அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Thursday, April 18, 2013

வாழ வழியா இல்லை பூமியில் !!!
அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 4 ; 97 )
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் எதிர் நீச்சல் போடத்தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கில்லை.அதில் மேடு பள்ளமும்,சுழியும்,பாறைகளும் நிறைந்திருக்கும் வாழ்க்கைப் படகை ஓட்டிச்செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும், பாறையில் மோதிவிடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பை பயன்படுத்த வேண்டும்.அந்த துடுப்பு எது? அது தான் ஈமான் என்னும் நம்பிக்கை.இறைநம்பிக்கை என்பது இறையிருப்பை ஏகத்துவத்துவத்தை ஏற்பது மட்டுமல்ல.அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்,''  ( 9 ; 40 ) அவன் எப்பொழுதும் நம்மை கைவிடமாட்டான்.நமக்கு உதவி செய்வான்.நாம் வெற்றி இலக்கை அடைந்தே தீருவோம் '' என்ற உறுதியான விசுவாசமும் ஆகும். 

இந்த வகையில்,தன்நம்பிக்கை என்பதும் ஈமானில் ஒரு அங்கமே.வாழ்க்கை என்றால் வேதனைகளும்.சோதனைகளும்  சகஜம்.சங்கடங்கள் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்டவேண்டும்.முழு வெற்றி -- சக்சஸ் ஃபுல்,சாகஸம் செய்தாலே சாத்தியமாகும்.இது சரித்திரத்தில் சாதனைப் படைத்தவர்கள் எல்லோரும் சொல்லும் செய்தி.இறை தீர்க்க தரிசிகளான நபிமார்களும்,இறைநேசர்களான வழிமார்களும்,பெற்ற வெற்றியின் இரகசியமே தங்கடங்களை தடையாகக் கருதாமல் சகிப்புத்தன்மையுடன் மேற்கொண்ட அவர்களின்  தொடர் முயற்சிகள் தான். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்றால் ஏன் தோல்விக்ள் ஏற்படுகிற்து அவன் நம்முடன் இருப்பதால் தான் பாதுகாக்கப் படுகிறோம்.

நாம் தனித் தீவுகள் அல்ல.நாம் நினைத்ததெல்லாம் தாறுமாறாக நடப்பதற்கு.நம்முடன் அல்லாஹ் இருக்கிறான்.அவன் நம்மை வழி நடத்திச் செல்கிறான்.தோல்விகள் நமது தவறான முடிவுகள். அதற்குப்பிறகு ஏற்படும் இறுதி வெற்றி இறையிருப்பின் வெளிப்பாடு. இந்த வகையில்,ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கு தடையாக இருந்த காரணங்களைக் கண்டறிந்துச் சொல்லும் குருவாகும். இந்த  முட்டாலுக்கு எவ்வளவு சொன்னாலும் எதுவும் ஏறாது என்று பாட சாலையிலிருந்து வெளியேற்றப் பட்ட தோமஸ் ஆல்வா எடிசன் தான் பிற்காலத்தில் மின் குமுழை ( Electric Bulb ) கண்டுபிடித்தான்.ஆரம்பத்தில் அதைக் கண்டுபிடிப்பதில் ஆயிரம் முறை செயல்முறை பரிசோதனை செய்ததில் தோல்வியைத்தான் தழுவினான்.தளராத முயற்சியால் இறுதியில் மகத்தான வெற்றிபெற்றான்.ஆயிரம் முறை பரிசோதனை செய்து தோற்றுப்போனதில் உங்களின் காலநேரமும் சக்தியும் அதில் வீணாகிவிட்டதே! என்று அவரிடம் வினவப்பட்டபோது; '' யார் சொன்னார் நான் ஆயிரம் முறை தோற்றேன் என்று நான் ஆயிரம் முறை பரிசோதனை செய்ததில் ஒரு மின்குமிழ் எரியாமல் இருப்பதற்கான ஆயிரம் காரணங்களை கண்டறிந்தேன் '' என்றான் வெற்றிப் பெருமிதத்துடன். வெற்றி பெற்ற எல்லா சாதனையாளர்களைப்போல தடைக்கற்களை வெற்றிக்குரிய படிக்கற்களாக கண்டதால்,காணவேண்டியதை இறுதியில் கண்டுகொண்டு தனது இலக்கை அடைந்தான்.

'' ஒட்டகம் மேய்கக்கூட தகுதியில்லாதவன் நீ '' என்று தகப்பனாரால் திட்டு வாங்கிய உமர் ( ரலி) தான் தரனி போற்றும் தரமான நிர்வாகத்தைத் தந்து,பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவி சரித்திரத்தில் முன்மாதிரி ஆட்சியாளர் என்ற சிறப்பை பெற்றார். ஆயிரம் மைல் பயணம் ஒரு அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது. முயற்சி நம்கையில்.  பூர்த்தி பூரணசக்தியின் கையில்,யார் என்ன சொன்னாலும் பயணத்தை நிறுத்தாதே இலக்கை சென்றடையும் வரை ஓயாதே! ஓடி ஓடி வேலை செய். படைத்தவன் அதில் தான் வாழ்வை அமைத்திருக்கின்றான்.அலைகடல் தாண்டியும் வாழ்வாதாரம் தேடு! அலைக்கழிப்பு இருக்கலாம் அது உன்னை அனைத்துவிடுவதற்கு அல்ல அணைப்பதற்கு. '' திடமாக நாம் மனிதனை கஷ்டத்தில் உள்ளவனாக படைத்திருக்கின்றோம்.'' ( அல்குர்ஆன் 90 ; 4 ) ஆனால் கஷ்டம் உனக்கு நஷ்டமில்லை. அது தான் உனது இலாபத்திற்கான மூலதனம்.ஏனெனில் ; நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகறியம் இருக்கின்றது '' (அல் குர்ஆன்  94 ;56 )

இந்த வசனத்தில் கஷ்டம் (உஸ்ரு) என்னும் சொல்,குறிப்பு பெயர் சொல்லாக இரு முறை ஆளப்பட்டுள்ளது.ஆனால் இலேசு ( யுஸ்ரு) என்னும் சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இரண்டு முறை வந்துள்ளது.குறிப்பு பெயர்ச்சொல் ஒரு தொடரில் திரும்பத் திரும்ப இரு முறை வந்தால் இரண்டிற்கும் உததேசம் என்றுதான்.ஆனால் பொதுப் பெயர்ச்சொல் ஒரே தொடரில் மடங்கி மடங்கி,இருமுறை வந்தால் அது இரு பொருளைத் தரும் என்பது இலக்கணம்.இந்த விதிப்படி; ஆயத்தின் அர்த்தம் ;ஒரு கஷ்டத்திற்கு இரண்டு இலேசுகள் -- சௌகரியிங்கள் கிடைக்கும். '' ஒரு சஞ்லத்திற்குப் பிறகு இரு சந்தோஷங்கள் வந்தே தீரும் '' (நபிமொழி)

இந்த வசனம் நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு சந்தோஷ வார்த்தை சொன்னது போல வெற்றிக்கு மேல் வெற்றி வந்து அவர்களைச்சேர்ந்தது.ஆனால் அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்கவேண்டியதிருந்தது.ஆதரவும் பாதுகாப்பும் கொடுத்து வந்த அபூதாலிப் அவர்கள் மறைந்த பிறகு, குறைசி குலத்தின் பனூ ஹாஷிம் குழுவிற்கு தலைமை பொறுப்பை எற்ற அபூலஹப் நபியவர்களுக்கு இனி பாதுகாப்பு கொடுக்க மறுத்து விட்டான். இனக் குழுக்களின் ஆட்சி நடைபெற்ற அரபு தேசத்தில் ஏதாவது ஒரு குழுவின் பாதுகாப்பின்றி தனது அழைப்பு பணியை முன்னெடுத்திச் சென்று  ஜீவிக்க முடியாத நிலையில்,பாதுகாப்பு கேட்டு தாயிபுக்கு நபியவர்கள் பயணமானார்கள்.உடன் உற்ற தோழராக இருந்த பணியாளர் சைது ( ரலி) அவர்களை மட்டும் அழைத்துக் கொண்டார்கள்.

தாயிப் நகரம் மக்காவின் தென்கிழக்கே 65 மைல் தொலை தூரத்தில் அமைந்த ஒரு குழுமையான,பசுமையான கோடைகால வாஸஸ்தலம் அங்கே நபியவர்களுக்கு சில உறவினர்களும் இருந்தார்கள். அங்கே மூன்று முக்கிய தலைவர்கள் இருந்தார்கள்.அப்து யாலைல்,மஸ்வூது,ஹபீப் ஆகிய இம்மூவரிடம் சென்று தனக்கு பாதுகாப்பும்,ஆதரவும் அளிக்கும்படி நபியவர்கள் கோரினார்கள்.அதற்கு முற்றாக மறுத்துவிட்ட அம்மூவரும் கடுஞ்சொல்லை பயன்படுத்தினார்கள். ஒருவன் கூறினான் ;அல்லாஹ் உம்மை அவனது தூதராக அனுப்பி இருந்தால் ( இறைவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க) கஃபாவின் திரைத்துணியை கிழித்தெறிவேன். இன்னொருவன் சொன்னான் ;அல்லாஹ்வுக்கு தூதராக அனுப்ப உம்மை விடுத்து வேறு ஆள் கிடைக்கவில்லையா. மூன்றாமவன் எச்சரிக்கை உணர்வுடன் பேசினான் ;நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வின் தூதராக இருந்தால் நான் உங்களுக்கு பதிலுரைப்பது மிக ஆபத்தானது.நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய் சொல்வதாக இருந்தால்,நான் உங்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை எது எப்படி இருந்தாலும் அல்லாஹ் மேல் சத்தியம் நான் உங்களுடன் ஒரு பேச்சும் ( ஆதரவாகவும்,எதிராகவும்) பேசமாட்டேன்.( ஸீரத் இப்னு ஹிஷாம்
 2 ; 29 ) மிகுந்த கவலையுடன் நபியவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள்.ஆயினும் அம்மக்கள் அவர்களை சும்மா விடவில்லை ஊரிலுள்ள சிறுவர்கள்,அடிமைகளை ஏவிவிட்டு நபியவர்களை பின்தொடர்ந்துச் சென்று,ஏசவும்,பேசவும்,கல்மாரி பொழியவும் செய்தனர்.

நபிகளின் பணியாளர் சைது பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தனது போர்வையால் நபியவர்களை பாதுகாக்க முயன்றும் முடியவில்லை கல் நெஞ்சம் படைத்தவர்கள் கண்ணல் நபி (ஸல்) அவர்களை கல்லால் காயப்படுத்தி விட்டார்கள். ஒரு கவிஞர் கூறியது போல '' அது வரை கல்லின் மீது பூவை எரிந்தவர்கள் அன்று முதன் முதலாக ஒரு பூவின் மீது கல்லை எரிந்தார்கள் ''ஊருக்கு சற்று வெளியே உத்பா, ஷைபா என்ற இரு சகோதரர்களுக்குரிய முந்திரித் தோட்டம் ஒன்று இருந்தது.நபியவர்கள் அங்கு போய் சேர்ந்த போது மாலையாகிவிட்டது. அங்கே அந்ததோட்டத்தில் அடைக்கலம் தேடினார்கள். உடலில் கடுங்காயத்துடன் உள்ளத்தில் பெரும் வலியுடன் அல்லாஹ்விடம் இப்படி மன்றாடினார்கள் ; இறைவா! எனக்கு உதவி செய் என்னை தனியாக விட்டு விடாதே யா அல்லாஹ்!''    உத்பா,ஷைபா இருவரும் இணைவைப்பவர்கள்தாம். எனினும் அவர்கள் அந்த நேரத்தில் அஹ்மது நபியவர்களின் நிலை கண்டு இறங்கி  அவர்களுக்கு அங்கே இடமளித்தார்கள். தங்களது கிருத்துவ அடிமை அதாஸை அழைத்து ஒரு தட்டில் முந்திரிக்கொத்தை எடுத்து வைத்து அதோ இருக்கிறாறே அவரிடம் கொண்டு போய் கொடு என பணித்தார்கள்.அதையேற்று அவ்வாறே முந்திரிக்கொத்தை ஒரு தட்டில் கொண்டு போய் ஏந்தல் நபிக்கு முன்பு வைத்து உண்ணுமாறு வேண்டி நின்றார். 

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை கையில் எடுத்து பிஸ்மில்லா சொல்லி சாப்பிட்டார்கள்.இதை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அதாஸின் கண்கள் அகலமாக விரிந்தது '' அல்லாஹ் மேல் சத்தியம்.நீங்கள் இப்பொழுது சொன்னீர்களே அதை இந்த வட்டாரத்தில் யாரும் சொல்வதில்லை '' என வியப்பை வெளிபடுத்தியபோது உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன? என நபியவர்கள் திரும்பிக்கேட்டார்கள்.நான் கிருத்துவன் எனது ஊர் '' நீனுவா '' என அதாஸ் பதிலளித்தார்.அது நல்லவர் யூனுஸ் பின் மத்தாவின் ஊராயிற்றே '' என்று நபியவர்கள் தொடர்ந்து பேசியபோது,அதாஸின் ஆச்சரியம் இன்னும் அதிகமானது. '' என்ன யூனுஸ் பின் மத்தாபை உங்களுக்கு தெரியுமா? அவர் யார்? எனக்கேட்டார் '' அவர் எனது சகோதரர் நபியாக இருந்தார் நானும் நபிதான் '' என்று சுந்தர் நபி (ஸல்) அவர்கள் சொன்னது தான் தாமதம் உடனே அந்தக்கிருத்துவ அடிமை அல்லாஹ்வுடைய தூதருக்கு முன்பு பணிந்து சர்தார் நபியின் தலை,கை,காலை யெல்லாம் முத்தமிட ஆரம்பித்துவிட்டார்.இந்தக் காட்சியை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த உத்பாவும்,ஷைபாவும் இந்தச்செயலுக்காக அதாஸை கண்டித்தபோது; ''எனது எஜமானரே! இந்த பூமியில் இதை விட சிறந்த செயல் வேறெதுவும் இல்லை.இந்த மனிதர் நபியாக இருந்தால் ம்ட்டுமே தெரியக்கூடிய செய்திகளை என்னிடம் கூறினார் என்றார். ( இப்னு ஹிஷாம் 2 ; 30 )

இந்தப் பயணத்தில்; அல்லாஹ்வுடைய தூதருக்கு பலதரப்பட்ட மக்களைச் சந்தித்ததில், மூன்று தனித்தனி அனுபவம் கிடைத்தது.

-- ஒருவர் நபியின் மீது கல் எரிந்தார்.

-- இன்னொருவர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார்.

-- மூன்றாமவர் அவர்களின் நபித்துவத்தை ஒப்புக்கொண்டார்.

நாயகத்தின் இந்த நிகழ்வில் நானிலத்திற்கு பெரிய பாடம் இருக்கிறது.இந்த வையகத்தில் வழிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.இங்கே ஒரு பக்கம் வெட்ட வெளி மைதானம்,பொட்டல் காடு இருக்கிறது என்றால், மறுபுரம் நிழல் தரும் மரங்களைக்கொண்ட தோப்பும் இங்கே இருக்கத்தான் செய்கிறது.உலக வாழ்க்கையில்,சிலபேரிடமிருந்து கசப்பான அனுபவம் கிடைத்தால் அதற்காக மனிதன் நிராசை அடையவேண்டியதில்லை.அவன் சத்தியத்தின் மீது இருக்கும் பட்சத்தில் எதிர் மறையான உணர்விலிருந்து அவநம்பிகையிலிருந்து அவன் தன்னை தற்காத்துக்கொண்டால் அவனுக்கு இறை உதவி உறுதியாக கிடைக்கும்.அவனை ஏற்காதவர்கள் சிலர் இருந்தாலும்,நம்பிக்கையுடன் முயற்ச்சியைத் தொடர்ந்தால் ஏற்றுக்கொள்கிற பலர் வருவார்கள்.இந்த யாத்திரையிலிருந்து மக்காவுக்கு திரும்பிச்செல்லும்போது '' மக்காமே நக்லா '' என்னும் இடத்தில் இரவு தங்கினார்கள்.அங்கே இரவின் கடைசி பகுதியில் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபட்டார்கள்.அப்போது யமனிலுள்ள நஸிபைன் பகுதி ஜின்னுகளின் ஒரு கூட்டம் அவிடம் வந்து திரு நபி (ஸல்) அவர்களிடமிருந்து திருக்குர்ஆனை செவிமடுத்து,அவர்களை விசுவாசம் கொண்டு திரும்பியது.
( 46 ; 29,30,31,32, மற்றும் ஜின் அத்தியாயம் )

நீங்கள் ஓதும் வேதத்தை -- மனிதர்கள் கேட்கவில்லையா? '' ஜின்களை அனுப்புவோம் ( 46 ; 29 )
அவர்கள் கேட்பார்கள் '' ஆகவே சளைத்துவிடவேண்டாம்.தளர்ந்துவிடவேண்டாம்.மண்ணுலகம் என்ன விண்ணுலகமே உங்களை ஏற்கத் தயாராக இருக்கிறது என்பதைக்காட்ட விண்னேற்றப் பயணத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள காட்சிகள் வரவேற்புகள் கண்டு அசர வைத்தான்.எனவே சளைத்துவிடவேண்டாம்.

வெற்றியாளர் என்றும் சளைப்பதில்லை.

சளைப்பவர் என்றும் வெற்றி பெறுவதில்லை.

சடையாமல் முயற்சியைத் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.பேரறிஞர் பெர்னாட்சாவிடம் ஒருவர் வந்து '' நான் பத்து முயற்சி செய்தால் ஒன்று தான் கைகூடுகின்றது பத்தும் பலன் தரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் '' என்று கேட்டபோது ''நீ நூறு முயற்சிகள் செய்.பத்தும் பலன் தரும் '' என்றார் '' என்னைப்போல் அச்சுறுத்தப்பட்டவர் யாருமில்லை.என்னைப் போல் துன்புறுத்தப்பட்டவரும் யாருமில்லை.'' ( நபிமொழி)

நாயகம் ( ஸல்) அவர்களைப் போல வெற்றி பெற்றவர்களும் யாருமில்லை.என்ன காரணம் நம்பிக்கையோடு,முன்னெடுத்து வைத்த முழு முயற்சிகள். '' மனிதனின் முயற்சியின் அளவே அவனுக்குப் பிரதிபலன் கிட்டுகிறது '' ( அல்குர்ஆன் 53 ; 39 )

நெருப்புக்குன்றம் இப்றாஹீம் நபிக்கு பூஞ்சோலையாக மாறியது ''  ( 21 ; 69 ) அப்படியென்றால் பொசுக்கும் தீயிலும் இருக்கிறது பசுமையான பூஞ்சோலை.பாலைவனத்திலும் உண்டு சோலைவனம்.குளுமையான வாழ்க்கை வேண்டுமா தீயில் ( கடுந்துயரத்திலும் விடாப்படியான முயற்சியில் )இறங்கவேண்டும்.நெருப்பும் பூஞ்சோலைக்கான ஒரு வழியே.

'' அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா '' (அல்குர்ஆன் 4 ;97 )

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,அல்லாமா எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி.
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு