அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Monday, September 12, 2016

ஹஜ்ஜு அவசரம் !!!


وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

எவர்கள் அங்கு [மக்காவுக்கு] பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார் களோ அத்தகைய மனிதர்களின் மீது அல்லாஹ்வுக்காக [அங்கு சென்று] அந்த ஆலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும். எவரேனும் [இதை] நிராகரித்தால் [அதனால் அல்லாஹ்வுக்கும் ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்] நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கிறான். [3 ; 97]

ஹஜ்ஜு என்பது வசதியான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜுக் கடமை மிக முக்கிய மானதொரு கடமை.அது இறுதிக் கடமையல்ல. நிறைவைத்தரும் ஓர் கண்ணியமான கடமை.இறுதிக் கடமை ஹஜ்ஜு என்று சொல்லிச் சொல்லி வாழ்வின் கடைசி காலத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தப்பான ஒரு சிந்தனை எப்படியோ நமது மூளையில் புகுந்து ஹஜ்ஜை முதுமைப் பருவத்திற்குத் தள்ளி விட்டது.

ஹஜ்ஜு முதுமைக் கடமையல்ல.முழுமையான கடமை, முழுமையாக்கும் கடமை.ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வரும் ஹாஜி,அன்று பிறந்த பாலகனாக பாவமற்ற அப்பாவி முஸ்லிமாக மாறி வருகிறார்.ஆகவே அதற்குப் பிறகு எந்தப் பாவமும் செய்யாது எந்தப் பாவக்கணக்கையும் தொடங்காது தூய்மையாகவே வாழ்க்கையைத் தொடர வேண்டும். இதற்கு வசதியாக வயதான பிறகு இதை செய்கிறார்கள்.

இதன் அர்த்தம் என்ன ? செய்ய நினைக்கும் எல்லா பாவத்தையும் செய்து முடித்த பிறகு கடைசியாக பாவம் செய்ய முடியாத வயோதிகப் பருவத்தில் ஹஜ்ஜை முடித்து வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.எல்லா பாவத்தையும் செய்து முடித்து விட்டு கடைசியாக ஹஜ்ஜு செய்யலாம் என்று நினைப் பவர்,ஹஜ்ஜு செய்யும் வரை அவர் உயிரோடு இருப்பார் என்று யார் உத்தரவாதம் கொடுத்தார்கள் ? இதற்கிடையில் இவருக்கு மரணம் வராது, வரவே வராது என்று இவருக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் யார் ? இதை நாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா ?

ஏன் இளமையிலேயே ஹஜ்ஜை முடித்து முழுமை பெற்று தூய்மை யாக வாழ்வைத் தொடங்கி தூய்மையாகவே ஏன் வாழ்வைத் தொடரக்கூடாது ? இப்படி ஏன் சிந்திக்கக் கூடாது?  ஹஜ்ஜை அந்திம காலத்திற்கு ஒத்தி வைப்பது இளமையில் இடைபட்ட காலத்தில் பாவம் செய்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை நமக்கு நாமே உருவாக்கித் தருவதாகும். இளமையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவது வாலிபத்தி லேயே பாவத்திற்கு முள்வேலி போடுவதும்,இளமையிலேயே இறையச்சத்திற்கு இரை போட்டு தூய்மைக்கு தூபமிடுவதுமாகும்.

இளமையில் இறை மறுப்பை,இறை வெறுப்பை,இறைவனுக்கு மாறு செய்வதைத் தடுக்கும் அரணாக அமையும் இளமை ஹஜ்ஜு சிறந்ததா ?வாலிபத்தில் சல்லாபத்திற்கும், எல்லா பாவத்திற்கும் வலிகோலும் வயோதிக ஹஜ்ஜு சிறந்ததா ? இப்படி சிந்திக்க வேண்டாமா ?

ஒரு முஸ்லிமுக்கு உடல் வலிமை,பொருளாதார வசதி, பயணப்படும் பாதை,அமைதி,பாதுகாப்பு இருந்தால் ஹஜ்ஜு செய்வது கடமையாகி விடும்.இந்த வசதி ஒருவருக்கு வாலிபத்தில வந்தால் அவர் இளமை யிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமையாகும்.முதுமைக்கு தள்ளிப் போடக் கூடாது.அவருக்கு ஹஜ்ஜு இறுதிக் கடமையல்ல. மாறாக தொழுகை,நோன்பிற்கு அடுத்து மூன்றாவது கடமை. ஏனென்றால் பணம் வந்தவுடன் ஜகாத் கடமையாகாது.அது ஒரு வருடம் முழுமையாக சேதமில்லாமல் அவருடைய சேமிப்பில் அப்படியே இருந்தால் தான் கடமையாகும்.

ஒருவருக்கு நோன்பு முடித்து ஹஜ்ஜு செய்யும் வசதி வந்தால் அவருக்கு தொழுகைக்குப் பிறகு ஹஜ்ஜு இரண்டாவது கடமை. ஆயுளில் ஒருமுறை எப்போது செய்தாலும் கடமை நிறைவேறி விடும்.ஆனால் அதற்கிடையில் ஹஜ்ஜு கடமையாகி அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவர் குற்றவாளியாவார்.

ஹஜ்ஜு கடமையாகி பல வருடங்கள் கழித்து பின்னர் அதை மரணித்திற்கு முன் நிறைவேற்றி விட்டால் குற்றவாளியாக மாட்டார் தான்.ஆனால் மரணம் அவர் கையில் இல்லையே. அதனால் உடன் நிறைவேற்றுவது தானே உத்தமம்.

தொழுகையை அதற்குரிய நேரம் கழிந்த பின் நிறைவேற்றினால் அது களா.அவ்வாறே நோன்பை ரமலானுக்குப் பிறகு நிரை வேற்றினால் அது களா.ஆனால் ஹஜ்ஜை  அது கடமையான பின் அதாவது அதற்கான வசதி வந்த பின் பல வருடம் கழித்து நிறைவேற்றினாலும் கூட அது அதா தான். களா அல்ல. ஆயினும்.எவ்வளவு சீக்கிரம் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹஜ்ஜுக்கு சென்று விட வேண்டும்.


ஏனெனில் ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் ஏவினார்கள் ;


عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَرَادَ الْحَجَّ فَلْيَتَعَجَّلْ

ஹஜ்ஜு செய்ய நாடினால் உடன் சீக்கிரம் செய்து கொள்ளட்டும்  [அபூதாவூது]

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجَّلُوا إِلَى الْحَجِّ يَعْنِي الْفَرِيضَةَ
 فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَعْرِضُ لَهُ

சீக்கிரம் ஹஜ்ஜு செய்யப் புறப்படுங்கள்.காரணம்,உங்களில் ஒருவர் அறிய மாட்டார்.அவருக்கு என்னவெல்லாம்    [தடங்கள் பின்னால்] ஏற்படும் என்று. [முஸ்னது அஹ்மது]

அப்போ...இறுதிக்கடமை ஹஜ்ஜு என்று சொல்கின்றார்களே அது எப்படி என்றால்.....ஐந்து இஸ்லாமியக் கடமைகளில்,அவை கடமையான வருட வரிசையை வைத்துப் பார்த்தால் அது ஐந்தில் இறுதியாக கடமையானது என்ற பொருளில் அப்படி சொல்லப் படுகிறது.

முதலில் ஈமான் – நம்பிக்கை தான் கடமையானது.அப்புறம் தொழுகை. தொடர்ந்து ஜகாத்.இம்மூன்றும் ஹிஜ்ரத்திற்கு முன்னர் மக்கா வாழ்க்கை யில் வைத்தே கடமையாகி விட்டது.ஜகாத்தின் சட்ட திட்டங்கள் அதன் அளவு போன்ற விபரங்கள் மதீனாவில் இறங்கினால அதன் கடமை மக்கா விலேயே இறங்கி விட்டது.தொழுகையை கூறுமிடத்திலெல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே அல்லாஹ் மொத்தம் 82 இடங்களில் கூறுகிறான். நான்காவது, நோன்பு ஹிஜ்ரி 2 ல் கடமையானது.ஐந்தாவது ஹஜ்ஜு ஹிஜ்ரி 3 அல்லது 6 ல் கடமையானது.இந்த வரிசையில் ஐந்தாவதாக இறுதியில் கடமையானது ஹஜ்ஜு என்ற அர்தத்தில் தான்“இறுதிக்கடமை ஹஜ்ஜு” என்று சொல்லப்படுகிறதே தவிர இறுதியாக நிறைவேற்ற வேண்டிய கடமை என்ற பொருளில் அல்ல.

இதல்லாமல் ஹஜ்ஜில் உடல் உழைப்பிற்கு அதிக வேலை இருக்கிறது. முதலில் நீண்ட துர பயணம்.பயணத்தில் ஏற்படும் சிரமம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இரண்டாவது,ஹஜ்ஜுக் கடமையே ஓடுவதும் நடப்பதும் தான்.மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும். சமான்களை தூக்கி சுமக்க வேண்டும்.இதற்கெல்லாம் வாலிபத்தின் வலிமை இருந்தால காரியங்கள் சுலபமாகும். இல்லையென்றால் சிரமமாகும்.

முதுமையின் தளர்ச்சி,அயர்ச்சி பாரதூரமான ஹஜ்ஜின் செயல்பாடுகளுக்கு சுகம் தராது.மாறாக முதுமை, ஹஜ்ஜுக்கு சுமையாகும்.ஆகவே

இளமையும்,துடிப்பும்,ஆரோக்கியமும்,ஆர்வமும் இருக்கும் போதே ஹஜ்ஜை நிறைவேற்றிடப் புறப்படுங்கள்.அதிக வயதான பிறகு தான் இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு கிளம்புகிறார்கள்.ஆனால் நல்ல இளமைப் பருவத்திலேயே திடகாத்திரமாக இருக்கும் போதே மலேசியாவிலும், இந்தோநேசியாவிலும் ஹஜ்ஜை நிறைவேற்றி விடுகிறார்கள்.இது பாராட்டத்தக்க மெச்சத்தக்க ஒரு காரியம்.
نا يعلى بن الأشدق قال : سمعت عمي عبد الله بن جراد ، يقول : قال رسول الله صلى الله عليه وسلم : « حجوا ، فإن الحج يغسل الذنوب كما يغسل الماء الدرن »رواه الطبراني

ஹஜ்ஜு செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக ஹஜ்ஜு என்பது தண்ணீர் அழுக்கை கழுவி சுத்தம் செய்வது போல பாவங்கள் கழுவி சுத்தம் செய்து விடும்.[தப்ரானி]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ.رواه الترمدي وابن ماجه وابن خزيمه.وفي رواية البيهقي فإن متابعة بينهما يزيدان في الأجل.

ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவ்விரண்டும் வறுமையைப் போக்கும்.பாவத்தைப் போக்கும்.நெருப்பு உலை இரும்பின் துருவை,தங்கம், வெள்ளியின் அழுக்கை போக்குவது போல. பைஹகியின் அறிவிப்பில் ;அவ்விரண்டும் ஆயுளை அதிகரிக்கும் என்று கூடுதல் இணைப்பு உள்ளது."ஹாஜி ஒரு போதும் ஏழையாக மாட்டார்" [நபிமொழி]

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு