இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! 1. இஃதிகாஃப் என்றால் என்ன? பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும். 2. இஃதிகாஃபின் சட்டம் என்ன? பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆல...