ரமலான் தரும் ஈமானின் சிந்தனைகள்

 

















நேன்பில் புடம் போடப்படும் ஈமான்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,


அன்பும் அருளும் நிறைந்த நேசமிகு நேயர்களே......!

உங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமலான் மாதத்தில் பூமான் நபி (ஸல்) அவர்களின் பாக்கியமிகு உம்மத்தாகிய உங்களை சந்திப்பதில், 

உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

 நோன்பு ஓரு அதிசயம்

பணக்காரன் பட்டினி கிடக்கும் அதிசயம்....!

சதாவும் தின்பண்டம் கேட்டு நச்சரிக்கும் சிறுவன் கூட நோன்பு நோற்று கொடுத்தாலும் திண்ணாமல் அடம்பிடிப்பது ஓர் அதிசயம்….!

ரமலான் என்றாலே சுட்டெரிப்பது. நோன்பாளியின் பாவம் இதில் சுட்டெரிக்கப்படுகிறது.

உடலின் செயல்பாடான இஸ்லாத்தையும் உள்ளத்தின் வெளிப்பாடான ஈமானையும்,நோன்பு ; பசியென்னும் நெருப்பிலே புடம் போட்டு ஜொலிக்கச்செய்கிறது.

“இறைநம்பிக்கையாளர்களே......!  உங்களுக்கு முன்பிருந்தவர்களின்மீது கடமையாக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பரிசுத்தவான்களாவீர்கள்.” {அல்குர்ஆன். 2:183} 1

நோன்பு உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்துகிறது. பௌதீக, ஆன்மீக வியாதிகளை அது குணப்படுத்தி, சுத்தப்படுத்துவதால் நோன்பு உடலையும், உள்ளத்தையும் புடம் போட்ட தங்கமாக மிளிரச் செய்கிறது.




















“ஒருநாள் நோன்பு பிடிப்பது மூன்றுவாரம் மருந்தெடுப்பதற்கு சமம்.” என்று சொல்லுவார் மருத்துவத்தின் தந்தை இப்னு சீனா அவர்கள்.

பெரிய பாதிப்பை உண்டாக்கும் வியாதிகள் இரண்டு.

1.கொழுப்புச்சத்து அதிகரிப்பது.

2.நீரழிவு நோய்.

இந்த இரண்டு நோயும் நோன்பில் கரைகிறது அல்ல குறைகிறது. கொசுவை ஒழிப்பதை விட அது உற்பத்தியாகக் காரணமாக இருக்கிற சாக்கடையை ஒழிப்பது தான் இஸ்லாமிய அனுகுமுறை. இந்த வகையில் தான் விபச்சாரம் செய்யாதீர் என்று சொல்லாமல் “விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்க வேண்டாம்" 2 என்று எச்சரிப்பான் அல்லாஹ்.  அந்தமாதிரி நோயை ஒழிக்க முயற்சிப்பதை விட நோயை உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து அதைக்களைய முயற்சிப்பது புத்திசாலித்தனம். பொதுவாக உணவுமுறையில் கட்டுப்பாடு இல்லாததே பெரும்பாலான வியாதிகளுக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. நோன்பு உணவுக்கட்டுப்பாட்டை வரையறை செய்கிறது.

வாழ்வியலின் எல்லா விதிகளும் குர்ஆனில் இருக்கிறது என்றால் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகத் திகழும் மருத்துவ மூல விதி எதுவும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா....  என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவிடம் ஒருமத அறிஞர் கேட்டார். அப்போது அந்த அவையில் வீற்றிருந்த அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ அவர்கள் எழுந்து உடல் நலத்திற்கான {Golden Rule} தங்க விதியொன்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது  என்றார். "அது என்ன....?"

“உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள்.” {அத்தியாயம்.7வசனம்.31}   3

இந்த வசனத்தைக் கேட்டதும் அசந்து போன அந்த அறிஞர் நானும் ஒரு மருத்துவர்தான் இது ஒரு அற்புதமான விதி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறே உங்கள் நபிமொழியில் ஆன்மீக போதனைகள் நிறைந்திருக்கின்ற மாதிரி உடல்நலம் தொடர்பான ஏதாவது மூலவிதிகள் கூறப்பட்டிருகிறதா...? என மீண்டும் கேள்வி எழுப்பினார்.   அதற்கு ஆம்..!  என பதிலளித்த அந்த அரசரவை அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அவர்கள் ; ஒரு நபிமொழியை அவருக்கு படித்துக்காண்பித்தார்.  “இரைப்பைதான்  எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” 4 இதைக்கேட்டு அதிசயித்துப்போன அந்த மருத்துவ அறிஞர் உங்களுடைய வேதமும் உங்களுடைய நபியும் மருத்துவமேதை  ஜாலினூஸுக்கு எதையும் விட்டுவைக்கவில்லை எனக் கூறி வியந்தார்.


உணவு அதிகமாக உட்கொள்வதே எல்லா வியாதிகளுக்கும் மூலக்காரணம் என்பதை இப்போது எல்லா மருத்துவமும் உறுதி செய்கிறது. எந்த ஒரு இயந்திரமும், கூடுதல் சுமை அதில் ஏற்றப்படும்போது அது பழுதாகி செயலிழந்து விடும் என்பது தெரிந்ததே. இரைப்பையும் அவ்வாறு தான். குறைந்த அளவு உணவை அது உள்வாங்கினால் அதை ஜீரணமாக்கி நல்ல பலனைத்தரும். அதிக உணவை அதில் அடைத்தால் ஆபத்துதான் ஏற்படும். நாயகம் ஸல் அவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பசியாற சாப்பிட்டதில்லை. ஒரு நாள் சாப்பிட்டால் மறுநாள் பட்டினியாக இருப்பார்கள். இரண்டு தினங்கள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் பட்டினியோடு இருப்பார்கள். சாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுவார்கள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவார்கள். வேகமாக சாப்பிடமாட்டார்கள். இதுவெல்லாம் இப்போது மருத்துவ உலகம் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் பரிந்துரைகளாகும்.


ஒரு அரசர் தனது நாட்டிலுள்ள சிறந்த மருத்துவர் ஒருவரை மதீனாவுக்கு அங்குள்ள மக்களுக்கு சிகிச்சையளிக்க அனுப்பிவைத்தார். அப்போது திருமதீனாவில் வேறு எந்த மருத்துவரும் இல்லாததால் தனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என பெரிதும் எதிர்பார்ப்புடன் அங்கு போய் சேர்ந்த அந்த மருத்துவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், அங்கு அவரிடம் சிகிச்சை பெற ஒரு நோயாளியும் வரவில்லை. எனவே அவர் நாயகம் ஸல் அவர்கள் சமூகம் வந்து இங்கு நான் வந்ததே எனது வேலை இங்கு அதிகம் நடக்கும் என நினைத்து. ஆனால் இங்கே யாருமே சிகிச்சைக்கு வரவில்லையே என முறையிட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் இங்குள்ள மக்கள் பசிக்கும்போது சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் பசி பாக்கி இருக்கும் போது உணவிலிருந்து  தங்களது கையை எடுத்துவிடுவார்கள். இதனால் இங்கு நோயாளிகள் ரொம்பக்குறைவு" என அவருக்கு எடுத்துரைத்தார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆரோக்கியத்திற்கான இந்த இரகசியம் கண்டு மருத்துவ விஞ்ஞான உலகம் இன்றும் அதிசயித்து நிற்கிறது. ஆகவே நோயைக் குறைக்க உணவைக் குறைக்க வேண்டும்.

பொதுவாக, தேவைக்கு அதிகமாகவே நாம் சாப்பிடுகிறோம். நல்ல உடல் வலிமைக்கும், நலத்திற்கும் அதிகமாக உண்ண வேண்டிய அவசியமில்லை என்பது மருத்துவ உண்மை. இதை விளங்கிக் கொள்ள இரண்டு உதாரணம்.

ஒன்று காட்டு ராஜாவான சிங்கம். இதன் உடல்வலிமை, அதன் தசைப்பிடிப்பு யாரும் அறியாததல்ல. ஏதாவது ஒரு மிருகத்திற்கு முன்பு அது தோன்றிவிட்டால் இதைப்பார்த்ததுமே அந்த மிருகத்திற்கு பாதி உயிர் போய் விடும். ஏதாவது ஒரு மிருகத்தின் மீது இது பாய்ந்தால் அப்போது அதன் வேகத்தையும் வீரியத்தையும் காண்போர் அதிசயித்துப் போவர். இவ்வளவு வலிமை வாய்ந்த சிங்கத்தின் உணவு எவ்வளவு என்பதை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். வாரத்தில் ஒருமுறை தான் இறைச்சி சாப்பிடுமாம். இது ஒரு இடத்திலுள்ள சிங்கத்தின் நிலையல்ல. உலகின் பல இடங்களில் வளர்க்கப்படும் சிங்கங்களின் உணவு அளவும் இவ்வாறுதான் இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. எல்லா சிங்கத்திற்கும் வாரத்திற்கு ஒரு முறை தான் உணவு.


இரண்டாவது உதாரணம். முதலை. {Crocodile} இது நல்ல ஆரோக்கியத்துடன் 200 வருடம் வரை கூட வாழும் பெரும் வயதை உடையது. அதன்  சக்தி எந்தளவுக்கு அதிகமென்றால், அது வாலை சுருட்டி பலம் வாய்ந்த சிங்கத்தை அடித்தால் கூட அதன் கால்கள் ஒடிந்து போகுமே தவிர, அதைவிட்டு தப்பமுடியாது. இப்போது அதன் நீண்ட வயதுக்கும் அதன் ஆற்றலுக்கும் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது குறைந்த அளவு உணவை அது உண்டு வாழ்வதே காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதைக் கேட்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். முதலையின் உடல் எடை 700 கிலோ. அதாவது 70 கிலோ எடையுள்ள 10 மனிதர்களின் எடைக்கு நிகரானவை. ஆனால் அது ஒரு நாளைக்கு வெறும் 700 கிராம் உணவைத்தான் உட்கொண்டு வாழ்கிறது. அதாவது ஒரு கிலோ கிராமைவிட குறைவு. இது சிந்திக்க வேண்டிய விஷயமாகும். நமது மதிய உணவே இரண்டு கிலோ கிராமைவிட கூடுதலாக இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு மூன்றுவேளை என்றில்லாமல் அதைவிடவும் அதிகமாக நினைக்கும் போதெல்லாம், கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் நமது உணவு அளவு எவ்வளவு....?


உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் சீராக இரத்த சப்ளை செய்யும் மூளை, அதிகம் சாப்பிடும்போது இரைப்பைக்கு அதிகமாக இரத்தம் அனுப்ப உத்தரவிடுகிறது. இரைப்பை உள் வாங்கிய உணவை ஜிரணிக்க அதிக ரத்தம் அதற்கு தேவைப்படுகிறது. இப்படி  இரைப்பைக்கு அதிக ரத்தம் செல்வதால் மற்ற உறுப்புகளுக்கும் மூளைக்கும் குறைவான அளவே ரத்தம் போய்ச்சேருவதால் அவைகளுக்கு சோர்வு உண்டாகி, களைப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் மூளைக்கு சிந்தனை திறனும் உறுப்புகளுக்கு செயல் திறனும் குறைந்துபோய் விடுகிறது. இதனால் எல்லா வகையிலும் பலவீனம், உடல் தளர்வு ஏற்படுகிறது.


உலகில் நல்ல செயல் திறனும் சிந்தனை திறனும் பெற்ற புகழ்பெற்ற மேதைகளின் உணவு அளவு எவ்வளவு என்று பார்த்தால் ரொம்ப ரொம்ப அவசியமான சொற்பமானதாகவே இருந்திருக்கிறது. இலட்சக்கணக்கான நபி மொழிகளை மனப்பாடம் செய்துள்ள மிகச் சிறந்த நபிமொழி ஆய்வாளர் ஹழரத் இமாம் புகாரி அவர்களிடம் நீங்கள் ஒரு தினத்தில் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் எனக்கேட்டதற்கு இப்போதெல்லாம் நான் ஒருநாளைக்கு ஏழு பாதாம் சாப்பிட்டுவிட்டு வேலையில் ஈடுபட்டுவிடுவேன். எனது முழு நாளும் இதிலே கழிந்துவிடுகிறது" என பதிலளித்தார்கள்.


இன்னொரு உதாரணம். மாமேதை ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் 1879-1955 விஞ்ஞான உலகின் தீர்க்கதரிசியாக கொண்டாடப்படுபவர். அறிவியல் வரலாற்றில் தனது சார்பு நிலை கோட்பாட்டின் மூலம் மிகப் பெரிய விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டவர். இவருடைய பதப்படுத்தப்பட்ட உடல் இன்னும் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. அதைப்பார்ப்பவர்களுக்கு தெரியும். அந்த உடலின் எடை 70 கிலோ விட கூடுதலாக இருக்க வாய்ப்பில்லை என்று. ஆனால் அவருக்கு அல்லாஹ் எந்தளவுக்கு மூளை கொடுத்துள்ளான் என்பது உலகிற்கே தெரியும்.


யாருடைய மூளை, முழு சிந்தனைத் திறனைப்பெற்று விளங்குகிறதோ அவர்களெல்லாம் யாரென்றால், யாருடைய உடலில் கொழுப்பு சத்து குறைந்து நல்ல உடல்நலத்தோடு வாழ்கிறார்களோ அவர்களேயாகும். ஆக நமக்கு தேவையும் அவசியமும் என்னவென்றால், நல்ல உணவுப்பழக்கம். புனித ரமலான் மாதம் நமக்கு அத்தகைய நல்ல உணவு பழக்கத்தையும், நல்ல உணவு கட்டுப்பாட்டையும் கற்றுத்தருகிறது. இப்படி மனிதன் தானாக தனக்கு நல்ல உணவுக்கட்டுப்பாட்டை உருவாக்கி, உணவையும், சாப்பிடும் நேரத்தையும் குறைத்துக் கொள்வானோ மாட்டானோ..?  அதனால் அல்லாஹ் அவனுக்கு ஒரு மாதம் ரமலானில் கட்டாய கட்டுப்பாட்டை, நோன்பை கடமையாக்கியதன் மூலம் கொண்டு வந்து விட்டான். அதன் மூலம் அவன் உடல் நலம் பெற்று வாழ வழி வகுத்தான். இந்த வகையில் ரமலான் மாதம் இந்த உலகிற்கு ஆரோக்கியத்திற்கான சிறப்பு தூதனாகும். உடல் சுத்தம் என்பது ஆரோக்கியம் என்றால் உளத்தூய்மை என்பது இறையச்சமாகும்.


நோன்பு கடமை என்பதைப்பற்றி பேசும் 2-183 வது வசனம் ஈமானைக் கொண்டு தொடங்கப்பட்டு இறையச்சத்தைக்கொண்டு முடிக்கப்பட்டுள்ளது.


நேர்மையான ஒழுக்கமுள்ள வாழ்கைக்கு ஆரம்பம் நம்பிக்கை என்றால் அதன் முடிவு இறையச்சமாகும். இறைநம்பிக்கையாளர்களுக்கு இறையச்சம் ஏற்பட நோன்பு துணை செய்கிறது. ஈமான் {நம்பிக்கை} என்றால் என்ன....?

ஈமான் என்பது அல்லாஹ்வின் உள்ளமையை {ஏகத்துவத்தை} நம்புவது மட்டுமல்ல.

"நாம் எங்கிருந்தாலும் அவன் நம்முடன் இருக்கிறான்".{அத்தியாயம்;57.வசனம்;4}.  5


"நாம் தனியாக நின்றாலும் சேர்ந்து செயல்பட்டாலும் அவன் நம்மைப்பார்க்கிறான்".  {அத்தியாயம்;26. வசனம்;218,219,220}   6


"நிச்சயமாக அல்லாஹ்வுக்கு பூமியிலும் வானத்திலும் எந்த ஒன்றும் மறைவானதல்ல".  {அத்தியாயம்;3 வசனம்;5}  7


"நிச்சயமாக அல்லாஹ் நம்மை கவனித்தவனாகவே இருக்கிறான்"

{அத்தியாயம்;4. வசனம்;1}   8


"நமது கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் அவன் நன்கறிவான்". {அத்தியாயம்;40. வசனம்;19}  9

என்றெல்லாம் நாம் அல்லாஹ்வை நம்பவேண்டும். இந்த இறைநம்பிக்கை. நோன்பு என்னும் அக்கினியில் புடம் போடப்பட்ட தங்கமாக ஜொலிப்பதை பார்க்கலாம். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நோன்பு நோற்று கடுந்தாகம் ஏற்பட்டாலும், உண்ணா நோன்பின் இடையில் கோரப்பசி கோரத்தாண்டவம் ஆடினாலும் நோன்பாளி யாருக்கும் தெரியாமல் பூட்டப்பட்ட அறையில் வைத்தோ அல்லது அறிமுகமானவர் யாருமில்லாத ஒரு இடத்திற்குச் சென்றோ குடிக்கவோ சாப்பிடவோ மாட்டார். ஏனென்றால் நம்மைப் போன்ற மனிதர்கள் பார்க்காவிட்டாலும் நம்மைப் படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அசைக்கமுடியாத அவனது நம்பிக்கை தான் காரணம். நோன்பு தரும் இந்த ஈமான் நம்பிக்கை வாழ்வின் எல்லா கட்டத்திலும் தொடர்ந்தால் அவனே பரிசுத்தமாகி புனிதமாக மாறிவிடுவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அல்லவா..  ஆனால் நோன்பு காலத்தில் வரும் இந்த நம்பிக்கை சார்ந்த சிந்தனையான இறையச்சம் மற்ற காலத்தில் பாவங்கள் செய்யும் போது வருவதில்லையே ஏன்...  அது நாம் பிடிக்கும் நோன்பு. வெறும் சடங்காக இருப்பதும். அர்த்தமுள்ளதாக இல்லாததும் தான் காரணம்.


இந்த வகையில் நோன்பை அறிஞர்கள் மூன்றாக வகைப்படுத்துவார்கள்.10


ஒன்றாவது சராசரியான (அவாம்களின்) நோன்பு. صوم العوام

உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருப்பதாகும். இது தான் பெரும்பாலானோர் பிடிக்கும் நோன்பாக உள்ளது. இப்படி நோன்பு நோற்பதால் கடமை முடிந்து விடலாம். கூலியும் இறைவனிடம் கிடைக்கலாம் ஆனால் நோன்பினால் கிடைக்கவேண்டிய பலா பலன் ஒன்றும் கிடைக்காது.


இரண்டாவது. பக்தியாளர்களின் நோன்பு. صوم الخواص

உடலின் ஏழு உறுப்புக்களான கண், காது, நாக்கு, வயிறு, வெட்கஸ்தலம், கை, கால் ஆகிய அங்க அவயங்களை அல்லாஹ்விற்கு மாறு செய்யாமல் தடுத்து தற்காத்துக் கொள்வதாகும்.

நோன்பு இறையச்சத்தை தரும் என்று திருக்குர்ஆன் சொல்வது இந்த வகை நோன்பைத்தான் என்று விளங்கவேண்டும்.

இதை சற்று விரிவாக பார்க்கலாம்...


நாவின் நோன்பு. صوم اللسان

நாவைப் பேணுவதாகும். கெட்டவார்த்தை, பொய், பித்தலாட்டம், அவதூறு, வீணான தர்க்கம் போன்ற சொற்பாவங்களை, குறிப்பாக புறம் பேசுவது, கோள் சொல்வதை விட்டும் நாவை நோன்பாளி பாதுகாக்க வேண்டும். குர்ஆன் ஓதுவதில் திக்ரு செய்வதில் ஈடுபட வேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும்.

"யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் மட்டும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை". என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் 11              {புகாரி எண்;1903}.


நபி ஸல் அவர்களின் காலத்தில் இரு பெண்கள் நோன்பு நோற்று கடும் நாவறட்சி உண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருப்பதாக நபியிடம் சொல்லப்பட்டது. அப்போது அவ்விருவரையும் வாந்தியெடுத்து விட சொன்னபோது, இரத்தமும் சளியும் பச்சைக்கறியுமாக வாந்தியெடுத்தார்கள்.

இந்த இருவரும் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை உண்ணாமல் நோன்பிருந்தார்கள். அல்லாஹ் ஹராமாக்கியதை செய்து நோன்பை முறித்து விட்டார்கள். இவ்விருவரும் அமர்ந்து ஒருவருக்கொருவர் புறம் பேசி மக்களின் இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அது தான் வாந்தியில் வந்தது.12


"உங்களில் ஒருவர் மற்ற எவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவானா...? அதனை நீங்கள் வெறுப்பீர்கள் புறம் பேசுவதும் அவ்வாறே".13 {அத்தியாயம்;49. வசனம்;12}.

கண்ணிண் நோன்பு صوم العين

காணக்கூடாத காட்சிகளைப் பார்க்காமல் கண்களை பாதுகாக்கனும்.

"பார்வை இப்லீஸின் அம்புகளில் ஒரு அம்பு. இன்னொரு அறிவிப்பில் விஷம் தோய்ந்த ஒரு அம்பு என வந்துள்ளது. யார் அல்லாஹ்வை பயந்து அதைத்தவிர்த்து விடுவாரோ அவருடைய இதயத்தில் அல்லாஹ் ஈமானின் சுவையை வழங்கிடுவான்."14

இது மட்டுமல்ல இறை நினைவை மறக்கச் செய்பவைகளை விட்டும் பார்வையைத் தடுத்து திருப்பிக்கொள்ளனும்.


சுலைமான் நபியும் அவர்களுடைய ராணுவமும் எறும்புகள் வசிக்கும் ஒரு ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு கூறியது. எறும்புகளே.... "நீங்கள் உங்கள் பொந்துகளில் நுழைந்து கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய ராணுவமும் அறியாது உங்களை மிதித்து தகர்த்து விட வேண்டாம்.  இதன் சொல்லைக்கேட்டு அவர் (சுலைமான் நபி அலை) அவர்கள் புன்னகை புரிந்தார்கள்".  15    {அத்தியாயம்;27. வசனம்;18,19}


தனது எறும்புக்கூட்டத்திற்கு உத்தரவிட்ட அந்த தலைமை எறும்பைபார்த்து , நான் நீதி மிக்க ஓரு நபி என்று உனக்கு தெரியாதா... நான் உங்களுக்கு அநியாயம் செய்வேன் என்று பயப்படலாமா..?  என சுலைமான் அலை அவர்கள் கேட்டபோது

"அவர்களுக்கு தெரியாமல்" என்று நான் சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லையா.... தெரிந்து இந்த அநியாயம் செய்து விடமாட்டார்கள் தெரியாமலே நம்மை கவனிக்காமலே இந்த தவறு நிகழ்ந்துவிடலாம் என்றுதான் எச்சரித்தேன். மேலும் நான் உடல் தகர்ப்பை உத்தேசிக்கவில்லை. உள்ளத் தகர்ப்பை தான் நாடினேன். மகாராஜாவான உங்களையும் உங்களது ஆரவாரமான பெரும்படையையும் பார்த்து அவைகளுக்கு உலக ஆசை வந்து விடக்கூடாதே மேலும் அவைகள் செய்து வந்த திக்ரும் தஸ்பீஹும் தடைபட்டு விடக்கூடாதே என்று பயந்து தான் அவைகளை எச்சரித்தேன் என்று எறும்பு விளக்கமளித்ததாம்.                      {ஆதாரம்; தப்ஸிர் குர்துபி} 16

செவியின் நோன்பு. صوم الاذن

ஹராமான மக்ரூஹான சொல்லைக் கேட்பதை விட்டும் காதைப் பாதுகாக்கனும்.


"உலகில் இழிவும் மறுமையில் பயங்கரமான வேதனையும் உள்ள அவர்கள் பொய்யையே அதிகமாக கேட்பவர்கள்".17    {அத்தியாயம்;5 வசனம்;41,42}

"புறம் பேசுபவன் அதைக்கேட்பவன் இருவருமே பாவத்தில் கூட்டாளிகளே".

                                                                                (நபிமொழி.)

வயிற்றின் நோன்பு. صوم البطن

ஹராமான உணவை விட்டும் வயிற்றைப் பாதுகாக்கனும்.

"நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையான ஹலாலான உணவைத்தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் அவனது தூதர்களுக்கு கட்டளையிட்டதையே அவன் விசுவாசிகளுக்கும் கட்டளையிட்டுள்ளான்.  என்னுடைய தூதர்களே....  நீங்கள் பரிசுத்தமான ஹலாலானதையே உண்ணுங்கள். நற்காரியங்களைச் செய்யுங்கள்".   {அத்தியாயம்;21 வசனம்;51} "எனது நம்பிக்கையாளர்களே.....  நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தூய்மையான ஹலாலானதையே புசியுங்கள்".                                  {அத்தியாயம்;2 வசனம்;172} 

ஒருவன் நீண்டப் பயணம் மேற்கொள்கிறான் அவனது தலை புழுதி படர்ந்திருக்கிறது. தலைவிரி கோலமாகவும் இருக்கிறான். அவன் தனது இரண்டு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்தி யாரப்பி.....யாரப்பி... எனது இரட்சகா....எனது இரட்சகா.... என பிராத்திக்கிறான். ஆனால் அவனது உணவு ஹராம். அவனது உடை ஹராம். அவனது குடிப்பு ஹராம். ஹராம் கொண்டு உணவளிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்..  .(முஸ்லிம்.)18

"உனது உணவை தூய்மையாக்கு (ஹலாலாக்கு). துஆ ஒப்புக்கொள்ளப்பட்டவனாக நீ ஆகுவாய்".  (நபிமொழி.)


கற்பின் நோன்பு.صوم الفرج

தகாத உறவு மற்றும் காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய காரியங்களை விட்டும் தனது கற்பைப் பாதுகாக்கனும்.


"நபியே.......நம்பிக்கையாளர்களுக்கு கூறுங்கள். அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்களது கற்பையும் பாதுகாக்க வேண்டும். அது அவர்களுக்கு பரிசுத்தமானதாகும்".19          {அத்தியாயம்;24. வசனம்;30}


"ஆதமுடைய மகன் மீது தகாத உறவில் அவனது பங்களிப்பு எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடைந்தே தீருவான். அவனது இரண்டு கண்கள் செய்யும் விபச்சாரம் பார்ப்பதாகும். அவனது இரு காதுகள் செய்யும் விபச்சாரம் கேட்பதாகும். அவனது கால்களின் விபச்சாரம் நடப்பதாகும். மனம் ஆசைப்படும் மறை உறுப்பு அதை நிறைவேற்றி மெய்யாக்கும் அல்லது பொய்யாக்கும்".20


கையின் நோன்பு.صوم اليد

பாவப்பட்ட பலகீனமானவர்களை அநியாயமாக அடிப்பதைப் போன்ற கொடுமையிலிருந்து கையை பாதுகாக்கனும்.


காலின் நோன்பு صوم الرجل

பாவமான காரியங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லாமலிருப்பது. மேலும் காலால் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் இருப்பது.


இப்படி ஏழு உறுப்புகளும் நோன்பு நோற்றால் அது அவனை பரிசுத்தமாக்கி எல்லா நிலையிலும் இறையச்சமுள்ளவனாக அவனை அந்த நோன்பு மாற்றும்.


மூன்றாவது வகை நோன்பு:இறைஞானியின் நோன்பு 

صوم خواص الخواص

அல்லாஹ் அல்லாதவைகளை விட்டும் உள்ளத்தை பாதுகாப்பதாகும். எல்லா நேரத்திலும் இறைதியானத்தில் இறை வழிபாட்டில் இறை விழிப்புணர்வில் திளைத்திருப்பது. கொஞ்ச நேரம் இந்நிலை மாறினால் {அல்லாஹ்வை மறந்தால்} இவர்களின் நோன்பு முறிந்து விடும்.


ஆதிபிதா ஆதம் அலை அவர்கள் இவ்வுலகிற்க்கு வந்ததும் தான் வசிக்க வீடு கட்டவில்லை. தன் இறைவனை வணங்க ஆதி இல்லமாம் கஃபாவைத்தான் கட்டினார்கள். ஏனென்றால் அவர்கள் இங்கு இந்த உலகிற்கு வந்தது வாழ்வதற்கு அல்ல. வணங்குவதற்கு. அப்படியென்றால் வாழவே கூடாதா...?  என்றால் அப்படி இல்லை. வாழலாம். வாழ்க்கையை வணக்கமாக மாற்றி வாழனும். வாழ்க்கையை மாற்றுவது எப்படி...? அது தான் இஹ்ஸானுடைய வாழ்க்கை. வாழ்க்கையை வணக்கமாக வாழ்வது, வாழ்வை அழகாக்குவதாகும். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும்  இறைவிழிப்போடு கண்டு கழிப்பதாகும். வாழ்வை அணு அணுவாக அனுபவித்து உயிர் வாழ்வது வாழ்தலுக்கு எழில் சேர்ப்பதாகும். இதை "முஷாஹதா" என கூறுவார்கள். இந்த விழிப்பு நிலையான தரிசன வாழ்வு, உனக்கு மலரவில்லையெனில், அந்த பேரிறை அல்லாஹ் உன்னைக் காண்கிறான் என்ற விழிப்புணர்வுடன் கண்காணிப்பு வாழ்க்கை வாழனும். இதை "முராக்கபா". {தியான வாழ்க்கை} என்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கணமும் இறைவன் தன்னைப்பார்க்கிறான் என்ற பக்தியுணர்வுடன் கழியும் போது வாழ்க்கை வசந்தமாகும். உயிர் வாழ்தல் உன்னதமாகி உயர்வும் தூய்மையும் அடைந்து விடும். இந்த நிலையில் நோன்பு, இஹ்ஸானுடைய வாழ்க்கையின் முதல் நிலையான தியான வாழ்க்கைக்கு பயிற்சியளித்து இரண்டாவது நிலையான இறைவிழிப்பு தரிசன நிலைக்கு நோன்பாளியை உயர்த்துகிறது.


இந்த விழிப்பு நிலைக்கு வழி சொல்லும் ஒரு தகவல்.  முடி துறந்த இறைஞானி இப்ராஹிம் இப்னு அத்ஹம் அவர்களிடம் ஒரு இளைஞன் வந்து, நான் வரம்பு மீறி நடந்து விட்டேன். நான் திருந்திவாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார். அதற்கு ஞானி மஹான் அருளிய உபதேசம். நீ ஐந்து காரியம் செய்ய சக்தி பெற்றிருந்தால் நீ தாராளமாக தவறு செய்யலாம்.


முதலாவது. நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்கில்- {உணவில்} எதையும் சாப்பிடாதே... இதைக்கேட்டு அவ்வாலிபன் அது எப்படி முடியும்...? எது சாப்பிட்டாலும் அது அவனுடையதுதானே..  அப்படியானால் அவனுடைய உணவை உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா....?  உண்ட வீட்டுக்கு இரண்டகமல்லவா.?   "ஆம் நியாயமில்லை தான். இரண்டாவதை கூறுங்கள்." 

"நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் தங்காதே... அவனுடைய நாட்டை விட்டும் வெளியேறி விடு" முன்பை விட அதிகம் ஆச்சரியமடைந்த அவ்வாலிபன்  எல்லாம் அவனுடைய நாடாக இருக்க இது எப்படி சாத்தியமாகும்...". 

"என்னப்பா, அப்படியென்றால் அவனுடைய நாட்டில் இருந்து கொண்டே அவனுக்கு மாறு செய்யலாமா...  

"ஆம் செய்யக்கூடாது தான். மூன்றாவது உபதேசம் சொல்லுங்கள்."

"நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்கு தெரியாமல் அவன் பார்க்காத இடமாகப்பார்த்து அங்கு போய் பாவம் செய்."

"இது எப்படி முடியும். அவன் பார்க்காத இடமே இவ்வுலகில் இல்லையே. அவன் அந்தரங்கங்களை  அறிந்தவனாயிற்றே.

"நிச்சயமாக அவன் ரகசியத்தையும் அதை விட ரகசியமாக மனதில் இருப்பதையும் அறிகிறான்". 21    (அத்தியாயம்;20.வசனம்;7)

 கும்மிருட்டில் கறுப்பு பாறையில் ஒரு கறுப்பு எறும்பு ஊர்ந்து போவதையும்  அவன் பார்ப்பவனாயிற்றே.

அப்படியானால் அவன் பார்க்கிறான் என்று தெரியவே நீ அவனுக்கு மாறு செய்யலாமா.. நீ தனியறையில் யாருக்கும்  தெரியாமல் தவறாக நடக்க முற்படும் போது அந்த அறையில் உள்ள ஓரு துவாரத்தின் வழியாக யாரோ ஓரு ஆள் உன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தால், உன்னால் அங்கு தவறு செய்ய முடியுமா...  முடியவே முடியாது.


அப்படியானால் உன்னைப்போல ஒரு மனிதன் பார்க்கவே, தவறு செய்ய வெட்கப்படுபவன். உன்னைப்படைத்த இரட்சகனாம் அல்லாஹ் பார்க்கிறான் எனத்தெரிந்தும் வெட்டகமில்லாமல் அவனுக்கு முன்னால் பாவம் செய்யலாமா...  கூடவே கூடாது. 

நான்காவதைக கூறுங்கள்.  உனது உயிரைக் கைப்பற்ற மலக்குல் மவ்த் உன்னிடம் வந்தால் அவரிடம் கொஞ்சம் டைம் கேள். தௌபா செய்வதற்கு. அது நடக்கவே நடக்காதே.

"அவர்களுடைய காலம் வரும்பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்". {அத்தியாயம்;7.வசனம்;34} என்று அல்லாஹ் கூறுகிறான்.22


மரணத்தை தள்ளிவைக்க முடியாது என்று தெரியும் போது நீ பாவத்தில் மூழ்கியிருக்கும் போது உனது மரண நேரம் வந்துவிட்டால் உனது கதி என்னவாகும்....


"விபச்சாரம் செய்பவன் அவன் விபச்சாரம் செய்யும் போது மூஃமினாக இருக்கமாட்டான். குடிகாரன் அவன் குடிக்கும் போது மூஃமினாக இருக்க மாட்டான்". என நபி ஸல் அவர்கள் நவின்றுள்ளார்கள்.23

   {புகாரி.2475. முஸ்லிம்57. அபூதாவூத்.4689. திர்மிதி.2625}.


ஈமானின் பிரகாசம் உன்னை விட்டும் விலகி இருக்கும் போது உனக்கு மரணம் வந்தால் உன் நிலை என்னவாகும்.?" 

"ஆகா ரொம்ப ஆபத்தாகும். ஐந்தாவது காரியத்தையும் கூறிவிடுங்கள்."


"நரகத்தின் காவலர்களான "சபானியா" மலக்குகள் உன்னை நரகத்திற்கு இழுத்துச்செல்ல உன்னிடம் வந்தால் நீ அவர்களுடன் போகாதே."

"இதுவெல்லாம் நடக்க கூடியதா.... ஒருக்காலும் நடக்க முடியாத காரியம்" எனக்கூறி அழ ஆரம்பித்து விட்டார். "போதும்....போதும் மஹான் அவர்களே.  நான் இஸ்திஃபார் {பாவ மன்னிப்பு} கேட்டு அவனிடமே {தௌபா} மீட்சி பெறுகிறேன்" எனக்கூறி விடைபெற்ற அவ்வாலிபர் அதற்கு பிறகு திருந்தி வாழ்ந்து இறைவணக்கத்திலே முழுமையாக ஈடுபட ஆரம்பித்தார்.


இந்த ஐந்து தியானப் பயிற்சிகளையும் ஒரு மனிதனுக்கு நோன்பு வழங்குகிறது. அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் நம்மைப்பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் சாப்பிடுவது அவனது உணவு தான். நாம் வசிப்பது அவனது பிரதேசம்தான். நாம் அவனை விட்டும் அவனது பிடியை விட்டும் எங்கும் எப்பவும் தப்பவே முடியாது. அவனுக்கு தெரியாமல் எதுவும் நிகழாது என்ற தியானம்தான். நோன்பாளியை தனியாக இருந்தாலும் உண்ணாமல், பருகாமல், நோன்பை முறிக்கும் காரியம் செய்யாமல் தடுக்கிறது. நோன்பு தரும் இந்த தியானம் மற்ற காலத்திலும் தொடர்ந்தால் எப்போதும் நேர்மையாக ஒழுக்கமாக இருக்கப் பழகிடுவான். அது அவனை இறை விழிப்பு-{தரிசன நிலைக்கு} உயர்த்தி 'நோன்பு எனக்குரியது. நானே அவனுக்கு கூலி' என்ற இறை வாக்கு {ஹதிஸே குத்ஸி}24 அவனுக்கு சித்தியாகி விடும். இம்மேலான நோன்பை கடைபிடிக்கும் மாண்பாரெல்லாம் மேலான இறைமாண்பை அடைந்து எல்லையில்லா பேரானந்த பெருவெளியைப்பெற்று பிறவிப்பயனடைவர். சாஸ்வதமான பெருவாழ்வு வாழும் பெரும் பாக்கியம் பெறுவர்.


தேசிய உணவுக் களஞ்சியங்களின் நிர்வாகி அமைச்சராக இருக்கும் நீங்கள் அதிகமாக நோன்பு நோற்பதேன் என நபி யூசுப் அலை அவர்களிடம் வினவப்பட்டபோது. வயிறு நிரம்பி பசித்தவர்களை நான் மறந்திடுவேனே என பயப்படுகிறேன் என்று பதிலளித்தார்கள்.25


"கியாமத் நாளில் அடியானிடம் அல்லாஹ் ஆதமின் மகனே... உன்னிடம் உணவு கேட்டேன் நி எனக்கு உணவளிக்கவில்லையே என்று கேட்பான். நீ அகிலங்களின் அதிபதி உனக்கு எவ்வாறு உணவளிப்பது என அடியான் திருப்பிக்கேட்பான். எனது இன்ன அடியான் பசியுடன் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை நீ அவனுக்கு உணவளித்திருந்தால். அவனிடம் என்னைக் கண்டிருப்பாய். அவ்வாறே தாகித்து உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்தவனுக்கு நீர் புகட்டியிருந்தால். அவனிடம் என்னைக் கண்டிருப்பாய். அவ்வாறே நோயுற்ற எனது அடியானைக்காண நீ சென்றிருந்தால். அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்".

  {முஸ்லிம்.)26


பசித்திருக்கும் நோன்பாளியிடம் இறையருளை எப்போதும் காணலாம். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது நல்ல அடியார்களாக ஏற்று அருள் புரிவானாக. ஆமீன்.

----------------------------------------


1-يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ   2:183

2-وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا (17:32

3-وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ7:31 

4-المعدة بيت الداء ، والحمية رأس كل دواء

5-وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ57:04

6-الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ (26:218) وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ (219) إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (220)

7-إِنَّ اللَّهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ3:05

8-إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا 4:01

9-يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ 40:19

10-واعلم أن الصيام على ثلاث درجات: صوم العوام، وصوم الخواص، وصوم خواص الخواص. أما صوم العوام: فهو الإمساك عن شهوتي البطن والفرج، وما يقوم مقامهما من الفجر إلى الغروب، مع إرسال الجوارح في الزلات، وإهمال القلب في الغفلات. وصاحب هذا الصوم ليس له من صومه إلا الجوع، لقوله صلى الله عليه وسلم: " من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه " وأما صوم الخواص: فهو إمساك الجوارح كلها عن الفضول، وهو كل ما يشغل العبد عن الوصول، وحاصله: حفظ الجوارح الظاهرة والباطنة عن الاشتغال بما لا يعني. وأما صوم خواص الخواص: فهو حفظ القلب عن الالتفات لغير الرب، وحفظ السر عن الوقوف مع الغير، وحاصله: الإمساك عن شهود السوى، وعكوف القلب في حضرة المولى، وصاحب هذا صائم أبدا سرمدا. فأهل الحضرة على الدوام صائمون، وفي صلاتهم دائمون، نفعنا الله بهم وحشرنا معهم. آمين.) البحر المديد في تفسير القرآن المجيد)

11-من لم يدع قَول الزُّور وَالْعَمَل بِهِ فَلَيْسَ لله حَاجَة فِي أَن يدع طَعَامه وَشَرَابه " . أخرجه البُخَارِيّ .


12-وَعَن عُبَيدِ مَوْلَى رَسُولِ الله صَلَّى الله عَلَيه وسَلَّم ، أَنَّ امْرَأَتَيْنِ صَامَتَا عَلَى عَهْدِ رَسُولِ الله صَلَّى الله عَلَيه وسَلَّم ، فَجَلَسَتْ إِحْدَاهُمَا إِلَى الأُخْرَى ، فَجَعَلَتَا تَأْكُلاَنِ لُحُومَ النَّاسِ ، فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ الله صَلَّى الله عَلَيه وسَلَّم , فَقَالَ : يَا رَسُولَ الله إِنَّ هَاهُنَا امْرَأَتَيْنِ صَامَتَا وَقَدْ كَادَتَا أَنْ تَمُوتَا مِنَ الْعَطَشِ ، فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم ، أَوْ سَكَتَ ، ثُمَّ جَاءَهُ بَعْدَ ذَلِكَ ، أَحْسَبُهُ قَالَ فِي الظَّهِيرَةِ ، فَقَالَ : يَا رَسُولَ الله ، إِنَّهُمَا وَالله لَقَدْ مَاتَتَا ، أَوْ كَادَتَا أَنْ تَمُوتَا فَقَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم : ائْتُمُونِي بِهِمَا فَجَاءَتَا فَدَعَا بِعُسٍّ ، أَوْ قَدَحٍ فَقَالَ لإِحْدَيْهِمَا قِي ، فَقَاءَتْ مِنْ قَيْحٍ وَدَمٍ وَصَدِيدٍ حَتَّى قَاءَتْ نِصْفَ الْقَدَحِ وَقَالَ لِلأُخْرَى : قِي فَقَاءَتْ مِنْ قَيْحٍ وَدَمٍ وَصَدِيدٍ حَتَّى مَلأَتِ الْقَدَحَ ، ثُمَّ قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم : إِنَّ هَاتَيْنِ صَامَتَا عَمَّا أَحَلَّ الله لَهُمَا ، وَأَفْطَرَتَا عَلَى مَا حَرَّمَ الله عَلَيْهِمَا ، جَلَسَتْ إِحْدَاهُمَا إِلَى الأُخْرَى فَجَعَلَتَا تَأْكُلاَنِ لُحُومَ النَّاسِ.

13-وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ

14-"النظرة سهم من سهام إبليس، من تركها من مخافتي؛ أبدلتهُ إيمانًا يجد حلاوته في قلبه". رواه الطبراني والحاكم عن ابن مسعود.


15-حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ () فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا


16-أن سليمان قال لها لم حذرت النمل ؟ أخفت ظلمي ؟ أما علمت أني نبي عدل ؟ فلم قلت : {حْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ} فقالت النملة : أما سمعت قولي : {وَهُمْ لا يَشْعُرُونَ} مع أني لم أرد حطم النفوس ، وإنما أردت حطم القلوب خشية أن يتمنين مثل ما أعطيت ، أو يفتتن بالدنيا ، ويشغلن بالنظر إلى ملكك عن التسبيح والذكر.)  القرطبي(


17-لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (41) سَمَّاعُونَ لِلْكَذِبِ (42)

18-« أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) ». ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ ».


19-قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ24:30 

20-(العين زناها النظر, والأذن زناها السمع, واللسان زناه الكلام واليد زناها البطش-و في رواية "اللمس" - و الرجل زناها المشي ,و القلب يهوى ويتمنىو الفرج يصدق ذلك أو يكذبه) 

21-فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى 20:07

22-فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ 7:34

23-« لا يزني الزاني حين يزني وهو مؤمن ، ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ، ولا يسرق السارق حين يسرق وهو مؤمن

24-قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« يَقُولُ اللَّهُ الصَّوْمُ لِى وَأَنَا أَجْزِى بِهِ ….». رَوَاهُ الْبُخَارِىُّ

25-وأخرج الخطيب في رواة مالك عن جابر رضي الله عنه قال : كان يوسف عليه السلام لا يشبع فقيل له : ما لك لا تشبع وبيدك خزائن الأرض ؟ ! قال : إني إذا شبعت نسيت الجائع

 وأخرج البيهقي في شعب الإيمان عن الحسن - رضي الله عنه - قال : قيل ليوسف عليه السلام : تجوع وخزائن الأرض بيدك ؟ قال : إني أخاف أن أشبع فأنسى الجيعان


26-« إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِى فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِى عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِى. قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِى يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ 

سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِى ». صحيح مسلم



மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு