அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Thursday, December 18, 2014

முதல் மீலாது மாநாடு !!!இந்த உலகில் புகழ் பெற்று விளங்கியவர்கள் எல்லாம் புகழோடு பிறந்தார்களா? என்றால் இல்லை எனலாம்.

ஆனால் அகிலம் சிறக்க வந்த அண்ணலம்பெருமானார் ஸல் அவர்கள் நல்ல பெயரோடும் புகழோடும் பிறந்தார்கள் என்பது மாத்திரமல்ல, பிறப்பதற்கு முன்பும் நல்ல புகழ் பெற்றிருந்தார்கள். நபி ஸல் அவர்களின் வருகை குறித்து எல்லா வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த படியால் நபிகளாரின் வருகையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது.

வேதக்காரர்கள் நபி பிறப்பதற்கு முன்பே அவர்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கினர்.
وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا

தங்களுக்கு நெருக்கடியான தருணங்களில் அந்த நபியின் பொருட்டினால் தங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ்விடம் தேடிக்கொண்டிருந்தனர். அல்குர்ஆன் 2 89

பொதுவாக,பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு எடுப்பது தான் வழக்கம். ஆனால் ஜெனிப்பதற்கு முன்பே ஜனன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கண்மனி நாயகம் காதமுன் நபிய்யீன் [ஸல்] அவர்களுக்கு மட்டும் தான். அதுவும் ஆலமுல் அர்வாஹில் – ஆத்ம உலகில் வைத்து அகிலம் தோன்றுவதற்கு முன்னர் அண்ணல் நபி நாயகம் [ஸல்] அவர்களுக்கு முதல் மீலாது மாநாடு நடத்தப்பட்டது.

அந்த மீலாது மாநாட்டை நடத்தியவன், எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா வாகும். அந்த மாநாட்டில் கலந்து பங்கேற்றவர்கள், இவ்வுலகை திருத்த வந்த தீர்க்கதரிசிகளான இலட்சத்திற்கும் அதிகமான நபிமார்கள். மாநாட்டு சிறப்பு சொற்பொழிவு, அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ் தஆலா நிகழ்த்தினான்.

அந்த மீலாது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் :-
"இப்பிரபஞ்சத்தில் நபிமார்களாகிய உங்களுக்கு வேதமும் ஞானமும் வழங்கி,பிறகு இந்த நபி ஸல் அவர்கள் உங்களிடம் வருகை தரும்போது நீங்கள் அனைவரும் அந்த நபியை விசுவாசிக்க வேண்டும்.அவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்க வேண்டும்"
இதற்கு பிறகு இந்த தீர்மானத்தை அங்கிருந்த அனைத்து நபிமார்களும் வழிமொழிந்தார்கள்.இது வின்னில் நடந்த மீலாது விழா.

இனி இந்த மண்ணில் நடக்கப்போகிற எல்லா மீலாது விழா மட்டுமல்ல எல்லா நிகழ்வுக்கும் அஸ்திவாரமாக அமைந்த ஆதார நிகழ்ச்சி.

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آَتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

"அல்லாஹ் நபிமார்களிடம் வாக்குறுதி வாங்கினான்.வேதத்தையும் ஞானத்தையும் நான் உங்களுக்கு கொடுத்து பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் [நபி ஸல்] உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்.[இதனை] நீங்கள் உறுதி படுத்தினீரிகளா? இதன் மீது எனது வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா என்று அல்லாஹ் கேட்டான்.[அதற்கு] அவர்கள்,நாங்கள் [அதனை] உறுதிபடுத்துகிறோம் என்று கூறினார்கள்.[இதற்கு] நீங்கள் சாட்சியாக இருங்கள். நானும் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கிறேன்.
எனவே இதற்குப் பின்னர் எவரேனும் புறக்கனித்தால் நிச்சயமாக அவர் தாம் பாவிகள்" என்று அல்லாஹ் கூறினான். [அல்குர்ஆன் 3 81,82]

قال علي بن أبي طالب وابن عمه عبد الله بن عباس، رضي الله عنهما: ما بعث الله نبيا من الأنبياء إلا أخذ عليه الميثاق، لئن بَعَث محمدًا وهو حَيّ ليؤمنن به ولينصرنه، وأمَرَه أن يأخذ الميثاق على أمته: لئن بعث محمد [صلى الله عليه وسلم] 
وهم أحياء ليؤمِنُنَّ به ولينصرُنَّه.

இந்த வசனத்திற்கு விளக்கமளித்த ஹள்ரத் அலி [ரலி] அவர்கள்,ஹள்ரத் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் கூறினார்கள் :-  எல்லா நபிமார்களிடமும் நமது நாயகம் முஹம்மது முஸ்தபா [ஸல்] அவர்களைப் பற்றி அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான்.நபியவர்கள் உங்கள் காலத்தில் வந்தால் நீங்கள் அவர்களை விசுவாசித்து உதவி செய்ய வேண்டும்.மேலும் உங்கள் சமூகத்தாரிடமும் இதைப்பற்றி பிரஸ்தாபிக்க வேண்டும். [இப்னு கசீர்]

இவ்விதம் வாக்குறுதி வாங்காத எந்த நபியும் இல்லை.இதன் படி எல்லா நபிமார்களும் தங்கள் சமூகத்தாரிடம் இறுதி நபியின் வருகையைப்பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை விசுவாசித்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வாக்குறுதி வாங்கினார்கள்.

பெருமானார் ஸல் அவர்களின் உம்மத்தில் நாம் மட்டுமல்ல.முந்தைய நபிமார்களும் அவர்களின் உம்மத்துகளும் அடங்குவர்.எனவே நமது நாயகம் ஸல் அவர்கள் நமக்கு மட்டுமல்ல நபிமார்களுக்கும் நபியாக இருக்கிறார்கள்.

ஆகவே தான் ஒரு ஹதீஸில் ;

والذي نفسي بيده ! لو كان موسى حيا ما وسعه إلا أن يتبعني

"இன்று மூஸா நபி [அலை] அவர்கள் உயிருடன் இருந்தால் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை " என்று நபி [ஸல்] அவர்கள் அருளினார்கள். [முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா]
இன்னொரு நபிமொழியில் ; "ஈசா நபி [அலை] அவர்கள் இறுதி காலத்தில் இறங்கினால் அவர்கள் குர்ஆனையும் உங்களுடைய நபியின் சட்டங்களையும் தான் அமல் செய்வார்கள்" வந்துள்ளது.
இதன் மூலம் தெரிய வரும் உண்மைகள் ; நாயகம் [ஸல்] அவர்களின் நபித்துவம் சர்வதேச அம்சம் கொண்டது.அவர்களின் ஷரீஅத்தில் முந்தைய எல்லா நபிமார்களின் ஷரீஅத்தும் மூழ்கி விடும் என்பதாகும்.

மேலும்  وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً

"நான் சர்வதேச மக்களுக்கு ஒட்டு மொத்த நபியாக அனுப்பப் பட்டுள்ளேன்" [புகாரி,முஸ்லிம்] என்று நபிகளார் சொன்னது, அவர்களின் காலத்திலிருந்து கியாமத் வரை உள்ள எதிர் காலத்தை நோக்கி நீளும் நபித்துவத்தை மட்டுமல்ல.அவர்களின் நபித்துக் காலம்,அதை விடவும் ரொம்ப விசாலமானது.கடந்த காலத்தையும் கடந்து ஆதிபிதா ஆதம் நபி [அலை] அவர்களின் நபித்துவத்திற்கும முந்தி தொடங்குகிறது.
ஒரு நபிமொழியில்,

عن عبد الله بن شقيق أن رجلا سأل النبي (ص) : متى كنت نبيا ؟ قال : 
كنت نبيا وآدم بين الروح والجسد.

 "ஆதம் நபி [அலை] அவர்கள் ஜடத்திற்கும் ஆன்மாவிற்கும் இடையில் இருக்கும்போதே நான் நபியாக இருந்தேன்" என வந்துள்ளது. [முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா]

மஹ்ஷர் பெருவெளியில் ஷஃபாஅத்தே குப்ரா – மாபெரும் சிபாரிசு செய்யும் மகத்தான வாய்ப்பு, எல்லா நபிமார்களும் அவர்களின் "லிவாவுல் ஹம்து" என்னும் புகழ் கொடியின் கீழ் ஒன்று கூடுவது,மிஃராஜ் இரவு சம்பவத்தில் பைத்துல் முகத்தஸில் வைத்து எல்லா நபிமார்களுக்கும் இமாமத் செய்த சிறப்பு இதுவெல்லாம் நாயகத்தின் சர்வதேச நபித்துவத் திற்கும் மாபெரும் தலைமைத் துவத்திற்கும் தகுந்த சான்றுகளாகும்.

மேலும் இது அனைத்துலக சமூகத்தை ஈர்க்கும் ஒரு ராஜ தந்திர நிகழ்வாகும். நாம் நபியாக ஏற்றுக் கொண்டிருக்கும் நபிமார்களே இந்த நபி முஹம்மது [ஸல்] அவர்களை நபியாக விசுவாசித்து அவர்களின் தலைமையை ஒப்புக் கொள்கிறார்கள் என்றால், நாம் நமது நபியைப் பின்பற்றி, இந்த இறுதி நபியை விசுவாசித்து, இஸ்லாத்தை ஏற்போம் என்று எல்லா சமூகமும் இஸ்லாத்தை ஏற்க எளிதில் முன் வருவார்கள்.

"இஸ்லாத்தை ஏற்பது தங்களது நபிக்கு எதிரானதல்ல.ஆதரவானதே!" என்பதை புரிகிற போது இடையில் இருக்கிற இருக்கம் அகன்று,அகத்தில் இடம்பிடித்திருந்த  வேறுபாடுகள் விலகி மனதளவில் இருந்த தடைகளும் நீங்கி விடுகிறது. நபிமார்களிடத்தில் அல்லஹ் வாங்கிய உறுதி மொழி அந்த நபிமர்களை நம்பியிருக்கும் சமூகத்தாரின் மனதில், இறுதி நபியை ஏற்பதில் இருக்கும் தயக்கத்தைப் போக்கி விடுவதற்கு மனோதத்துவ ரீதியில் நடைபெற்ற சிறந்ததோர் சிகிச்சையாகும்.

இத்தகு மீலாது விழாக்கள் ஏன் நடத்தப்பட வேண்டும் என்றால், நபியின் மாண்பை எடுத்து இயம்புவதோடு எவ்வளவு தான் நபி [ஸல்] அவர்கள் ஏற்றம் பெற்றாலும், "அவர்கள் அல்லாஹ் அல்ல" என்பதை இந்த மீலாது விழா பறைசாட்டுகிறது.

காரணம் அல்லாஹ்வுக்கு மீலாது – பிறப்பு இல்லை. நபி [ஸல்] அவர்களுக்கு மீலாது விழா எடுப்பதன் மூலம் அவர்களின் பிறப்பை – சிறப்பை எடுத்துச் சொல்வதன் மூலம் – அவர்கள் மனிதப்பிறவி தான். கடவுளல்ல என்பதை தெளிவு படுத்துகிறோம்.
இந்த வகையில் பார்த்தால், மீலாது விழாக்கள் ஷிர்க்கை ஒழித்து ஏகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

பாலஸ்தீன் யூதர்களுக்கு இரசூலாக – இறைத்தூதராக அனுப்பப்பட்ட நபி ஈசா [அலை] என்ற ஏசுவை உலகின் எல்லா இடத்திற்கு எடுத்துச் சென்று விட்டது கிருஸ்துவ சமூகம். ஆனால் இன்டர்நேஷனல் நபியாக எல்லா காலத்துக்கும் எல்லா கண்டத்திற்கும் நபியாக இறைத்தூதராக அனுப்பப்பட்ட அஹ்மது நபி, தாஹா நபி, முஹம்மது [ஸல்] அவர்களை – அவர்கள் கொண்டு வந்த செய்தியை எவ்வளவு தூரம் முஸ்லிம்களாகிய நாம் கொண்டு சென்றிருக்கிறோம்? இதுதான் மீலாது செய்தியும் சிந்தனையும். சிந்திப்போமோ? செயல்படுவோமோ?

 என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு