இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!
அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.
இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
1. இஃதிகாஃப் என்றால் என்ன?
பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.
2. இஃதிகாஃபின் சட்டம் என்ன?
பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:“பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடதீர்கள்.” (அல்பகறா: 187)
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்) இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி(ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.
3. இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாஃபை
துண்டித்து விட்டு வெளியேறலாமா?
பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது இஃதிகாஃபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாஃபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.
4. இஃதிகாஃப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?
பதில்: சுன்னத்தான இஃதிகாஃப் (ரமளான் கடைசிப் பத்து நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றத இஃதிகாஃப்) இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
5. பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது அவசியமா?
பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாஃபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:187)எனவே, இஃதிகாஃப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.
6. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?
பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப்
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள்
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.
7. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?
பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.
8. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப்
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?
பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
9. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?
பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.
10. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில்
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?
பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில்
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.
நன்றி ;- வரஸத்துல் அன்பியா இணையதளம்.
வெளியீடு :- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.
Comments
Post a Comment