் தான் நியமிக்க வேண்டும். 

அவ்வாறின்றி தனக்கு வேண்டியவர், தனக்கு நெருக்கமானவர், தன் நண்பர்,உறவினர் என்ற காரணங்களுக்காக தகுதியில்லாதவரை தேர்ந்தெடுத்தாலோ, வேறொருவர் தகுதியானவராக இருக்கும் போது, அவரை விட தகுதி குறைந்த ஒருவரை தேர்ந்தெடுத்தாலோ அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய சாபக்கேடு மட்டுமல்ல அவர் அல்லாஹ்வையும் ஏமாற்றி விட்டார். இறைத்தூதரையும் ஏமாற்றி விட்டார். முஸ்லிம்களையும் ஏமாற்றி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். இந்த அடிப்படையில் ஓட்டு என்பது ஒரு அமானிம். அதை அதற்குரிய தகுதியான, நம்பிக்கையான ஒரு வேட்பாளருக்கு  அளிக்க வேண்டும்.

இரண்டாவது ; ஓட்டு என்பது ஒரு சிபாரிசு. நாம் ஒருவருக்கு ஓட்டு போடுகிறோம் என்றால், இவர் ஆட்சிக்குத் தகுதியானவர் என்று சிபாரிசு செய்கிறோம் என்று பொருள்.

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் ; எவர் நல்ல சிபாரிசு செய்வாரோ அதிலே [அந்த நன்மையிலே] அவருக்கும் பங்கு கிடைக்கும். எவர் தீய [வருக்கும், அநியாயம் செய்யக் கூடியவருக்கும் ஓட்டளித்து] சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதில் [பாவத்தில்] பங்களிப்பு கிடைக்கும். [4 ; 85]

இன்று பணம் கொடுத்து ஓட்டு வாங்கக் கூடிய முறையிருக்கிறது. அப்படி ஓட்டு போடுவதற்கு பணம் வாங்கலாமா? என்றால், கண்மணி நாயகம் (ஸல்)  அதற்கும் பதில் சொல்கிறார்கள்.

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً فَأَهْدَى لَهُ هَدِيَّةً فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ الرِّبَا

ஒருவர் யாருக்காவது சிபாரிசு செய்து, சிபாரிசு செய்ததற்காக அவருக்கு ஹதியா [அன்பளிப்பு] அளிக்கப்பட்டு அதை அவர் ஏற்றுக் கொண்டால், அவர் மிக பயங்கரமான வட்டியை வாங்கி கொண்டார் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். [முஸ்னத் அஹ்மது]

மூன்றாவது ; ஓட்டு என்பது சாட்சி சொல்வதாகும். சாட்சி சொல்வது பொய் சாட்சியாக இருக்கக் கூடாது உண்மையைத் தான் சொல்ல வேண்டும்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلَاثًا قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ أَلَا وَقَوْلُ الزُّورِ قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ

உங்களுக்கு பாவத்திலேயே மிகப் பெரிய பாவம் எது என்று சொல்லட்டுமா? என்று கேட்டார்கள் அண்ணல் (ஸல்) அவர்கள். சொல்லுங்கள் நாயகமே! என்று நபித்தோழர்கள் சொன்ன பொழுது பாவத்திலேயே பெரிய பாவத்தை பட்டியலிடுகிறார்கள்.

1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.
2.பெற்றோருக்கு மாறு செய்வது.
3.அறிந்து கொள்ளுங்கள்...... பொய் சாட்சி சொல்வது.... பொய் சாட்சி சொல்வது........ பொய் சாட்சி சொல்வது.. என்று மூன்று முறை நபி (ஸல்) சொன்னார்கள். [புகாரி]

தகுதியில்லாத ஒருவரை “இவர் தகுதியானவர்” தான் என்று ஓட்டளிக்கும் பொழுது அது பொய் சாட்சியாக மாறி விடுகிறது. அது பாவத்திலேயே மிகப்பெரிய பாவமாகவும் ஆகி விடுகிறது. எனவே நம்முடைய பொறுப்பை உணர்ந்து நம்முடைய கடமையை உணர்ந்து தகுதியானவரை,நேர்மையானவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கடமையும் ஒரு கடப்பாடும் நமக்கிருக்கிறது.

கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகத்திலே சிறந்த ஆட்சி முறையை நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறார்கள். இந்த உலகத்திலே யாருடைய ஆட்சி தேவை என்று கேட்கப்பட்ட பொழுது உலகத் தலைவர்கள் சொன்ன ஒரே பதில் கலீபா சித்தீக்குல் அக்பர் அபுக்கர் [ரலி] , கலீபா உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி வேண்டும் என்று தான். அந்த ஆட்சியுடைய தன்மை, அதனுடைய நியாயம் இன்றைய ஆட்சியில் வர வேண்டும்.

மகாத்மா காந்தி அவர்கள் கூட இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எது மாதிரியான ஆட்சி இந்தியாவில் வேண்டும் என்று கேட்ட போது இந்த இரண்டு கலீஃபாக்களைத் தான் உதாரணப் புருஷர்களாக முன்னிலைப் படுத்தினார்கள்.அவதாரப் புருஷர் களையோ,காவியத் தலைவர்களையோ அல்ல.அத்தகைய கலீஃபாக்களின் ஆட்சி இன்றைய காலத்தில் வர வேண்டும்.

ஆட்சி செய்யக்கூடிய ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் அதிலே பொதிந்திருக்கிறது. இன்று அரபு நாடுகளிலே புரட்சியும்,கிளர்ச்சியும் வெடித்து மிகப்பெரிய போராட்டமாக அந்நாடு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், ஆட்சியாளர்கள் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

ஆட்சியாளர் தன்னலம் கருதாதவராக, பொது நல சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்கள் சொன்னார்கள் ;
 “நபிமார்களாகிய எங்களைப் பொருத்த வரைக்கும் எங்களுடைய சொத்துக்கு வேறு யாரும் வாரிசாக முடியாது. நாங்களும் வேறு யாருக்கும் வாரிசாக வர மாட்டோம் நாங்கள் விட்டு சென்றதெல்லாம் தர்மம்” [புகாரி]

அந்த நபிமார்களுடைய வழியில் வந்தவர்கள் தான் கலீபாக்கள். நபிமார்கள் அல்லாதவர்களுக்கு இந்த சட்டம் இல்லை என்றாலும் கலீபாக்கள் முன்மாதிரியான ஆட்சியை இந்த உலகத்திலே நடைமுறைபடுத்தி விட்டுச் சென்றார்கள்.

சித்தீக்குல் அக்பர் அபூபக்கர் [ரலி] அவர்கள் கிலாஃபத்தினுடை ஆட்சியைப் பொறுப்பேற்ற கொஞ்ச நேரத்திலேயே தலையில் துணி மூட்டையை வைத்துக் கொண்டு பஜாருக்கு கிளம்பி விட்டார்கள். எங்கே செல்கின்றீர்கள்? என்று கேட்ட போது, நான் வயிற்றுப் பிழைப்பைப் பார்க்க வேண்டாமா...?. என் குடும்பத்தை கவனிக்க வேண்டாமா....? என்றார்கள். 

அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் சொன்னார்கள் ; முஸ்லிம் களெல்லாம் உங்களிடத்திலே ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். நீங்கள் உங்களைப் பார்க்கச் சென்று விட்டால் இந்த நாட்டைப் பாதுகாப்பது யார்? எனவே நீங்கள் வாருங்கள். உங்களுக்கு நியாயமான சம்பளத்தை பைத்துல் மாலி[அரசு நிதியி] லிருந்து ஏற்பாடு செய்யலாம் என்று கூறி, பின்பு பைத்துல் மாலிலிருந்து நியாயமான சம்பளம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஒரு நாள் கலீஃபா அவர்களுடைய மனைவி பிள்ளைகளுக்கு இனிப்புப் பலகாரம் செய்வதற்கு செலவு பணத்தில் சற்றுக் கூடுதலாகக் கேட்ட போது எனக்கு அரசு அளிக்கும் சம்பளம் இவ்வளவு தான்.இதற்கு மேல் எங்கே போவது என்று கை விரித்து விட்டார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இனிப்புப் பலகாரம் கலீஃபா அவர்களுக்கு முன்பு வைக்கப்பட்ட பொழுது இதற்கு ஏது பணம் எனக் கேட்டார்கள்.நீங்கள் தரும் செலவுத் தொகையிலிருந்து ஒவ்வொரு நாளும் கொஞசம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அதில் சேர்ந்த தொகையில் இதை செய்தேன் என்று பதிலளித்தார்கள்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு மிச்சப்படுத்தினாய் என்று கலீஃபா அவர்கள் கேட்க இவ்வளவு மிச்சப்படுத்தினேன் என்று அம்மையார் பதில் சொன்னார்கள்.அப்படியென்றால் இவ்வளவு தொகை நமது செலவுத் தொகையை விட கூடுதலாக இருக்கிறது.அதனால் தானே மிச்சப்படுத்த முடிந்தது. எனவே இவ்வளவு தொகையை அடுத்த மாத சம்பளத்திலிருந்து குறைத்துக் கொள்ளும்படி அரசு கருவூலக் காப்பாளருக்கு கடிதம் எழுதினார்கள்.அந்தளவு நீதியும் நேர்மையும் மிகுந்த ஆட்சி அவர்களுடைய ஆட்சி.

நியாயமான செலவுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் சம்பளமாகப் பெற்றார்கள்.ஆனால் அந்த நியாயமான சம்பளத்தையும் கூட அவர்கள் தங்களது மரண சமயத்தில், தான் எவ்வளவு நிதியை பைத்துல் மாலிலிருந்து வாங்கினார்களோ அதை கணக்குப் பார்த்து சொந்த வருமானத்தி லிருந்து அந்த பணத்தை பைத்துல் மாலிலேயே திருப்பி ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள்.

இப்படிப் பட்டவர்களைத் தான் நாம் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ்வுடைய பயம் இருக்க வேண்டும். நாம் செய்கின்ற ஒவ்வொன்றிற்கும் அல்லாஹ் விடத்திலே கணக்குக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும்.

ஒரு முறை பைத்துல் மாலுடைய ஒட்டகத்தை கண்காணிக் கிறார்கள் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள்.  எண்ணிக்கையிலே ஒரு ஒட்டகம் குறைந்தது. அந்த ஒட்டகம் எங்கே என்று அதைத் தேடுவதற்காக  அவர்களே புறப்பட்டுச் சென்றார்கள். கலீபாவை பின் தொடர்ந்து சென்ற அதிகாரிகள் ; கலீபா அவர்களே! நாங்கள் அதிகாரிகள் இருக்கிறோம். நீங்கள் ஆணையிடுங்கள். நாங்கள் சென்று தேடுகிறோம். நீங்கள் ஏன் செல்ல வேண்டும்? என்று கேட்ட பொழுது, இல்லை நான் தான் தேட வேண்டும். ஏனென்றால் இதைப் பற்றி அல்லாஹ் மறுமை நாளிலே என்னிடம் தான் கேள்வி கேட்பான்.உங்களிடத்திலே கேட்க மாட்டான் என்றார்கள்.அந்த பயம் அவர்களிடத்திலே இருந்த காரணத்தினால் தான் நீதியும் நேர்மையும் இருந்தது.

புராத் நதி ஓரத்திலே ஓநாய் ஒன்று ஒரு ஆட்டைப் பிடித்தது என்றால், அது குறித்தும் என்னிடத்திலே அல்லாஹ்வுடைய விசானை இருக்கிறது என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் சொன்னார் களே அந்த பயமும், பொறுப்பும் ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும்.

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரலி) அவர்களுடைய காலத்தில் பெருநாள் தினத்திலே சிறுவர்களெல்லாம் புத்தாடை அணிந்திருக் கிறார்கள். ஆனால் கலீஃபாவுடைய மகன் சிறு பிள்ளை பழைய ஆடையை உடுத்தியிருக்கிறான். மற்ற சின்னப் பிள்ளைகளைப் பார்க்கிற பொழுது அவனுக்கும் ஆசை வருகிறது.

தந்தையிடத்தில் சென்று எனக்கும் புத்தாடை வாங்கித் தாருங்கள் எனக் கேட்கிறான், என்னிடத்தில் பணமில்லையப்பா.... எப்படி வாங்கித் தருவேன்? என்று கலீஃபா உமர் பின் அப்துல் அஜீஸ் [ரலி] சொல்கிறார்கள். அந்தப் பையன் திரும்பத் திரும்ப கேட்டு தேம்பித் தேம்பி அழுகிறான். பையனுடைய அழுகையை நிறுத்த முடியாமல் ரொம்ப இரக்கப்பட்ட கலீஃபா அவர்கள், அரசு கருவூல காப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள் ;

என் பையனுக்கு உடை எடுக்க வேண்டும்.அதற்காக கடன் தாருங்கள். அடுத்த மாத சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள் என்று.
அங்கே அந்த கேஷியரிடமிருந்து ; கலீபா அவர்களே! கடன் தருகிறேன். ஆனால் அடுத்த மாதம் வரை நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் என்பதற்கு நீங்கள் கேரண்டி [உத்தரவாதம்] தர வேண்டும். தந்தால் நான் உங்களுக்கு கடன் தருகிறேன் என்று சொல்லி பதில் வந்தது.

அந்த கிலாபத்தினுடைய ஆட்சி இந்த உலகத்திலே நடைமுறைப் படுத்தப்பட்டு, நீதியும் நேர்மையும் இருந்தால் மக்களாட்சி என்ற தத்துவம் உண்மையானதாக மிளிரும்.

அல்லாஹு ஹக் சுப்ஹானஹு வதஆலா அப்படிப்பட்ட நேர்மையையும் அப்படிப்பட்ட இறையச்சத்தையும் நம்முடைய ஆட்சியாளர்களுக்கு தந்தருள் புரிவானாக.

உலகெங்கிலும் இஸ்லாமியர் வாழ்கிற இடங்களில் முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களையும் ஐக்கியப்படுத்தக்கூடிய  தன்னலம் கருதாத தலைவர்களை அல்லாஹ் ஏற்படுத்தித் தருவானாக! முஸ்லிம்களை ஐக்கியப்படுத்துவானாக! ஆமீன்.

இப்பொழுது நடைபெறுகிற பாராளுமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்?

வகுப்பு வாதம்,ஊழல் இந்த இரண்டும் நமது நாட்டைப் பீடித்திருக்கும் பிணியாகும்.இதில் வகுப்பு வாதம் ஆட்கொல்லி வியாதியாகும். 

இப்போதைக்கு இந்த இரண்டு நோயும் இல்லாத கட்சி ஆம்ஆதமி கட்சி.அந்த கட்சி போட்டியிடாத இடங்களில் தி.மு.க கூட்டனி.


அ.தி.மு.க என்பது பி.ஜே.பி -2 என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றபடி சிந்தித்து செயல்படுவீர். 

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு