மீலாது விழாவின் அடிப்படை நோக்கங்கள்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!! 

மீலாத் விழாவின் அடிப்படை நோக்கங்கள் :

மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும்.

இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும். 

அல்லாஹுதஆலா கூறுகிறான்:
"அல்லாஹுதஆலா உங்களுக்கு செய்த நிஹ்மத்தை நினைவு கூறுங்கள்." இவ்வசனத்தின் மூலமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். காரணம் அருட்கொடைகளிலே மிகச் சிறந்த அருட்கொடை இறுதி தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஆவார்கள். 

மற்றுமொரு ஆயத்தில் அல்லாஹ் குறிப்பிடும் போது:
"உங்களுடைய அல்லாஹ் அளித்த நிஹ்மத்துகளை சொல்லிக்காட்டுங்கள்." இவ்வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் எங்களுக்கு அளித்த எத்தனையோ விதமான அருட்கொடைகளை நாங்கள் சொல்லி காட்டுகிறோம். எனவே அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வருகையே. எனவே அவர்களின் வருகையை கொண்டாடுவது எவ்வாறு விலக்கப்பட்ட விடயம் என்று கூற முடியும்? 

மற்றொரு ஆயத்தில் அல்லாஹு த ஆலா குறிப்பிடுகின்றான்:
"அல்லாஹு த ஆலா முஹ்மின்களின் மீது மாபெரும் உபகாரத்தை செய்துள்ளான். எப்பொழுதெனில் அவர்களில் ஒரு ரசூலை அனுப்பிய போது." இவ்வாயத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது. 

எனவே நபிமார்களுடைய பிறப்பு பற்றி எடுத்து சொல்லுவது என்பது இறை வழிமுறையில் நின்றும் உள்ளது என்பது தெளிவாகின்றது. அது மட்டும் இன்றி அல்லாஹு தஆலா குர் ஆனிலே பல இடங்களில் நபிமார்களுடைய பிறப்புகளை பற்றி கூறுகிறான் உதாரணமாக: நபி ஈஸா அலைஹி ஸலாம் அவர்களுடைய பிறப்பையும் அச்சமயம் ஏற்பட்ட அற்புதங்களையும், அவர்களுடைய வாழ்கையில் நடந்த சம்பவங்களையும் அதே போன்று நபி மூசா அலைஹி ஸலாம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பு, வளர்ந்த முறை, நபித்துவம் பெறல் போன்ற அனைத்தையும் அல்லாஹு சிறப்பான முறையில் குறிப்பிடுகின்றான். 

இதே அமலைதான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் இது இறை வழிமுறை. இறை வழிமுறையை ஏற்று நடப்பது தான் நல்லடியார்களின் பண்பு. அது மட்டுமன்றி நபி ஈஸா, நபி மூசா அலைஹி ஸலாம் அன்னவர்களுடைய பிறப்பை எடுத்து சொல்வதே மிக உன்னதமான செயலாயின் நபிமார்களிலே இறுதியானவரும், மிக உயர்வானவருமாகிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை எடுத்துக் கூறுவது மிகவும் சிறப்பானது. 

நபியவர்களும் ஸஹாபா பெருமக்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் நிகழ்வுகளை ஒன்று கூடி பேசிக் கொண்டு இருப்பார்கள். அவ்வேளையில் யா ரசூலல்லாஹ்!! உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள். என சஹாபாக்கள் கூறுவார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள். என இமாம் ஹாகிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கின்றார்கள். (பைலுள் கதீர் - ஷரஹு ஜாமிஉஸ்ஷகீர்)

இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. 

மாறாக மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும். எப்படி என்றால்,
"அல்லாஹ்வுடைய "பள்ல்" " ரஹ்மத்" தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்." என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (10 - 58)

மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" " ரஹ்மத்" என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். 

ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும். 

எனவே இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஹுமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக!

நன்றி ;- MAIL OF ISLAM .


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு