சந்தோஷம் வெளியே இல்லை!!!





ஆங்கிலேய அறிஞர் ஒருவர் இப்படிக் கூறுவார்; '' நீ, சிறைச்சாலையில் இரும்புக் கம்பிகளுக்கு அப்பாலும் வான்வெளியைப் பார்க்க முடியும்.உனது பாக்கெட்டிலிருந்து பூவை எடுத்து நுகர்ந்து உன்னால் புன்னகைக்க முடியும். உனது வசந்த மாளிகையில் ப்ட்டாடை உடுத்தி பஞ்சுமெத்தையில் புரண்டு ஆத்திரப்பட்வும் ஆவேசம் கொள்ளவும் முடியும்.

உனது வீட்டின் மீது குடும்பத்தின் மீது செல்வத்தின் மீது எரிச்சல் பட்டு எரிந்து எரிந்து விழவும் பொரிந்து தள்ளவும் உன்னால் முடியும்.'' அப்படியென்றால் சந்தோஷம் என்பது காலத்திலோ இடத்திலோ இல்லை. அது உனது அசைக்க முடியாத நம்பிக்கையில் -- இதயத்தில் இருக்கிறது. இதயம் இறைவனின் நோட்டம் விழுமிடம்.உறுதியான ந்ம்பிக்கை அதில் உனக்கு உறைந்து விட்டால் சந்தோஷம் பொங்கிவிடும்.

அது உனது உயிரின் மீதும் ஆத்மாவின் மீதும் நிரம்பி வழிந்து அகிலத்தாரின் மீதும் பிரவாகம் எடுக்கும்.இமாம் இப்னு ஹன்பல் (ரஹ்) பல சோதனைகளுக்கு ம்த்தியிலும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார்.அவரது ஆடை வென்மையாக ஒட்டுப்போடப்பட்டதாக இருந்தது.தனது கையால் அதை தைத்துக்கொள்வார்.அவரிடம் மூன்று களிமண் அறைகள் இருந்தன.அதில் தான் அவர் தங்குவார்.அவரிடம் உணவாக சில காய்ந்த ரொட்டித்துண்டுகளும்,அதை முக்கித் திண்ண ஜைத்தூன் -- ஆலிவ் -- ஆயிலையும் தவிர வேறொன்றும் இருக்கவில்லை.

இமாமின் வரலாற்றை வரைந்தவர்கள் எழுதுவது போல,'' பதினேழு வருடமாக அவர்கள் கிழிந்த தனது ஆடைகளைத்தானே தைத்து,ஒட்டுப்போட்டு,மாதத்தில் ஒரு நாள் இறைச்சி உண்டு, மற்ற பெரும்பாலான நாட்கள் நோன்பு நோற்று,தனது வாழ் நாளெல்லாம் நபிமொழி சேகரிப்பில் உலகின் பல் பாகங்களுக்கு செல்வதும்,வருவதுமாகவே இருந்தார்.ஆனால் அத்தோடு வாழ்வின் வாசத்தை சுவாசிப்பவராக,அன்பாகவும்,அமைதியாகவும்,காலத்தை கழிப்பவராக இருந்து வந்தார்.'' 

ஏனெனில்; கொண்ட கொள்கையில் உறுதியானவராகவும்,இலக்கைக் குறித்து நல்ல தெளிவை பெற்றவராகவும்,இறைவனுக்காக வேலை செய்பவராகவும் அவர் இருந்தது தான் காரணம்.ஆனால் அந்தக்காலத்தில் ம்ட்டுமல்ல இந்தக்காலத்திலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆட்சியாளர்களிடம்,மாட மாளிகைகளும்,கோட கோபுரங்களும்,தங்கமும் வெள்ளி வைடூரியங்களும்,பாதுகாப்பு படைகளும்,ஆயூதங்களும்,கோட்டை கொத்தளங்களும் நில புலன்களும் ஏராளமாக,அவர்கள் ஆசைப்பட்டதெல்லாம் தாராளமாக அவர்களுடன் இருந்தும் அவர்கள் துயரத்தில் தான் வாழ்ந்தார்கள். காரணம் இருப்பதை விட்டு விட்டு இல்லாததை நினைத்து உருகினார்.அதன் கவலையில் கருகினர்.

ஒரு பொருளின் அருமை அது கைக்கு வருவதற்கு முன்பு அல்லது கையை விட்டும் போன பின்பு தான் நமக்கு தெரிகிறது.இருக்கும் போது தெரிவதில்லை.அதனால் சந்தோஷம் நமது கையை விட்டும் நழுவி விடுகிறது.ஒரு அரசன் வாய்வுத்தொல்லையால் அவதிப்பட்டான்.எல்லாவித சிகிச்சைகள் செய்து பார்த்தும் வாய்வு வெளியேறாமல் சிரமப்பட்டான்.நிலைமை முற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில்,'' யார் எனக்கு சிகிச்சை அளித்து இந்த வியாதியைக் குணப்படுத்துவாரே அவருக்கு இந்த நாட்டையே பரிசாகக் கொடுக்கிறேன் '' என அறிவிக்கச்சொன்னான்.அன்றாடம் சுகமாய் பிரியும் வாய்வைப்பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை.அது பிரியாமல் அவதிப்படும் போதுதான் அதன் அருமை புரிகிறது.அதன் மதிப்பு ஒரு நாட்டையே விலை பேசப்படும் அளவுக்கு எகிறும்போது தான் ஆரோக்கியத்தின் பெருமை அதனால கிடைத்து வந்த சந்தோஷம் உணரப்படுகிறது.

அரசரின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு ஒரு இறைநேசர் அங்கு வந்து சேர்ந்தார் அரசரின் வயிற்றில் கை வைத்து ஓதிப்பார்த்தார்.அப்போது அவனிலிருந்து நாத்தக்காத்து வெளியேறியது.அந்த நிமிடமே அரசன் சுகம் பெற்றான்.இந்த சுகம் இந்த நோய் வருவதற்கு முன்பும் அவனுக்கு இருந்தது.ஆனால் அவன் உணராமல் இருந்தான்.நிழலின் அருமை வெயிலில்தானே தெரியும்.அரசன் சொன்னபடி தனது நாட்டை அவருக்கு பரிசாக கொடுக்க முன்வந்தான்.ஆனால் அதை அந்த மகான் ஏற்க மறுத்துவிட்டார்.இந்த நாடு -- இதன் விலை நாத்தக்காத்து -- எனக்குத் தேவையில்லை.எனினும் நீ ஆணவம் கொண்ட ஆட்சியின் அதிகபட்ச விலை இதுதான் என உபதேசித்தார்.அல்லாஹ் நமக்கு இது மாதிரி கணக்கில் அடங்காத சுகத்தை தந்திருக்கின்றான்.அதில் ஒரு சுகத்தின் விலை ஒட்டுமொத்த நாடே என்றால் அவனது மற்ற பாக்கியங்களுக்கு என்ன விலையாக இருக்கும்.இப்படி எண்ணில் அடங்கா -- சுகங்கள் சந்தோஷங்கள் நம்மில் கொட்டிக்கிடக்கின்றன.நாம் அவைகளை கவனிப்பதே இல்லை.

உலகத்தையே செலவு செய்தாலும் அவன் நாடவில்லையெனில் அவன் கொடுத்த ஒரு சுகத்தையும் திரும்ப பெறமுடியாது.மோதிரத்தை தொலைத்த இடத்தில் தேடாமல் வெளிச்சமிருக்கும் இடத்தில் தேடுவது முல்லாவின் கதையல்ல.நம்முடைய கதையும்தான்.இதில் விழித்துக் கொண்டவர்கள் பிழைத்துக்கொண்டார்கள்.இதில் பல்கு நாட்டுப் பேரரசர் இப்ராஹீம் பின் அத்ஹமும் ஒருவர்.ஒருநாள் தனது மாளிகையின் தாழ்வாரத்தில் ஒரு பகிர் -- சாது அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.அப்போது அவர் கண்ட காட்சி அவரது வாழ்வைப் புரட்டிப் போடப்படுகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.அந்த பகிரின் கையில் ஒரு காய்ந்த ரொட்டி.அதைத் தண்ணீரில் நனைத்து உப்பைத்தொட்டு உண்ணுகிறார்.பின்னர் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு இறைவனைப் புகழ்ந்து துதித்துவிட்டு கீழே தரையில் தலையை வைத்து உறங்கிப்போனார்.

ஒரு வசதியும் இல்லாத இந்த சாது சாதாரண உணவை சந்தோஷமாக சாப்பிட்டு,நிம்மதியாக தூங்குவது,அரசரின் உள்ளுணர்வைத்தட்டி எழுப்பியிருக்க வேண்டும்.தனது சொகுசு வாழ்க்கையில் கிடைக்காத,இந்த சந்தோஷம் அவருக்கு ஒரு வகை பொறாமையுணர்ச்சியைத் தூண்டியிருக்கவேண்டும்.'' அந்த ஆள் எழுந்ததும் உடன் என்னிடம் அழைத்து வாருங்கள்.'' என உத்தரவிட்டார்.அவ்விதம் அந்த சாது அவர்முன் கொண்டுவரப் பட்டபோது,பசியுடன் இருந்த உனக்கு ஒரு ரொட்டியைச்சாப்பிட்டதும் வயிறு நிரம்பிவிட்டதா.?'' எனவினவினார்.அதற்கு அவர்,''ஆம் அரசே'' என்றார்.தண்ணீர் குடித்தாய் தாகம் தீர்ந்ததா? ஆம்! எந்த கவலையும்,துக்கமுமின்றி சந்தோஷமாக படுத்தாய்.சுகமாக தூங்கினாயா? ஆம் அரசே! வினா விடை முடிந்தது.அரசராக இருந்தும் பெறமுடியாத இந்த சுகத்தை இந்த சாதுவால் மட்டும் எப்படி பெறமுடிந்தது?.அப்படியென்றால் சந்தோஷம் எனக்கு வெளியே --இந்த ஆடம்பர அரச வாழ்வில் இல்லைதானே என சிந்தித்தார்.முடிவில் அரசவையைத் துறந்து நாட்டை விட்டும் வெளியேறினார்.

இறைஞானமுதைப் பருகி பரவசமடைந்த போது இப்படிக்கூறினாராம்;'' நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரின்ப வாழ்க்கையை அரசர்கள் மட்டும் அறிந்து கொண்டால் வாட்களைக் கொண்டு எங்களிடம் யுத்தம் செய்ய வருவர்.'' மனது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு ரணத்தை அதிகப்படுத்திக்கொள்கிறது.இப்படி புன்னாகும் மனதுக்கு மருந்தாக,மாநபி (ஸல்) மொழிந்த மணிமொழிகள்; ''உங்களில் ஒருவர் தன்னை விட கீழுள்ளவரைப் பார்க்கட்டும்.மேலுள்ளவரைப் பார்க்கவேண்டாம்.இல்லையெனில் தன்னிடமுள்ள பாக்கியத்தை துர்பாக்கியமாக கருத நேரும்.'' (புகாரி ;6490) இந்த நபிமொழி சந்தோஷத்திற்கான சூத்திரத்தைச் சொல்லித் தருகிறது.மேலே பார்த்துப் போனால் விபத்து சம்பவிக்கும் கீழே பார்த்துப் போனால் தான் பயணம் சுகமாகும்.அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!!

என்றும் தங்களன்புள்ள.




மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு