அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Thursday, November 29, 2012

ஸலாமை -- சமாதானத்தை பரப்புங்கள்!ஹளரத் அப்துல்லாஹ் பின் ஸலாம் (யூத மத அறிஞராக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்.இவர் இஸ்லாமை ஏற்பதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரு மதினா நகர் வந்து சேர்ந்தபொழுது அவர்களைக்காண நான் வந்தேன். திரு நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாக பார்த்த போது அந்த முகம் பொய் முகமன்று என விளங்கிக்கொண்டேன்.

அவர்கள் வந்ததும் பேசிய முதல் பேச்சு, '' மக்களே! ஸலாமை பரப்புங்கள்.உணவளியுங்கள். உறவினர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.மக்களெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கையில் இரவில் எழுந்து  தொழுங்கள்.(ஒரு பாதிப்பும் இல்லாமல்) ஸலாமத்தான முறையில் (பத்திரமாக) சொர்க்கம் பிரவேசிப்பீர்கள் '' (திர்மிதி ; 2485 இப்னுமாஜா ; 3251)

அல்லாஹ்வின் தூதர் புனித மக்காவிலிருந்து புனித மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அங்குள்ள மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் சேர்ந்து நபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த வரவேற்பை ஏற்று,ஏற்புரை நிகழ்த்திய போது தான் மேற்கண்டவாறு பேசினார்கள்.இது நபி (ஸல்) அவர்களின் கண்ணிப்பேச்சு, திரு மதினாவுக்கு மட்டுமல்ல,இந்த உலகிற்கு தான் வந்தது, நபியாக அனுப்பப்பட்டது எதற்கு என்பதையும் தான் இந்தப்பேச்சு தெளிவுபடுத்துகிறது.

அவர்கள் சொன்ன முதல் விஷயம் '' ஸலாமை பரப்புங்கள் ''   சாந்தி சமாதானத்தைப் பரப்புங்கள், இஸ்லாமிய சமயத்தைப் பரப்புங்கள், ஸலாம் சொல்வதை பரவலாக்குங்கள் என்றெல்லாம் இதன் பொருள் விரியும்.நான் இலகிற்கு வந்தது அச்சத்தைப்போக்கி அமைதியை நிலைநாட்டத்தான் என்பதை தனது முதல் உரையில் தெளிவுபடுத்தினார்கள்.

அரபு நாட்டில் அந்தக்காலத்தில் யாருக்கு யாரால் எப்பொழுது எந்த தீங்கு விளையுமோ என்ற பயம் இருந்தது. ஒருவர் எதிர்பட்டால் '' இவரால் நமக்கு என்ன ஆபத்து ஏற்படபோகிறதோ தெரியவில்லையே ! என பயந்து நடுங்கிக்கொண்டிருந்த கால கட்டத்தில் தான் '' என்னால் எந்த துன்பமும் உனக்கு நேராது என்ற உத்தரவாதத்தை அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறுவது மூலம் தெரிவித்து விடுங்கள்.அவரும் ''என்னாலும் உனக்கு எந்த ஆபத்தும் வராது'' என பதில் வாக்கு மூலத்தை வஅலைக்கு முஸ்ஸலாம் என்பதன் வழி தெரிவித்து விடட்டும் என இஸ்லாம் கற்பித்தது.

பல இன மக்கள் வசித்த மதினாவுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து, முதன் முதலாக அவர்கள் பேசிய இந்த பேச்சு, என்னால் நான் கொண்டு வந்த மார்க்கத்தால்,என்னை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது.நான் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய மார்க்கம், எல்லா இன மக்களுக்கும் சாந்தி சமாதானம் நல்கும் சத்திய இஸ்லாமாகும்.என நம்பிகையூட்டுவதாக அமைந்திருந்தது.இந்த உலகில் யாரும் சண்டை சச்சரவு செய்யாமல், சமாதானமாக வாழவேண்டும் என்றால், இந்த உலகில் அமைதி நிலவ வேண்டு மென்றால்,இஸ்லாமிய மார்க்கத்தை எல்லா தளத்திலும் பரப்ப வேண்டும்.

மக்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது தங்களுக்கிடையில் ஸலாம் சொல்வதை அதிகப்படுத்த வேண்டும்.அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர்,பெரியவர்,சிறியவர் என்று பாகுபாடு பாராமல் அதிகமாக ஸலாம் சொல்லவேண்டும்.இந்த முகமனை பகலிலும்,இரவிலும்,மங்கலமான,அமங்கலமான எல்லா இடத்திலும், எல்லா கால கட்டத்திலும் சொல்லலாம்.

ஒருவன் காலையில் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.வேதனையோடும்,வலியோடும்,சோகமாக சோர்ந்திருக்கும் அவனிடம் '' குட் மார்னிங் '' உனக்கு நல்ல காலை என்று கூற முடியுமா? ஒருவன் மாலையில் நோயுற்று படுத்திருக்கும் போது,அவனை நோய் விசாரிக்க சென்றால் '' குட் ஈவினிங் '' நல்ல மாலை என்று அவனுக்கு சொல்ல முடியுமா? ஒரு மரண வீட்டுக்கு சென்று குட் மார்னிங் என்றோ, குட் ஈவ்னிங் என்றோ கூற முடியுமா? ஆனால் எல்லா இடத்திலும் அஸ்ஸலாமு அலைக்கும் உனக்கு சுகம் உண்டாகட்டும்.உனது மனம் சாந்தியடையட்டும்.உனக்கு சமாதானம் கிடைக்கட்டும் எனக்கூறி வாழ்த்தலாம்.

ஸலாம் என்பது அர்த்தப்புஷ்டியான ஒருசொல்.எல்லாவகையான,வியாதி,வேதனை,இடையூறு,துன்பம்,சிக்கல் நஷ்டம்,கஷ்டம்,இந்த உலகிலும் மறு உலகிலும் ஏற்படுவதை விட்டும் உனக்கு பாதுகாப்பு சுகம் கிடைக்க வாழ்த்தும் ஒரு அதி அற்புதமான மந்திரச்சொல்.அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது எல்லா வகையான அசுகத்தை விட்டும் அல்லாஹ் உனக்கு குணமளிப்பானாக! என வாழ்த்துவதாகும்.சொர்க்கத்திற்கு தாருஸ்ஸலாம் (சாந்தியும் சமாதானமும் அளிக்கும் வீடு) என்று பெயர்.அல்லாஹ் தாருஸ்ஸலாமிற்கு (சொர்க்கத்திற்கு) வருமாறு அழைக்கின்றான்''  (அல் குர்ஆன் 10 ; 25) 

இந்த வகையில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறுவது உனக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் என வாழ்த்துவதாகும். '' அஸ்ஸலாமு '' அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒரு திருநாமமாகும்.இதன் படி பார்த்தால்,அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது உனக்கு அல்லாஹ்வே கிடைக்கட்டுமாக! என்று வாழ்த்துவதாகும்.இதைவிட பெரிய வாழ்த்து வேறு என்னவாக இருக்க முடியும்.உலகில் நடைமுறையில் உள்ள முகமன் சொற்களில் இந்த ஸலாத்தைப்போல அர்த்தமுள்ள கருத்துச் செறிவுள்ள முகமன் வேறு எதுவும் உண்டா? இப்படி எல்லா வகையிலும் சிறந்த இந்த இஸ்லாமிய முகமனை அதிகமதிகம் சொல்லி இந்த உலகில் ஸலாமை பரப்புங்கள்! நம் எல்லோருக்கும் ஸலாம் -- சாந்தி சமாதானம் உண்டாகட்டுமாக! ஆமின்!!! வஸ்ஸலாம்.....என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் S.S.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா.கோலாலம்பூர்,மலேசியா)

வெளியீடு ;;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு