துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற சவுதி அரேபிய இளைஞர்
துபாய்: துபாயில் ரமலான் மாதம் 1 முதல் 20 தேதி வரை 17வது ஆண்டாக நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டியில் சவுதி அரேபியாவின் ஆதில் முஹம்மது அல் கெய்ர் முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இதனை ஷேக் மக்தூம் பின் முஹம்மது வழங்கினார். இரண்டாம் இடத்தை பெற்ற சாட் நாட்டைச் சேர்ந்த அல்ஹாஜ் மஹம்மத் டிஜிட்டா 200,000 திர்ஹம் பரிசையும், மூன்றாம் இடத்தை பிடித்த லிபியாவின் அப்துல் பாரி ஆர் அலி பிசுப்சு 150,000 திர்ஹம் பரிசுத் தொகையையும் பெற்றனர். அதனைத் தொடர்ந்து பெல்லோ அமதா மஹ்மத் (நைஜீரியா), உமர் முஹம்மது ஆதம் கோட் (சூடான்), ஜமாலுதீன் எல் கிக்கி (ஆஸ்திரேலியா), சையத் அலி உமர் பல்கதிஷ் அல் ஜாபரி (ஐக்கிய அரபு அமீரகம்), அஹமது அலி தாஹா (லெபனான்), அப்துல்லா அரிபி (அல்ஜீரியா), பட்டேல் வசில் (பிரான்ஸ்) ஆகியோர் நான்கு முதல் 10 இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு 65 ஆயிரம் திர்ஹத்திலிருந்து ஒவ்வொரு தரத்திற்கும் ஐயாயிரம் குறைத்து 35,000 திர்ஹம் வரை வழங்கப்பட்டது. மிகவும் அழகான முறையில் கிராஅத் ஓதிய ஐவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. ...