ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் -- முதல் பாகம்



ஒடுக்கம் என்பது பழம் தமிழ்ச் சொல்லாகும்.இது 
பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்பட்ட போதினும் 
முக்கியமாக முடிவு,இறுதி என்ற பொருள்களிலேயே 
பயன்படுத்தப் படுகிறது..சிலப்பதிகாரத்திலும்

ஒடுங்கங் கூறா ருயர்ந்தோ ருண்மையின்
முடிந்த கேள்வி முழுதுணர்ந் தோரே

என்ற அடிகளில் முடிவு அல்லது இறுதி என்ற 
பொருளிலேயே இது .பயன்படுத்தப் பட்டுள்ளது

இதே பொருளில் அல்லாஹ்வின் இறுதித் தூதுவராம் 
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்களை ஒடுக்கத்து நபி என்றும் நியாயத் தீர்ப்பு 
நாளை ஒடுக்கத்து நாள் என்றும் ஒருவரின் இறப்பு  
நேரத்தை ஒடுக்கம் என்றும் கூறுவர்.

ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் கிழமைக்கு 
ஒடுக்கத்துப் புதன் என்று பெயர்.
.இதற்கு உர்தூவில் ஆகி ஷம்பா என்று கூறுவர்.ஹூத் 
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினர் மீது 
அல்லாஹ்வின் முனிவு ஏற்பட்டு அதன் விளைவாக, 
இதற்கு  முன்னுள்ள புதன் கிழமையிலிருந்து இப்புதன் 
கிழமை வரையில் கடுங்காற்று வீசி அவர்களை அழித்தொழித்தது.
அந்த காற்று வந்த  நாளை ''யவ்முந் நஹ்ஸ் ( கெட்ட நாள் ) 
என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

இதனை ஆதாரமாகக் கொண்டு,ஸஃபர் மாதத்தின்  கடைசிப் புதன் 
கிழமையை  மட்டுமல்லாது ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன் கிழமையையும் நஹ்ஸுடைய நாள் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இது தீயோர்களான இறை மறுப்பாளர்களுக்குத்தான் 
தீய நாளே யன்றி நல்லோர்களான இறை நம்பிக்கையாளர்களுக்கு 
நல்ல நாள்.விடுதலை நல்கிய நாளாகும்.தவிர '' புதன் கிழமை குழிப்பதும்,அலுவல்களை துவங்குவதும் புகழத் தக்கதாகும்.
அன்று தான் சுவர்க்க நீர் மற்ற நீர்களுடன் கலக்கிறது.
என்றும் கூறப்படுகிறது. 

நோய் வாய் ப்பட்டிருந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு 
அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஸஃபர் மாதத்து இறுதிப் 
புதன் கிழமையன்றுதான் சிறிது நோய் நீங்கப் பெற்றனர் 
என்றும் கூறப்படுகிறது.ஆனால் சிலரோ அன்றுதான் அண்ணல் 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  
நோயுற்றார்கள்  என்று கூறுகின்றார்கள்.

ஆனால் இந்தியாவிலுள்ள ஷீயாக்கள்  இதனைத் 
துர்க்குறியான நாள் என்று கருதுகின்றனர்.இதனைச்
'' சார் ஷம்பா சூரி ''( இறுதியாக சூர் என்ற எக்காளம் 
ஊதக்கூடிய புதன் கிழமை ) என்றும் கூறுகின்றனர்.
அன்று ஏழு ஸலாம்களை அதாவது.

(1) ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் (36--58) 

(2) ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆளமீன் (37--79)

(3) ஸலாமுன் அலா இப்றாஹீம் (37--109)

(4) ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37--120)

(5) ஸலாமுன் அலா இல்யாஸீன் (37--130)

(6) ஸலாமுன் அலைக்கும் திப்தும் 
ஃபதுஹுலூஹா ஹாலிதீன் (39--73)

(7) ஸலாமுன் ஹிய ஹத்தா  மத்லயில் ஃபஜ்ர் (97--05)

ஆகிய திருவசனங்களை மாவிலையில் 
எழுதிக் கரைத்துக் குடிப்பின் வருங்காலத்தில் 
நலன் அமைதி,மகிழ்ச்சி ஆகிய வற்றைப் பெறலாம்.
என்று கூறப்படுகிறது.

நக் ஷபந்தியா தரீக்காவைச் சேர்ந்த ஷைகு ஃபரீதுத்தீன் 
என்ற பெரியார் ஓர் ஒடுக்கத்துப் 
புதன் இரவு இலட்சோபலட்சம் துன்பங்கள் இறங்குவதாகக் 
கனவு கண்டார்.ஆனால் 
எவ்வாண்டு ஒடுக்கத்துப் புதன் இரவு என்று அக்கனவில் குறிப்பிடப்படவில்லை.
இதைப் பற்றி  அவர் தம் மாணவர்களிடம் கூறவே,
 '' அது நிகழின் என் செய்வது? '' 
என்று அவர்கள் வினவ மேற் கூறப்பட்ட ஏழு 
ஸலாம்களை ஓதிக் கொள்ளுமாறு 
சொன்னார் அவர்.அதுவே அவற்றை மாவிலையில் 
எழுதிக் குடிக்கும் வழக்கமாக மாறிவிட்டது.
ஸஃபர் மாதத்தில் 320,000 சோதனைகள் இறைவனால் 
இவ்வுலகில் இறக்கப்படுகின்றன 
என்றும் எனவே அதன் இறுதிப் புதன் கிழமை 
நான்கு ரகஅத் நபில் தொழுதுவிட்டு
 '' யா ஷதீதுல் குவா,யா ஷதீதுல் மிஹால்,யா மிப்அல் யா 
மக்ரூஹ்,யா லா இலாஹ இல்லா அன்த்த பி ரஹ்மத்திக 
யா அர்ஹமர் ராஹிமீன் '' என்று 
ஓத வேண்டுமெனவும் காஜா முயீனுத்தீன் ஷிஸ்தி
 ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஹ்யித்தீன் இப்னு அரபி ரஹ்மத்துல்லாஹி 
அலைஹி அவர்கள் தங்களுடைய
 '' புதூஹாத்தில் மக்கியா '' என்ற நூலில் '' ஆண்டில் 
மறைவானதோர் இரவு உள்ளது.
அந்த இரவில் பயங்கரமான நோய்கள் இறங்குகின்றன.திறந்து 
கிடக்கும் பாத்திரங்களையும்,துருத்திகளையும் அவ்வாறான 
நோய்கள் தொத்திப் 
பிடித்துப் பரவுகின்றன.எனவே தான் இரவில் 
பாத்திரங்களை மூடி வைக்குமாறும் 
மூடி வைக்க ஒன்றும் கிடைக்காவிடின் ஒரு குச்சியை எடுத்து
 ''பிஸ்மில்லாஹ் '' என்று  கூறி அல்லாஹ்வின் மீது 
பொறுப்புச் சாட்டி அவற்றின் மீது வைக்குமாறும் 
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ 
ஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர் '' 
என்று எழுதியிருப்பது கவனிக்கற் பாலதாகும்.

ஆனால் உண்மையில் ஒடுக்கத்துப் புதன் இரவு மாண்பார்ந்த 
இரவாகும்.அன்று தஹஜ்ஜுத் தொழுது பின்னர் இஸ்திகாராத்
 தொழுகை தொழுது, ஸலாமுன் கௌலன்மின் ரப்பிர் ரஹீம்
 '' என்ற திருவசனத்தில் ''கௌலன் என்பதை விட்டு விட்டு
 '' ஸலாமுன் மின் ரப்பிர் ரஹீம் என்று முப்பத்து மூன்று,
முப்பத்து மூன்று முறை வீதம் ஓதி ஒவ்வொரு 33 க்கும்
 பின்னும் கலிமாவும், ஸலவாத்தும் ஓதிக்கொள்வது 
சிறப்புடைத்ததாகும் என்று வேறு சிலர் இயம்புகின்றனர்.
மலேசியாவில் ஓர் இராஜ்ஜியமாகிய மலாக்காவில் 
இந்நாளே மண நாளை நிச்சயபபடுத்துவதற்கேற்ற 
நன்னாளாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இது தமிழ் நாட்டின் சில பகுதிகளில் புல் மிதிக்கும் 
பெருநாள் என்றும் முட்டைப் பெருநாள் என்றும் 
சபர்க்குளிநாள் என்றும் கடல்குளி நாள் என்றும் 
பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது.

நன்றி ;- இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
இரண்டாம் பாகம்,பக்கம் 586


தொகுத்து வழங்கியவர்கள்
பன்னூல் ஆசிரியர்,பேரறிஞர்,மர்ஹூம் 
எம்.ஆர்.அப்துற் றஹீம் ஸாஹிப் அவர்கள்
தொண்டி,இராமநாதபுரம் மாவட்டம்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு