அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Monday, September 12, 2016

மப்ரூரான ஹஜ்ஜு !!!!الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ

ஹஜ்ஜு அதற்கென குறிப்பிட்ட மாதங்கள் தான். [2 ; 197]

இது ஹஜ்ஜுடைய காலம்.அதாவது ஷவ்வால்,துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகும்.இதற்கு முன்னர் அல்லது இதற்கு பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட முடியாது.கட்டினாலும் செல்லாது. [ஹனஃபி மத்ஹபில் செல்லும். ஆனால் மக்ரூஹ்] ஆனால் உம்ராவுக்கு கால நேரம் குறிப்பில்லை. எப்போதும் அதற்கு இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.
                                                    
இப்போது உலகெங்கிலும் நாலா பாகங்களிலிருந்தும் எட்டு திக்கு களிலிருந்தும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம்.இந்த ஹஜ்ஜின் மாண்பை, சிறப்பைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ

மப்ரூரான ஹஜ்ஜு,அதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை.உம்ரா to உம்ரா அவ்விரண்டுக்கு மிடையேயுள்ள பாவங்களுக்குப் பரிகாரமாகும்.[புகாரி,முஸ்லிம்]
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ

நபித்தோழர் அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் 
;அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்களிடம் எந்த அமல் சிறந்தது என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது என்று பதிலளித்தார்கள்.பின்னர் எது [சிறந்தது] என்று கேட்கப்பட்டது.அப்போது அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது என்றார்கள்.பின்னர் எது எனக் கேட்கப்பட்டது.மப்ரூரான ஹஜ்ஜு என்று கூறினார்கள். [புகாரி,முஸ்லிம்]

                 
மப்ரூரான ஹஜ்ஜு என்றால் என்ன ?

1 – விதிமுறை மீறப்படாத ஹஜ்ஜு.
2 – ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜு.
3 – முகஸ்துதி இல்லாத ஹஜ்ஜு.
4 – பாவம் கலந்திடாத ஹஜ்ஜு.
5 – அன்னதானம் வழங்குவது,ஸலாமைப் பரப்புவது.
6 – இமாம் ஹஸன பஸரி [ரஹ்] அவர்கள் கூறுவார்கள் ;மப்ரூரான ஹஜ்ஜு என்பது கடைசி நிலையைக் கொண்டு தான் வெளிப்படும்.அதாவது.


ان يرجع زاهدا في الدنيا راغبا في الاخرة.

ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வருகிற போது உலகப்பற்றற்று மறுமைப் பற்றுடன் திரும்புவதாகும்.

7 – ஹஜ்ஜுக்கு முந்திய நிலைமையை விட ஹஜ்ஜுக்கு பிந்திய நிலைமை நல்லதாக,சிறந்ததாக இருப்பதாகும்.இப்படி பல்வேறு விளக்கங்கள் விளம்பப்படுகிறது.           

ஹஜ்ஜை முடித்து திரும்பக்கூடியவர்கள் பல நிலைகளில் இருப்பதைப் பார்க்கிறோம்.சிலர் ஹஜ்ஜில் மரணித்து விடுகிறார்கள்.சிலர் இறைநேசர் களாக ஏற்றம் பெற்று திரும்புகிறார்கள்.மேலும் பல ஹாஜிகளின் வாழ்க்கை ஹஜ்ஜுக்குப் பிறகு மிகச்சிறப்பாக மாறி விடுகிறது.முன்பு கெட்டவராக இருந்திருந்தால் இப்போது நல்லவராக,முன்பு நல்லவராக இருந்திருந்தால் இப்போது ரொம்ப நல்லவராக,முன்பு கோபப்படக்கூடிய வராக இருந்திருந்தால் இப்போது சாந்தமானவராக மாறிவிடுகிறார்கள்.

சிலபேருக்கு ஹஜ்ஜுக்குப் பிறகு அவர்களது வாழ்க்கையிலே அவர்களின் போக்கிலே அணுகுமுறையிலே எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. அப்படியே தான் இருப்பார்கள்.அல்லது அதை விட - முந்தைய நிலைமை யை விட படுமோசமாக மாறி இருப்பார்கள்.இதற்கெல்லாம் என்ன காரணம் ?
கஃபாவைக் கட்டி முடித்த பிறகு உலக மாந்தர்களை ஹஜ்ஜுக்கு வருமாறு அழைக்கும்படி நபி இப்ராஹீம் [அலை]அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்.அதை ஏற்று அவர்களும் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார்கள்.


وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

[அவரை நோக்கி] ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள்.[அவர்கள்]  கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்.இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் [உங்களிடம்] வருவார்கள். [22 ; 27]

இது ஆத்ம உலகில் இருந்த,இருக்கிற ஆன்மாக்களை நோக்கி விடுக்கப்பட்ட அழைப்பாகும்.இந்த ஆன்மாக்கள் எல்லாம் இதைக் கேட்டன.எந்த ஆன்மா இதை கேட்டதோ அவர்களுக்கு மட்டும் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது.ஆண்களின் முதுகந்தண்டில், பெண்களின் கற்பப்பையில் இருந்தவர்களிலும் இதைக் கேட்டவர்கள் பதில் சொன்னார்கள்.யார் எத்தனை முறை பதில் சொன்னார்களோ அத்தனை முறை அவர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது. ஒருமுறை சொன்னவருக்கு ஒரு முறை.இரு முறை அல்லது அதிகமாக சொன்னவர்களுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்ய முடிகிறது என்று கூறும் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள : இதிலிருந்து தான் தல்பியா [லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க] முழக்கம் பிறந்தது.அன்று அவர்கள் பதில் சொன்னதின் வார்த்தை வடிவம் தான் இந்த தல்பியா  என்று தொடர்ந்து விவரிக்கிறார்கள். [தஃப்ஸீர் தப்ரி,இப்னு கஸீர்,குர்துபி]

ஹாஜிகளின் இன்றைய,அன்றைய தல்பியா முழக்கதின் மூலாதாரம் இந்த மூல முதல் பதில் வாசகம் தான்.முதலில் லப்பைக்க என்று தல்பியா முழங்கி பதில் சொன்னவர்கள் யமன் வாசிகள் என்றும் எனவே தான் அவர்கள் உலக மக்களில் அதிக ஹாஜிகளாக இருக்கிறார்கள் என்றும் ரிவாயத்தில் [அறிவிப்பில்] வந்துள்ளது.

இதனால் தான்  اتاكم اهل اليمن هم ارق والين قلوبا الايمان يمان والحكمة يمانية  யமன்வாசிகள் உங்களிடம் வருவார்கள்.அவர்கள் மென்மையான இதயமுள்ளவர்கள். ஈமான் – இறை நம்பிக்கையே யமன் தான்,ஞானம் என்பது எமனைச் சார்ந்ததாகும். என்று எம்பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள். [புகாரி,முஸ்லிம்]


عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ إِنِّي عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا فَدَخَلَ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا أَهْلَ الْيَمَنِ إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ قَالُوا قَبِلْنَا جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ

இதே யமன்வாசிகளைப் பார்த்துத்தான் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; பனூதமீம் ஏற்றுக் கொள்ளாத நற்செய்தியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.அப்பொழுது அவர்கள் "நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.நாங்கள் உங்களிடம் வந்ததே ஞானம் பெறுவதற்குத்தான்" என்றார்கள்.


عَنِ ابْنِ عُمَرَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ ، قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ : قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ ، قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ : قَالَ هُنَاكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ

யா அல்லாஹ்! யமனிலும் ஷாமிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்று பெருமானார் [ஸல்] அவர்கள் பிரார்த்தனை செய்த போது அங்கிருந்த சிலர் எங்களது நஜ்திலும் பரக்கத்திற்கு பிராத்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவ்வாறு பிராத்தனை செய்யாமல் மௌனமாக இருந்தார்கள்.தொடர்ந்து மூன்று அவர்கள் தங்களது கோரிக்கையை வைத்த போது அங்கே குழப்பங்களும்,நடுக்கங்களும் ஏற்படும்.அங்கே தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று பதிலளித்து பிரார்த்தனை புரிய மறுத்து விட்டார்கள். [புகாரி]

இந்த நபிமொழியின் ஒளியில்,வரலாற்று வெளிச்சத்தில் பார்த்தால் ஷாமிலியே அதிகமாக நபிமார்களும்,யமனிலே அதிகமான வலிமார்களும் தோன்றினார்கள்.நஜ்திலிருந்து [இப்போதைய ரியாத்] தான் ஷைத்தானின் கொம்பான வஹ்ஹாபியத்தின் ஃபித்னா [குழப்பம்] கிளம்பியை உலகம் கண்டது.

சூரத்து நஸ்ரில் [110] அல்லாஹ்வுடைய உதவியும்,வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் பிரவேசிப்பதை நீங்கள் பார்த்தால்.......என்ற வசனத்தின் படி யமனிலிருந்து தான் மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தார்கள்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் [அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்று மில்லை.உங்களைப் போக்கி] வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான்.அவன் அவர்களை நேசிப்பான்.அவர்களும் அவனை நேசிப்பார்கள்.......[5 ; 54] என்ற வசனம் இறங்கிய போது அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அங்கே இருந்து அபூமூஸல் அஷ்அரி ரலி அவர்களைப் பார்த்து هم قومك يا ابا موسي  அபூமூஸாவே! அவர்கள் உமது மக்கள் தான் எனப் புகழ்ந்து கூறினார்கள்.

ஹளரத் உவைஸுல் கரனி [ரலி] அவர்கள் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதும் யமன் நாட்டின் சிறப்பிற்கு அணி சேர்ப்பதாகும்.

நான் யமனிலிருந்து ரஹ்மானின் மூச்சுக்காற்றை – அருள் வசந்தக் காற்றை உணருகிறேன் என்று ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் இயம்பியதும் கூட இதன் அளவில் உள்ள சமிக்கை தான்.
ஆக அல்லாஹ் இப்ராஹீம் நபி {அலை} அவர்களை ஹஜ்ஜுக்கு வரும்படி அனைவரையும் அழைக்கும்படி கட்டளையிட்டான். அவ்வாறே ஜிப்ரயீல் [அலை]அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைக்கும்படி ஏவினான்.அதன்படி அவர்களும் அழைத்தார்கள். நிறைவாக அல்லாஹ்வும் நேரடியாக ஹஜ்ஜுக்கு வருமாறு அழைத்தான்.இப்படி எல்லோரும் அழைப்பதை பார்த்ததும் இப்லீஸும் தன் மூக்கை இதில் நுழைக்க ஆசைப்பட்டு நானும் அழைப்பு விடுக்கவா ? என அல்லாஹ்விடம் கேட்டான்.நீயும் கூப்பிடு என்று அவனுக்கும் வாய்ப்பு தரப்பட்டது.

எல்லோரும் கூப்பிட்டார்கள்.அல்லாஹ் அழைத்தான்.இப்ராஹீம் நபி [அலை] அவர்கள் அழைத்தார்கள்.ஜிப்ரயீல் [அலை] அவர்கள் கூவி அழைத்தார்கள்.இப்லீஸும் சப்தம் போட்டான்.இப்போது யாருடைய அழைப்பைக் கேட்டு ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு சென்றார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது ?

அறிந்து கொள்ள முடியும்.ஹஜ்ஜுக்குப் பிறகுள்ள ஹாஜிகளின் நிலைபாட்டை வைத்து இதை அறிந்து கொள்ள முடியும். யாருடைய அழைப்பைக் கேட்டு ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு சென்றார்களோ அவர்களின் ஆதர்சனம்,ஆவர்த்தனம் ஹாஜிகளின் வாழ்வில் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.

அல்லாஹ்வின் அழைப்பைக் கேட்டவர்கள் அவ்லியாக்களாக – இறைநேசர்களாக திரும்புவார்கள்.ஆன்ம பலமும்,பாக்கியமும், பரிசுச்சமும் உடையவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் அழைப்பை நேரடியாக கேட்க முடியும்.

ஜிப்ரயீலின் அழைப்பைக் கேட்டவர்கள் ஹஜ்ஜில் மரணித்து விடுவார்கள். அந்த மலக்கின் சப்தம் கேட்ட ஆன்மா மரணிக்காமல் இருக்க முடியாது. முந்திய சமூகத்தில் சில கூட்டம் சப்தம் கொண்டு அழிக்கப்பட்டதாக அல்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.அது ஜிப்ரயீலின் சப்தம் தான். ஜிப்ரயீலின் சப்தம் கேட்டால் மனித மனம் மூச்சற்றுப் போகும்.

இப்லீஸின் அழைப்பைக் கேட்டு ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் அவர்களின் வாழ்க்கையில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படாது. ஹஜ்ஜுக்குப் பிறகு யாருடைய வாழ்க்கை சீராக வில்லையோ சிறப்பாக வில்லையோ மாறாக மிகவும் மோசமானதாக இருக்கிறதோ அவர்கள் யார் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

யார் இப்ராஹீம் நபி [அலை] அவர்களின் அழைப்பைக் கேட்டு ஹஜ்ஜுக்கு சென்றார்களோ அவர்களின் வாழ்க்கை முன்பை விட மேலானதாக இருக்கும்.அன்பில்லாதவர் அன்புள்ளவராகவும் பண்பில்லாதவர் பண்புள்ளவராகவும் பொறுப்பில்லாதவர் பொறுப்புள்ளவராகவும் அநியாயக்காரர் நியாயவாதியாகவும் இபாதத் –வணக்க வழிபாடு இல்லாதவர் அல்லது குறைவான வணக்கசாலி வணக்கசாலியாக அதிக வழிபாடுள்ளவராக ஹஜ்ஜுக்குப் பிறகு மாறி விடுவார்.இது தான் மப்ரூரான – ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளமாகும்.

ஆக அல்லாஹ்வின் அழைப்பை,ஜிப்ரயீலின் அழைப்பை இப்ராஹீம் நபியின் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக்குச் சென்றவர்களின் ஹஜ்ஜு ஹஜ்ஜுன் மப்ரூர் – ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜு ஆகும்.இதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை என பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.


என்றும் தங்களன்புள்ள.

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு