அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Friday, August 22, 2014

ஈடு இணையற்ற திருத்தப்படாத இறைவேதம்

           


  وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ  لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ 

நிச்சயமாக குர்ஆனாகிறது கண்ணியமான வேதமாகும்.அதற்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ உண்மைக்கு புறம்பான எதுவும் அதனிடம் வராது.இது புகழுக்குரிய ஞானமிக்க அல்லாஹ்விட மிருந்து இறக்கி அருளப்பட்டதாகும். [அல்குர்ஆன் : 41 ; 41,42]


அல்லாஹ் அருளிய அல்குர்ஆன் ஓர் அற்புதமான வேதமாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மைக்குப் புறம்பான விஷயமும் அதில் இல்லை.மனித அறிவு மாறலாம்.அதனால் அதன் முடிவு மாற்றப் படலாம்.ஆனால் திருமறை மாற்றப்படாது.ஏனெனில் அது முக்காலமும் உணர்ந்து உலகை சிருஷ்டித்த கர்த்தாவாகிய இறைவனால் இறக்கப்பட்டது.

இது இறுதி வேதம்.யுக முடிவு வரை தீர்வு சொல்லும் நிறைவான தொரு சட்டக்களஞ்சியம்.எல்லாக் காலத்திற்கும்,எல்லா நாட்டிற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தக் கூடியது.எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் இறுதியானது,முடிவானது. அதற்கு மாற்றமாக எந்தக் கருத்து வந்தாலும் அது ஜெயிக்காது, நிலைக்காது.

ஆனால் மனிதன் முக்காலத்தையும் அறிந்தவன் அல்ல,அவன் முழுமையாக பார்ப்பவனும் அல்ல, அவனுக்கு ஒரு பக்கம் தான் தெரியும். அதனால் அவன் சொல்லக்கூடிய எந்த ஒரு தீர்வும், எந்த ஒரு தீர்மானமும் நிலையானதோ,நிரந்தரமானதோ அல்ல.அதனால் அவன் எழுதிய சட்டம் அவனால் திருத்தப்பட வேண்டியது வருகிறது.ஆகையால் அவனுடைய காலத்திலேயே அவன் இயற்றிய சட்டம் அவனாலேயே மாற்றம் செய்யப்பட்டு விடுகிறது.

நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிற போது, சட்டத்திருத்த மசோதா கொண்டுவராமல் எந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் நிறைவு பெறுவதில்லை. இது,மனிதனுடைய அறிவு எந்தளவு குறுகியது என வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இராமேஸ்வரத்தில் ஒரு கப்பலில் தங்கம் கடத்துவதாக தகவல் வந்தது. உடனே போலிசார் அந்தக் கப்பலை மடக்கி ‘மெட்டல் டிடக்டர்’ கருவி கொண்டு சோதித்துப் பார்த்தார்கள்.அப்போது அதில் தங்கம் இருப்பது உறுதியானது.ஆனால் கப்பலில் முழுமையாகத் தேடியும் ஒரு துளி கூட தங்கம் கிடைக்க வில்லை.

கருவி சொல்கிறது தங்கம் இருக்கிறது என்று. ஆனால் கப்பலில் தேடிப் பார்த்தால் தங்கம் கிடைக்க வில்லை. இறுதியில் என்னவென்று பார்த்தால், கப்பலுக்குரிய நங்கூரத்தை தங்கத்தில் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவானது.கடத்தியவன் மீது வழக்கு பாய்ந்தது. வழக்கறிஞர் ; கப்பலில் தங்கம் கடத்தக் கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அந்தக் கப்பலின் நங்கூரத்தை எந்த மெட்டீரியலில்­, எந்த உலோகத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.எனவே சட்டப்படி குற்றமில்லை என வாதிட்டார்.

நிதிபதி, இந்த வாதத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு, அவர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டியது வந்தது. கடைசியில் அவர் இது மாதிரியான நூதனக் கடத்தலைத் தடுப்பதற்குத் தேவை யான சட்ட வாசகத்தைத் திருத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார்.

மனிதனுடைய சட்டங்களில் இப்படித்தான் மாற்றம் நிகழும்.ஆனால் திருக்குர்ஆன் அல்லாஹ் அருளிய வேதம்.அதில் இதுவரை எந்தத் தவறும் கண்டு பிடிக்கப்பட வில்லை. யாராவது தவறு இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் அவனது அறிவைத்தான் திருத்த வேண்டுமே தவிர திருக்குர்ஆனை அல்ல.ஒரு முறை ஜவஹர்லால் நேரு அவர்கள் “இஸ்லாத்தில் உள்ளது பாதி தான் எனக்குப் புரிகிறது” என்று சொன்ன போது,”அப்படியானால் உங்கள் அறிவு பாதி தான் நிறைவு பெற்றுள்ளது” என்றாராம் அபுல்கலாம் ஆசாத் அவர்கள்.

திருமறைக் குர்ஆன் திருத்தம் தேவைப்படாத வேதம்.ஏனெனில் فاعلموا انما انزل بعلم الله இது அல்லாஹ்வின் அறிவைக்கொண்டு அருளப்பட்டது. அதனால் அதிலுள்ள செய்தி எதுவாக இருந்தாலும்,எத்தனைக் கேள்விகள் அதில் கேட்கப்பட்டாலும்,எத்தனை விமர்சனங்கள் அதில் எழுந்தாலும் அது நீடித்து நிலைபெற்றதாகவே இருக்கும். இனி உலக அழிவு நாள் வரை அது உயிருள்ள வேதமாகவே ஜொலிக்கும்.
குர்ஆனைக் குறைவு படுத்துவதற்காக வேண்டி கேட்கப்படுகிற கேள்விகள், அதன் நிறைவைத்தான் நிலைநாட்டியது.

குர்ஆனில் அல்லாஹ் நரகத்தை பற்றி ஒரு வசனத்தில் ;


أَذَلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ  إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ  إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ

கள்ளிமரம் என்பது பாவிகளுக்கான உணவு. நரகத்தில் கிடைக்கும் அந்த மரம், நரகத்தின் அடிப்பாகத்திலிருந்து முளைத்து வெளிவருகிறது [37 :62 ,63,64] என்று சொன்னான்.

அபூஜஹ்லும் அவனது கூட்டாளியும் இதைக் கேட்டதும் கேலி செய்தார்கள். நரகம் என்றால் நெருப்பு.அது கல்லையும் எரித்து விடும் என்று நீங்கள் தான் குர்ஆனில்[2 :24] وقودها الناس والحجارة வந்திருப்பதாகச் சொல்கின்றீர்கள். அப்படியென்றால் எப்படி நரகத்தில் மரம் முளைக்கும்? மரத்தை நெருப்பு கரித்து விடாதா? இது அறிவுக்கு எப்படி பொருந்தும் என்று அவன் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டான்.

அவனது இந்தக் கேலி வாதம் ஒரு வகையில் நியாயமாக தெரிந்தாலும், அல்லாஹ் அந்த வசனத்தை மாற்ற வில்லை. மட்டுமல்ல, நான் சொல்வது தான் உண்மை. அதில் எந்த மாற்றங் களுக்கும், திருத்தங்களுக்கும் உரிய விஷயங்கள் இல்லை என்பதை ஆணித்தரமாக உலகத்திற்கு நிரூபிக்க குர்ஆனின் பல்வேறு இடங்களில் திரும்பத் திரும்ப அந்த வசனத்தைக் கொண்டு வந்தான்.

பொதுவாக இஸ்லாத்திற்கு எதிராகவும், இறைவசனத்திற்கு எதிராகவும் கேள்விகள் கேட்கப்படும் பொழுதெல்லாம் இஸ்லாம்  பலவீனமாகு வதில்லை. மாறாக இஸ்லாத்தின் பலம் அங்கு தான் வெளிப்படுகிறது.

அகிலத்தில் அறிவும்,ஆராய்ச்சியும் வளர வளர திருக்குர்ஆன் இன்னும் அதிகமாக ஒளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது.இந்த வகையில் நெருப்பு மரத்தைப்பற்றிய வசனம் ஒரு புரட்சிகரமான கருத்தை அறிவியல் உலகின் முன் வைத்தது.இது ஈமானு [நம்பிக்கை] க்கு ஒரு சோதனையாகவும்,அறிவியலுக்கு ஒரு சவாலாகவும் அமைந்தது.


وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآَنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا

இந்த வசனம் அவநம்பிக்கை உள்ளோருக்கு “நெருப்பு மரம்” அசாத்தியமானதாகவும் நம்பிக்கை உள்ளோருக்கு சத்தியமானதாகவும், சாத்தியமானதாகவும் இருக்கிறது.

பொதுவாக நெருப்பு மரத்தை எரிப்பது உண்மை தான். ஆனாலும் எல்லா வஸ்துவையும்,எல்லா மரத்தையும் அந்த நெருப்பு எரித்து விடாது. நரகத்தில் முளைக்கக் கூடிய மரம், அது “நெருப்பு மரம்” என்று குர்ஆன் அதற்கு பெயர் சொல்கிறது.

தரையில் முளைக்கும் மரத்தை நெருப்பு எரித்து விடும்.ஆனால் நெருப்பில் முளைக்கும் மரத்தை நெருப்பு கரித்து விடாது.

கரடிகளில் பனிக்கரடி என ஒரு வகை இருக்கிறது. சாதாரன காட்டிலே அவைகளால் வாழ முடியாது. சாதாரன காட்டிலே உள்ள கரடி பனியிலே வாழ முடியாது. பனிக்கரடி அங்கே வாழ்வதற்கு தகுந்த உடல் அமைப்பைப் பெற்றிருக்கிறது. அது போல நரக நெருப்பில் நெருப்பு மரம் அதற்குத் தோதுவாக நெருப்பில் எறிந்து போகாத, நெருப்பில் தாக்கு பிடிக்கக் கூடியதாக அங்கே எழுப்பப்பட்டிருக்கிறது.

தீ எல்லாவற்றையும் எறித்து விடாது என்பதற்கு எத்தனையோ அறிவியல் ஆதாரங்களும் நிதர்சனமான நடைமுறை உதாரணங் களும் இருக்கிறது.தீக்கோழி நெருப்புக் கங்கை அப்படியே விழுங்கி விடும். நாம் விழுங்கினால் வாய் பொத்து விடும். ஆனால் அந்த தீக்கோழி நெருப்பினால் சூடாக்கப்பட்ட இரும்பை அப்படியே விழுங்கி விடுகிறது. அதற்கு வாய் பொத்துப் போவதில்லை. நமக்கும் அது மாதிரியான சதை தானே என நாம் நினைக்கலாம். ஆனால் வித்தியாசம் இருக்கிறது.நம்முடைய சதை நெருப்பில் வெந்து விடுகிறது. தீக்கோழியின் வாய் வெந்து போவதில்லை.

சமந்தல் என்று ஒரு பறவை [அல்லது ஒரு பிராணி] இருக்கிறது. அதனுடைய முடியிலிருந்து கைத்துண்டு [கர்சீஃப்] செய்கிறார்கள். அந்த கைத்துண்டின் விஷேசம் என்னவென்றால், அது அழுக்கானால் தண்ணீரைக் கொண்டு கழுகத் தேவையில்லை. நெருப்பில் போட்டால் போதும். அது சுத்தமாகி விடும். அல்லாஹ்வுடைய படைப்பில் இப்படியும் இருக்கிறது.

“அல்ஹரீருஸ்ஸக்ரீ” [asbestos silk] என்று ஒரு பட்டு இருக்கிறது. அந்த சில்க் துணியின் விஷேசம் என்னவென்றால் அதை நெருப்பில் போட்டால் எரிந்து போகாது,கரிந்து போகாது,அழுக்கு நீங்கி சுத்தமாகி விடும். தீயணைப்புப் படை வீரர்களுக்கு ஒரு கோட் கொடுக்கிறார்கள். அந்த கோட்டை அணிந்து கொண்டு அவர்கள் தீயில் குதிப்பார்கள். அந்த நெருப்புப் பிடிக்காத கோட் இந்த பட்டிலிருந்து தான் செய்யப் படுகிறது. எனவே நெருப்பு பட்டால் பற்றி எரியும் துணிகளில் நெருப்பினால் பற்றி எரியாத துணிகளும் இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் சாதாரணமாக விளங்கிக் கொள்கிறோம்.

திருமறைக் குர்ஆனில் யாஸீன் என்ற அத்தியாயத்தில் ;  


الَّذِي جَعَلَ لَكُمْ مِنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا فَإِذَا أَنْتُمْ مِنْهُ تُوقِدُونَ

பசுமையான மரத்திலிருந்து நெருப்பை அவன் தான் உங்களுக்கு உண்டாக்கினான்.அதிலிருந்து [நெருப்பை] நீங்கள் மூட்டுகிறீர்கள் {36 ; 80} என்று அல்லாஹ் சொல்கிறான்.

நெருப்பு, மரத்தைக் கரித்து விடுகிறது. ஆனால் மரத்திலிருந்து, அதுவும் பச்சை மரத்திலிருந்து தான் நெருப்பையே  உண்டாக்குவதாகத் திருக்குர்ஆன் சொல்கிறது.

அந்தக் காலத்தில், நமது நாட்டில் “சக்கி­முக்கி கல்” என்று ஒன்று இருந்தது.நெருப்பு தேவைப்படுவோர் அந்தக் கல்லை ஒன்றோடு ஒன்றை உரசி நெருப்பை உண்டாக்கிக் கொள்வார்கள். காடுகளில் இன்றும் கூட மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது நெருப்பு பற்றி விடுகிறது.

அரபு நாட்டில் “மரக்” ,“அஃபால்” என்று இரு மரங்கள் இருக்கிறது.  மரக் என்பது ஆண் மரம். அஃபால் என்பது பெண் மரம். நெருப்புத் தேவைப்படும் போது அரபு பள்ளத்தாக்கில் காணப்படுகின்ற அந்த இரண்டு செடிகளையும் எடுப்பார்கள். பல் குத்துவதற்கு பயன்படுகிற குச்சியைப் போல இரு குச்சியையும் எடுத்து, ஆண் மரத்தின் குச்சியை பெண் மரத்தின் குச்சியோடு உரசுவார்கள். அங்கிருந்து நெருப்பு பிடிக்கும். இது, நெருப்புப் பற்ற வைக்க அரபுகளின் அன்றாட பழக்கமாக இருந்தது. எனவே தான்


فاذا انتم منة توقدون

“அந்த பச்சை மரத்திலிருந்து நெருப்பை பற்ற வைக்கின்றீர்கள்” என்று அல்லாஹ் சிந்தனையை தூண்டுகிறான்.

இதில் இன்னோரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அஃபால்-மரக் என்ற  மரக்குச்சி எந்தளவுக்கு பசுமையாக இருக்கும் என்றால்,تجري منه الماء  அதிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். தண்ணீர் வழிந்து கொண்டே இருக்கும் அந்த நேரத்தில் அதிலிருந்து நெருப்பு வருகிறது என்று சொன்னால், நெருப்புக்கு முரணான தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் பச்சை மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கும் சக்தி படைத்த அல்லாஹ்வுக்கு நரகத்தின் அடிப்பகுதியில் மரத்தை வெளியாக்க சக்தி இருக்காதா?

முரண்களிலிருந்து முரண்களை படைப்பதில் தான் அல்லாஹ்வுடைய சக்தியும் வல்லமையும் இருக்கிறது என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா!!!


وقال الحكماء في كل شجر نار الا العناب ما من شجر او حجر الا وفيه النار

எல்லா மரத்திலும் நெருப்பு உண்டு.இலந்தை மரம் தவிர.எந்த மரமும்,அல்லது கல்லும் அதில் நெருப்பு இல்லாமல் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


الارض مملوءة نارا ما خلص منه الا قشرتها

பொதுவாக இந்த பூமி நெருப்பினால் சூழப்பட்டு தீயால் நிரப்பப் பட்டிருக்கிறது.அதன் மேல் தொளியைத் தவிர தீயை விட்டும் தப்பிய பகுதி எதுவும் இல்லை.


الماء نفسه مادة نارية 8 اقسامه اكسوجين وهي مادة تشتعل سريعا  9 اقسامه اودرجين

அடுத்து, நெருப்பை அனைக்கும் தண்ணீரை எடுத்துக் கொண்டால் அதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,அதன் மூலப்பொருளே நெருப்பாகும்.தண்ணீர் என்பது, ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் உடைய கலவையாகும். இதில் எட்டு சதவீதம் ஆக்ஸிஜனும் ஒன்பது சதவீதம் ஹைட்ரஜனும் இருக்கிறது. ஆக்ஸிஜன் எளிதில் தீப்பற்றும் ஒரு மூலப்பொருளாகும்.


وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

கடல் பற்றி எரியும் [3 :82]என்று அல்லாஹ் சொல்கிறான். கடல் எப்படி பற்றி எரியும் ? கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறது, கொளுந்து விட்டு எரியும் நெருப்பு இருக்கிறது என்று இன்று ஆய்வுகள் சொல்கிறது.

ஆனால் அன்றே அண்ணல் நபிகள் நாயகம் )ஸல்( அவர்கள்,
ان تحت البحر نارا கடலுக்கு அடியில் நெருப்பு இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். நீரும் நெருப்பும் எப்படி ஒன்று சேரும் ? நெருப்பை நீர் அணைத்து விடுமல்லவா... என்றால்,  கடலுக்கு அடியில் எப்படி நெருப்பு இருக்க முடியும்? என்றால், அல்லாஹ்வால் அது முடியும் என்பதை நாம் நம்புகிறோம்.ஆராய்ச்சிகளும் அதை உறுதி செய்கிறது.
பெரும் புயல் வீசும் போது கடல் அலைகள் அதிக உயரத்திற்கு பொங்கி எழுந்து நெருப்பு ஜுவாலை கிளம்புவதை அனுபவ ரீதியாக உலகம் கண்டிருக்கிறது.


  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ  
என்ற அந்த வசனத்தை [3;82] பிரான்ஸ் நாட்டின் ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். கடலுக்கு அடியில் 30 ஆயிரம் மீட்டர் டர்லிங் செய்து பார்த்தார்கள், அப்போது அங்கே கொதிக்கும் தண்ணீரும்,சேறும் சகதியும் வரத்தொடங்கியது. இன்னும் உள்ளே போகப் போக கொதி மேலும் அதிகமாகி ஒரு கட்டத்தில் அந்த இயந்திரமே உருகி விட்டது என்று நாம் அந்த செய்தியில் பார்க்கிறோம்.

மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை, கப்ருடைய வாழ்க்கை, சொர்க்கம், நரகம் இவையெல்லாம் உண்மை என்று நாம் நம்புகிறோம். இது அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும் அறிவுக்கு முரணான விஷயமல்ல.இது தான் இஸ்லாத்தில் எல்லாக் கொள்கைக ளுக்கும் சட்டங்களுக்கும் உள்ள பொதுவான நிலை. சில விஷயங்கள் இப்போது அறிவுக்கு புலப்படாமல் இருக்கலாம்.ஆனால் எதுவும் அறிவுக்கு எதிரானதாக இல்லை. 

இன்றைய நவீன விஞ்ஞான யகத்தில் இதை நாம் கண்கூடாக விளங்கிக் கொள்ளக்கூடிய உண்மை சம்பவம் கூட பல முறை நிகழ்ந்திருக்கிறது.அறிவுக்கு மறைவான கப்ருடைய வேதனை விஷயமும் கூட அறிவின் வெளிச்சத்தில் பிரகாசிப்பதை இதோ பாருங்கள்.

சைபீரியா நாட்டில் ரஷ்யாவினுடைய ஒரு ஆய்வுக்குழு பூமியைத் தோண்டினார்கள். தோண்டி அதன் மறு பக்கத்தை அடையலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஆறு கிலோ மீட்டர் வரை தான் செல்ல முடிந்தது.அதற்கு மேல் செல்ல முடிய வில்லை.ஒரு தடுப்பு அரண் அவர்களை தடுத்தது. 

அவர்கள் டிரில்லிங் செய்த இயந்திரம் அதற்கு மேல் வேலை செய்ய வில்லை. ஸ்தம்பித்து நின்று விட்டது மட்டுமல்ல அது எரிந்தும் போனது. அங்கே தோண்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு பேயறைந்ததைப் போல அதிர்ச்சிக் குள்ளாகி பீதியோடு மேலே ஓடி வந்து விட்டார்கள்.


என்ன விஷயம் என்று கேட்ட போது, அங்கே பயங்கரமான அலறல் சப்தம் கேட்கிறது.சித்திரவதை செய்யப்படுபவர்கள் எப்படி வேதனை தாங்காமல் அலறுவார்களோ அதுமாதிரியான ஒரு கூப்பாடு அங்கே கேட்கிறது என்று சொன்னார்கள். அது என்ன கூப்பாடு ?கப்ருகளில் வேதனை செய்யப்படுபவர்களின் கூப்பாடு தான்.

பாவிகளின் ஆன்மா சிஜ்ஜீன் எனும் அகல பாதாளத்தில் இருக்கிறது. 


كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ 

கப்ரில் வேதனை நடைபெறுகிறது, சப்தங்கள் வருகிறது, அலறல் கேட்கிறது அதை நான் கேட்கிறேன்,மற்றும் உலகில் வாழும் உயிரினங்கள் மனு ஜின்னைத்தவிர அனைத்தும் அதைக் கேட்கின்றன என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள். இந்த உண்மையைத்தான் அந்த தொழி லாளர்கள் நேரிலே கேட்டு விட்டு வந்தார்கள்.

நான் சிறு வயதாக இருக்கும் போது இஷாவுக்குப் பிறகு ஒரு கப்ரு தீப்பற்றி எரிவதை நானும் பள்ளிவாசல் மோதினாரும் பார்த்திருக் கிறோம்.அன்று தான் அங்கே பிரபல்யமான வட்டி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அடக்கும் செய்யப்பட்டிருந்தது. இப்படி சில சமயத்தில் மறைவான இந்தக் காட்சிகளை அல்லாஹ் காணவும்,கேட்கவும் வைக்கிறான்.

இவ்வாறு திருக்குர்ஆன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எத்தனை ஆயிரம் கேள்விகள் அதில் கேட்கப்பட்டாலும், மாற்றத் தகுந்ததல்ல. அது மாற்று குறையாத தங்கம் தான் என நிரூபணமாகியிருக்கிறது.

ரப்புல் ஆலமீன் அத்தகைய குர்ஆனை நமக்கு தந்திருக்கிறான், அதன் படி நடப்போம், ஈருலகிலும் நாம் வெற்றி பெறுவோம். அல்லாஹ் நமது ஈமானை வெளிச்சமாக்குவானாக. ஆமீன்.


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு