அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!
اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا
அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (65:12)
கடந்த 8 - 3 – 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட போயிங் 777 – 200 ரக மலேஷியா விமானம் வியட்நாமிய வின்வெளி யில் தென்சீனக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது அது ராடாரிலிருந்து மறைந்து காணாமல் போனது.அதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும்,12 சிப்பந்திகளும் இருந்தனர்.இதில் இரண்டு கைக்குழந்தைகள்.
அந்த விமானம் என்ன ஆனது? அதிலிருந்த பயணிகள்,சிப்பந்தி களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதில் இந்த விமானத்திற்கு நேர்ந்தது துயரம் என்றால்,அதற்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் இருப்பது இதை விட பெரிய ஒரு துயரமாகும்.
காணாமல் போய் விட்ட இந்த விமானத்தை வல்லரசுகளான அமெரிக்கா,சீனா உள்ளிட்ட 25 நாடுகள் தேடுகின்றன. 50 – க்கும் மேற்பட்ட கப்பல்கள்,40 – க்கும் மேற்பட்ட விமானங்கள் இதை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.தேடும் பணி இரு விரிவான மண்டலங்களில் நடந்து வருகின்றது.அதன் வடக்கு மண்டலம் லாவோஸிலிருந்து காஸ்பியன் கடல் வரை நீடிக்கிறது.தென் மண்டல தேடும் பணி இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியி லிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாக ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதி வரை நீள்கிறது.
சீனா தன்னிடமிருக்கும் 10 ஹைரெசல்யூஸன் சேட்டர்லைட்டுகளை தேடும் பணிக்காக திருப்பி விட்டுள்ளது.செயற்கைக் கோள் மூலமாக எல்லா நாடுகளின் மீதும் தனது இரகசிய கண்காணிப்பை நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் தனது தேடும் பணியை துவக்கி பல நாளாகியும் இந்த விமானம் குறித்த எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியவில்லை.வான் பரப்பில் விமானம் ஒன்று வெடித்ததற்கான தீப்பொறி சான்றுகள் எதுவும் அவர்களது செயற்கைகோள் கேமரா காட்சிப் பதிவுகளில் இல்லை.
இது நவீன தொழில் நுட்ப யுகம்.ஸ்மார்ட் ஃபோன்களின் வழி, தொலைபேசி அழைப்பின் வழி எங்கிருந்து பேசுகிறார் என்பதனை அறிந்து கொள்ளும் காலம் இது.இணைய தளத்தின் வழி நீங்கள் ஆஃப்ரிக்காவில் இருக்கிறீர்களா அமெரிக்காவில் இருக்கிறீர்களா என்று கூற முடியும்.கூகுள் வழி நீங்கள் இருக்கும் சரியான இடத்தைக் கண்டு பிடிக்க முடியும்.விமானங்களில் பயணம் செய்யும் போது பயணிகள் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்று வரை படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறிருக்க M.H.370 விமானம் எங்கே இருக்கிறதென்று நமக்கு எப்படி தெரியாமல் போகும்? என்று கேள்வி எழுப்பும் வாஷிங்டன் போஸ்ட், தற்போதைய தொழில் நுட்பத்தில் இன்னும் குறைகள் இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளது.
ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவு கடல் கடந்து போய் எதிரிகளின் இலக்குகளை சரியாகத் தாக்கும் ஏவுகனைகளையும், அவற்றைத் திசைமாறாமல் கணிணி மூலமாகவே செலுத்தும் தொழில் நுட்பத்தையும் உருவாக்கத் தெரிந்த விஞ்ஞான உலகம்,மாறிமாறி செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தி பூமி முழுவதும் எங்கள் ஆட்சியே என மார்தட்டிக் கொள்ளும் அறிவியல் உலகம், ஒரு விமானம் திடீரென்று காணாமல் போனது. அதற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று தலைகுணிந்து தனது அறியாமை யையும், ஆற்றாமையையும் சொல்லும் நிலையில் தான் இன்னும் உள்ளது. என்னதான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் புதுப்புது பலவீனங்கள், அறியாமைகள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன.
இந்த இடத்தில் இமாம் ஷாஃபி [ரஹ்] அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
كلما ازددت علما ازددت جهلا
“எனது கல்வியறிவு கூடிய போதெல்லாம் எனது அறியாமையும் கூடியதைக் கண்டேன்.
மின்னியல் போர்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ராடாரிலிருந்து M.H. 370 விமானத்தை மறைப்பது சாத்தியமற்றது. ஒரு பொருளைக் கண்ணுக்குப் புலனாகாதவாறு செய்யும் மின்னியல் மறைப்புத் தொழில் நுட்பம் இன்னும் தொடக்க நிலை ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. அது இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அது எளிதில் கிடைப்பதுமில்லை. அத்துடன் ஒரு விமானம் பறக்கும் போது அது போன்றதொரு மறைப்பு சாதனத்தை விமானத்தில் பொருத்துவதும் சாத்திமற்றதாகத் தெரிகிறது என அத்தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ஜியார்ஜ் எஸ் தெரியாட்ஸ் விவரித்துள்ளார்.அவர் டொரன்டோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளராவார்.
35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமான வடிவமைப்புக் கோளாறு காரணமாக பிய்த்துக் கொண்டு போயிருக்கலாம் என்று சொல்லப்படும் விவாதங்கள் வானூர்தி தொழில் நுட்பத்தையே கேலிக்கு உள்ளாக்குகின்றன. காரணம், 1994 –ம் ஆண்டு அதிநவீன தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட போயிங் 777 – 200 ரக இந்த விமானம் “ஆகாயத்தின் ரானி” என அழைக்கப்பட்டது. மிகப்பெரிய வடிவமைப்பைக் கொண்ட இந்த வகை விமானத்திற்கு [மனிதனுக்கு இரண்டு சிறுநீரகம் இருப்பது போல] இரட்டை இயந்திரங்கள் உள்ளன. ஒன்று பழுதானால் ஒன்று இயங்கும்.
v இந்த விமானத்திற்கான இயந்திரம் ETOPS -180 எனும் உயர்தர அங்கீகாரத்தைப் பெற்றதாகும்.
v பிராட் அன்ட் விட்னி 4070, ரோல்ஸ்ராய்ஸ் தி ரெண்ட் 877, ஜெனரல் எலக்ட்ரிக் ஜி இ 90 – 77 பி எனும் இயந்திரத்தை இந்த விமானம் கொண்டிருக்கிறது.
v தரையிரங்கும் போது ஒவ்வொரு கியருக்கும் 6 சக்கரங்களைக் கொண்டதாக இந்த விமானம் தயாரிக்கப் பட்டிருக்கிறது.
v இந்த விமானத்தில் அதிகபட்சமாக 1,17,340 லிட்டர் எண்ணெய் நிரப்ப முடியும்.
v 35,000 அடி உயரத்தில் 0 – 84 MACH எனும் வேகத்தில் இந்த விமானம் பறக்க முடியும்.
இந்தளவு தரமான இந்த விமானம், வடிவமைப்புக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி இருந்தால் வானூர்தி தொழில் நுட்பத்தின் கோளாறைத்தான் இது பறைசாட்டுகிறது.
அல்லது அது எங்கே போனது? என்ன ஆனது?என்றே தெரிய வில்லையென்றால் நவீன தகவல் தொழில் நுட்பத்தின் குறைபாட்டைத் தான் காட்டுகிறது.
ஆக, எது எப்படி இருந்தாலும் இந்த சம்பவம் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால்; “அறிவிலும், ஆற்றலிலும் மனிதன் மேம்பட்டிருந்தாலும் அவ்விரண்டிலும் அவன் மட்டுப் படுத்தப்பட்டவன் தான். அவனுக்குத் தெரியாத விஷயங்களும், அவனால் முடியாத காரியங்களும் அனேகம் இருக்கின்றன. அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவன் பூஜ்ஜியம். அல்லாஹ் வுக்குப் பிறகு தான் அவனுக்கு மதிப்பும், சக்தியும், ஞானமும் எல்லாம் ஏற்படுகிறது.அதுவும் அவன் அளித்த அறிவும் ஆற்றலும் தான்.அவனுக்கு சுயமாக எதுவுமே இல்லை” என்பது தான்.
தொழில் நுட்பக்கோளாறுகளும்,குறைகளும்,பாதுகாப்புக் குளறுபடிகளும், குறைபாடுகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பது முழுமைப் பெறாத மனித அறிவையும், ஆற்றலையும் அவனுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.
2009 –ல் ஏர்பிரான்ஸ் 447 விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போதே காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகளின் எலும்புக் கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபத்துக்குக் காரணம் தெரிய வர மேலும் இரண்டு வருடம் ஆனது. அதுமாதிரி இப்போதும் ஆகிவிடக்கூடாது.
மனிதனுடைய அறிவும் ஆராய்ச்ச்சியும் அதிகமாகிக்கொண்டே இருந்தாலும் அவனது ஆய்வுத் தொழில் நுட்பத்தில் பலவீனங்கள் இருக்கிறது என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் பிரபலமான ஒரு முஸ்லிம் தொழில் அதிபரும் அவரது மனைவியும் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளந்தது. இத்தனைக்கும் இவ்விபத்துக் குள்ளான கார் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன பென்ஸ் காராகும். இதன் விஷேசம் என்ன வென்றால் ; இந்தக்கார் விபத்துக்குள்ளானாலும் இதனுள் பயணம் செய்வோருக்கு பலத்த அடியோ, ஆபத்தோ ஏற்படாதவாறு இதனுள் இருக்கும் குஷன் கவர் இவர்களை மூடிக்கொள்கிற அமைப்பில் வடிவமைக்கப்பட்டது.
இந்த பென்ஸ் கார் எப்படி பிளந்தது? பாதுகாப்பான தங்களது கார் தயாரிப்புத் தொழில் நுட்பத்தில் எங்கே எப்படி கோளாறு வந்தது? என்பதைக் கண்டறிய விபத்துக்குள்ளான அந்தக்காரை ஜெர்மனிக்கு கொண்டு சென்றனர்.
தரமான எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் மறு ஆய்வுக்கு உட்பட்டது தான் என்பது மட்டுமல்ல எந்தத் தொழில் நுட்பமும் இறைவிதிக்கு முன்பு தூள்தூளாகி விடும் என்பதை இந்தக் கார் விபத்து நிரூபித்தது. படைப்பினங்கள் பெற்றிருக்கும் சக்தி அதிகமானாலும் அது அளவானது தான். மனித அறிவு அபரிமிதமானது தான். ஆனால் சிலவேளை அபத்தமான தாகவும், ஆபத்தானதாகவும் ஆகிவிடுகிறது.அவனது குறைமதியும், குறுமதியும் கூர்மழுங்கி குறிதவறி விடுவதும் உண்டு. அதனாலேயே விபத்துக்கள் சம்பவிக்கின்றன.
ஆட்சி, அதிகாரம், வல்லமை, ஆளுமை எல்லாம் யாருக்கும் எதற்கும் எப்போதும் எங்கேயும் நிரந்தரமானதல்ல. அது கைமாறிக் கொண்டும்,கை நழுவிக் கொண்டும் இருக்கும். நாட்டில் மட்டுமல்ல காட்டிலும் இது தான் விதி.
காட்டு ராஜா சிங்கத்தின் தர்பார் நடைபெறும் வனத்தில் சிலவேளை அது வீழ்த்தப்படுவதும் உண்டு என்பதை அண்மையில் யூ டியூபில் ஒரு விசித்திரமான காட்சியைப் பார்த்துத் தெரிந்திருப்பீர்கள். அதில் ஒரு மாடு ஒரு சிங்கத்தை தனது முரட்டுக் கொம்பால் குத்தி தூக்கி வீசிக் கொல்கிறது.
பொதுவாக சிங்கம் ஒரு இரையைத் தாக்க முற்படுகிறபோது இரையின் இனங்கள் உதாரணமாக காட்டு எருமை மாடுகள் அல்லது மலாக்கள் ஒன்று சேர்ந்து இதைச் சுற்றி அணிவகுத்து நின்றால் சிங்கம் தனக்குக் கிட்டிய இரையை மேலும் தாக்கிக் கொல்லாமல் அப்படியே விட்டுவிட்டு விலகி விடும். இப்படி சிங்கத்திற்கு எதிராக அணிவகுக்கும் பிராணிகள் ஒன்று ; அவை எல்லாம் சேர்ந்து வந்து எதிர்கொள்ளும். இரண்டாவது ; அப்படி அணிவகுத்து எதிர் கொள்ள வரும் பிராணிகள் சிங்கத்திற்கு சற்று தள்ளி அதன் பார்வையில் படுகிற மாதிரி நின்று அமைதி தர்னா மறியலில் ஈடுபடுமே தவிர அவையாவும் ஒன்று சேர்ந்து சிங்கத்தைத் தாக்க கிட்டே நெருங்காது.
ஆனால் இங்கே இந்த யூ டியூப் காட்சியில் ஒரு மாடு தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதைப் பார்த்து ஒரே ஒரு மாடு ஆவேசத்துடன் ஓடி வந்தது, சிங்கதிற்கு அருகில் வந்தது, சிங்கத்தின் மீது வீராவேசத்துடன் மோதியது, தனது கொம்பால் அதைப் பந்தாடியது, எல்லாம் நிச்சயம் அதிசயமான காட்சியே.
அதுவும் எந்த சிங்கத்தை? அதன் உடல் வலிமை, அதன் தசைப்பிடிப்பு யாரும் அறியாததல்ல. ஏதாவது ஒரு மிருகத்திற்குமுன் அது தோன்றி விட்டால் இதைப் பார்த்ததுமே அந்த மிருகத்திற்கு பாதி உயிர் போய் விடும். ஏதாவது ஒரு மிருகத்தின் மீது பாய்ந்தால் அப்போது அதன் வேகத்தையும், வீரியத்தையும் காண்போர் அதிசயித்துப் போவர்.
இவ்வளவு வலிமை வாய்ந்த சிங்கத்தை ஒரு மாடு தன்னந்தனியாக தூக்கி வீசிப் பந்தாடி கதையை முடிக்கிறது என்றால், இறைசக்தி இருந்தால் மாடும் சிங்கத்தை முட்டி மரணிக்கச் செய்யலாம். இறைசக்தி இல்லாது போனால் சிங்கத்தாலும் கூட சீறவோ, பாயவோ முடியாது என்ற எதார்த்தத்தைத்தான் அந்த வீடியோ பதிவு புரிய வைக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஒரு ஏரியில் மலைப்பாம்புக்கும் முதலைக்கும் மத்தியில் நடந்த சண்டைக்காட்சி பத்திரிக்கையின் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றிருந்தது ; இதைப்பார்க்க பொது மக்கள் கூடி விட்டனர். மலைப்பாம்பு முதலையை அடித்து கடித்து விட்டு விடும். அல்லது முதலை பாம்பை விழுங்கும் என்று எதிர்பார்த்திருந்த போது அந்த மலைப்பாம்பு முதலையை விழுங்கிய அதிசயக் காட்சியை விழிபிதுங்கிய நிலையில் இமை கொட்டாமல் மலைத்துப்போய் மக்கள் பார்த்து நின்றனர்.
எந்த முதலையை பாம்பு விழுங்கியது? அதன் சக்தி எந்தளவுக்கு அதிகமென்றால், அது வாலை சுருட்டி பலம் வாய்ந்த சிங்கத்தை அடித்தால் அதன் கால்கள் ஒடிந்து விடும். அதை விட்டும் தப்ப முடியாது. அந்தளவு ஆற்றல் மிகு 700 கிலோ எடையுள்ள முதலையைத் தான் மலைப்பாம்பு விழுங்கியது என்றால், சக்தி என்பது எதற்கும் நிரந்தரமானதோ, நிலையானதோ கிடையாது. எந்த சக்தி வாய்ந்த ஒன்றும் தன் நிலையில் பல பலவீனங்களை உள்கொண்டிருக்கிறது என்பதற்கான நிதர்சன நிரூபணங்களில் ஒன்று தான் முதலை பாம்பால் விழுங்கப்பட்ட நிகழ்வு.
யானை பானையோடு மோதினால் பானை உடையுமா? யானை அழியுமா? பானை தான் உடையும்.உடைய வேண்டும் என்று நடைமுறை அறிவும், உலக நிகழ்வுகளும் சொல்லும்.ஆனால் வீரமிகு இஸ்லாமிய வினோதமான வரலாற்றில் பத்ருப்போர் காட்சியில் யானை [பலம் கொண்ட காஃபிர் சேனை] யும் பானை [போன்ற பலகீனமான சிறுபடை] யும் மோதியதில் யானை உடைந்து போனது. பானை பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல மோதி வெற்றியும் பெற்றது.
كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
“[எவ்வளவோ] பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி பெற்று இருக்கின்றனர். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” [அல்குர்ஆன் :2 ; 249]
அல்லாஹ்வின் உதவியும்,ஒத்துழைப்பும் இருந்தால் அஞ்ஞானம் [ஆற்றலும்,அறிவும் இல்லாதவர்கள்] கூட வெற்றி பெறும். இல்லையென்றால் விஞ்ஞானமும் கூட வெற்றி பெற முடியாது.
அல்லாஹ் உதவி செய்து பாதுகாப்பதாக இருந்தால் யாரையும் எதையும் எப்படியும் பாதுகாப்பான். அதற்கு ஒரு வரையறையோ, விதிமுறையோ அல்லாஹ்வுக்குக் கிடையாது.
அல்லாஹ் அவனது அன்பர் அண்ணலம் பெருமானார் [ஸல்] அவர்களையும் அவர்களுடைய உற்றத் தோழரையும் ஹிஜ்ரத் பயணத்தின் போது அவர்களைக் கொலை வெறியோடு தேடி அலைந்த அரக்கர்களை விட்டும் சிலந்தி வலையைக் கொண்டும் புறாக்களைக் கொண்டும் பாதுகாத்தான் என்பது புனிதமானது மட்டுமல்ல புதிரான வரலாறும் கூட.
இறைவன் நினைத்தால் சிங்கத்தைக் கொண்டே அதன் இரையையும் பாதுகாப்பான். பசியோடு இருக்கும் சிங்கத்திற்கு தன் இரை கண்ணில் பட்டு விட்டால் என்ன செய்யும்? சீறிப்பாய்ந்து கடித்துக் குதறி சின்னாப் பின்னமாக்கும். ஆனால் அல்லாஹ் இரங்கினால் இரையை அதற்கு இரணமாக்கி மரணமாக்காமல் அதைக்கொண்டே அதன் மீது இரக்கம் சொறிய வைப்பான்.
இதோ.... இறைவனின் வனத்தில் இப்படியும் ஒரு ஈரமான இரக்கமுள்ள ஒரு நிகழ்வு யூ டியூபில் வெளியானது.அல்லாஹ்வின் சக்தி சிலசமயம் எதிர்மறையாகவும் வினை புரியும்.
காட்டுமாடு ஒன்று அப்பொழுது தான் தன் குட்டியை ஈன்றது. பாவம் அந்தக்குட்டியால் சரியாக எழுந்து கூட நிற்க முடியவில்லை. தனது தாயோடு வேகமாக ஓட அல்லது விரைவாக நடக்கக் கூட அதுவால் முடியாது. இந்த நிலையில் சிங்கம் ஒன்று விடியற்காலையில் கோரப்பசியோடு இரை தேடி பதுங்கிப் பதுங்கிப் பாய வருவதைப் பார்த்து விட்ட அந்தக் குட்டியின் மாட்டுக் கூட்டம் சிட்டென பறந்து சென்று மாயமாக மறைந்து விட்டது. பாவம் அந்தக் குட்டி ஓட முடியாமல் தள்ளாடி தள்ளாடி நடந்தது.
சிங்கம்- இல்லை இல்லை அல்லாஹ்- நினைத்திருந்தால் அந்தக் குட்டியை சுலபமாக சுவைத்திருக்க முடியும். ஆனால் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாம் அல்லாஹ், அந்தக் குட்டியின் மீது சிங்கத்தின் வழியாக தனது கருணைச் சொரிந்தான். தான் நாடி வந்த இரை இப்போது சிங்கத்தைத் தேடி வந்தது. பசியோடு இருந்த சிங்கத்திற்கு இளங்கறியைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறவில்லை. இதயத்தில் ஈரம் கசிந்தது. ஒன்றுமறியாத சின்னச்சிறியக் குட்டி பசியோடு பால் குடிக்க சிங்கத்தின் மடுவை நாடியது. எமனாக வந்த சிங்கம் தாயாக நடந்து கொண்டது. இப்பொழுது மாட்டுக் குட்டி, சிங்கத்தின் அரவணைப்பில், ஆதரவில், அன்பில் வளர்ந்தது.
இந்த டியூப் காட்சி காட்டில் நடக்கிறது. மிருகம் மனிதனாக நடந்து கொள்கிறது. ஆனால் நாட்டில் மனிதன் மிருகத்தை விட மோசமான வனாக கேடுகெட்டவனாகத் திரிகிறான்.
அல்லாஹ்வின் கருணை இருந்தால் கொல்ல வரும் மிருகமும் கருணை காட்டும். முள்ளும் மலராகும். இல்லையெனில்......மலரும் முள்ளாகும்.
ஆக சக்தி, கருணை எங்கேயும் இல்லை.அது அல்லாஹ்விடம் இருக்கிறது. அவன் இசைவு இருந்தால் சக்தி சுபமாகும்.காடும் நாடாகும். வானம் வசப்படும். இல்லையெனில் சகலமும் சாபமாகும். நாடும் காடாகும்,கரியாகும்.
وَآَيَةٌ لَهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ (41) وَخَلَقْنَا لَهُمْ مِنْ مِثْلِهِ مَا يَرْكَبُونَ (42) وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقَذُونَ (43) إِلَّا رَحْمَةً مِنَّا وَمَتَاعًا إِلَى حِينٍ
“கப்பல் நிறைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.அவர்கள் ஏறிச்செல்ல அதைப்போன்ற [பாலை வனக்கப்பல் ஒட்டகம்,ஆகாயக்கப்பல் விமானம் போன்ற]வைகளையும் நாம் அவர்களுக்காக படைத்திருக்கிறோம்.நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து [விபத்துக்குள்ளாக்கி]விடுவோம். அச்சமயம் [அபயக்குரலில்] அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்.அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள். சிறிது காலம் நம்முடைய அருளால் நாம் அவர்களை சுகம் அனுபவிக்க விட்டாலொழிய” [அல்குர்ஆன் : 36 ;41,42,43,44]
யாஅல்லாஹ்! உனது அருளைத்தவிர இப்போது வேறு வழியில்லை. உனது கிருபையால் விமானத்தையும், WE மானத்தையும், அவர்களையும்,எங்களையும் காப்பாயாக! ஆமீன்!
தேடும் பணி தொடரும்......
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
Comments
Post a Comment