புனித மிஃராஜ்


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது.

வேந்தர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜினை பின்வருமாறு ஆராயலாம்.

1. மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?
2. மிஃராஜில் பொதிந்துள்ள தத்துவம் என்ன?
3. மிஃராஜ் கூறும் படிப்பினை என்ன?

மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

நபிமார்களிடத்தில் சிதறிக் காணப்பட்ட அனைத்து அற்புதங்களும் அஹ்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யிடத்தில் முழுமையாகக் காணப்பட்டன. நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர் நபியுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் முக்கிய அம்சமாகவே மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. இதனை பின்வருமாறு நோக்கலாம்.

1. நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் பேசினார்கள். நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை தரிசிக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.

2. அர்ஷிலிருந்து பர்ஷ் வரையிலான அனைத்தும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன. படைப்பினங்களின் முதலானவரான பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவேண்டி ஏற்பட்டதால் அர்ஷுக்கும் மேலால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.

3. நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள். ஆனால் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் ‘ஷாஹிதாக’ இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

“எனக்கு நான்கு அமைச்சர்கள் உள்ளனர் இருவர் மண்ணுக்கும் மற்றுமிருவர் விண்ணுக்கும்” என பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்.

மண்ணுக்கான அமைச்சர்கள்.
அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு)
உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

விண்ணுக்கான அமைச்சர்கள்.
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்)
மீக்காயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுமாவர். (மிஷ்காத்)

மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பது அமைச்சர்களின் கடமை. மன்னகத்தின் நிர்வாகத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வின்னகத்தின் நிர்வாகத்தையும் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறு விண்ணகத்திற்குப் பொறுப்பான இரு அமைச்சர்களையும் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்தான் அகிலத்தை ஆளும் வல்ல நாயன் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று விண்ணகம் சென்றார்கள் வேந்தர் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).

“ஒவ்வொன்றும் அதன் அஸலை நாடிச் செல்லும்” என்பது நபிமொழி. இந்த வகையில் கஃபதுல்லாஹ் அமைந்துள்ள புனித இடமே பூமியின் அடிப்படை நிலமாகும். அதனால் பூமியின் எப்பகுதியிலும் சரி வாழும் மனிதர்கள் தாய் நிலமாகிய மக்கமா நகர சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுகின்றனர். அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தாய்ப்பள்ளி மக்கமா நகரில் இருக்கும் கஃபாவுகும். அதனால் தாய்ப் பள்ளியாகிய கஃபாவை கிப்லாவாக ஆக்கி உலக முஸ்லிம்கள் தொழுகின்றனர். ‌

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதால், பெண்ணுக்கு ஆண் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால் ஆணுக்கு வழிப்பட்டவளாக ஆணின் துணையை நாடிச் செல்கிறாள். படைப்பினங்கள் அனைத்துக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியே அடிப்படையாக இருப்பதால் அனைத்துப் படைப்பினங்களும் அஹ்மது நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) விசுவாசிக்கின்றன. அன்னாரின் வேதமே இறுதி வேதமாகவும், முழுமையான வேதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேதமாகவும் அமைந்திருக்கிறது. அனைத்து நபிமார்களும் அஹமது நபியைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி அன்னவர்களின் உம்மத்தினருக்கு உபதேசித்து வந்தனர். அன்னாரிடமே மறுமையில் அபயம் தேடி நபிமார்கள் உட்பட அனைத்து மக்களும் செல்வர்.

அஹமது நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒளிக்கு அல்லாஹ்வின் ஒளியே அடிப்படையாக இருப்பதனால் அதனை இடம், காலம் என்ற படைப்பின் எல்லைகளை தாண்டிச் சென்று சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் விண்ணகம் சென்றார்கள்.

மிஃராஜின் படிப்பினை ;-

1. மிஃராஜ் பயணத்தின் ஆரம்பத்தில் பெருமானாரின் உடல் பிளக்கப்பட்டு இதயம் வேறாக்கப்பட்டு இதயத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின் புதிதாக சில பகுதிகள் இதயத்துள் வைத்து பொருத்தப்பட்ட நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் காணப்படுகின்றது.

2. மிஃராஜ் பயணம் மக்காவிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரையிலும் ‘புராக்’ என்ற வாகனத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “புராக்” என்பது “பர்க்” – மின்னல் என்ற பொருளைக் கொடுக்கும் சொல். இதனை மின்சாரத்தில் இயங்கும் ஒளிவேகங்கொண்ட வாகனம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.

3. காற்று மண்டலம், நெருப்பு மண்டலம் ஆகிய அனைத்து மண்டலங்களையும் தாண்டியதாக இப்பயணம் அமைந்திருக்கின்றது.

4. காலம், இடம், திசை இல்லாத அந்தர வெட்ட வெளியில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதிப் பயணம் அமைந்திருக்கின்றது.

சிந்திக்க வேண்டியவை ;-

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் உடலின் யதார்த்தம் மண்ணின் கூறிய கத்தியால் உடல் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சுட்டுவிரலினாலே உடல் கிழிக்கப்பட்டது. அப்போது குருதி கொப்பளித்திருக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. ஒரு சொட்டு குருதியும் வெளியேறவில்லை. இதயம் வேறாக்கப்பட்ட போதும் அதன் அடிப்பகுதிகள் நீக்கப்பட்ட போதும் அவர்கள் உணர்விழந்திருக்க வேண்டும். மாறாக முழு உணர்வுடன் நடந்தவற்றை பார்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள். இச்செய்கை மூலம் பின்வரும் படிப்பினைகளை பெருகின்றோம்.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடத்தில் கீழ்வரும் மூன்று நிலைகளும் காணப்பட்டிருக்கின்றன.

1. யுத்தத்தில் காயப்பட்ட போது உடலிலிருந்து குருதி வந்தபோதும், அகழி தோன்றும் போது பசியின் கடுமையால் மணிவயிற்றில் கல்லைக் கட்டிய போதும் உடலியல் (பஷரிய்யத்) மிகைத்தவர்களாக இருந்தார்கள். அதனால் மனிதத்துவ நிலை அவர்களில் மேலோங்கிக் காணப்பட்டது.

2. மிஃராஜ் பயணத்தின் முன் உடல் கிழிக்கப்பட்ட போதும், தொடர் நோன்பு நோற்றபோதும், தூக்கமின்றி விடியவிடிய வணங்கிய போதும், வின்னகப் பயணத்தில் காற்று, நெருப்பு மண்டலங்களை கடக்கும் போதும் மலக்கானியத் மிகைத்துக் காணப்பட்டார்கள்.

3. ‘இதற்கப்பால் ஒரு நூல் அளவு தாண்டினால் எரிந்து சாம்பலாகிவிடுவேன்’ என்று கூறி ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வாங்கிய போது அச்சமோ, ஆயாசமோயின்றி அடக்கமாகவே முறுவலித்தவர்களாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மேற்கொண்ட பயணத்தின் யதார்த்தத்தை ஹக்கானியத் என்று சொல்லப்படும். அல்லாஹ்வும், அவனது ஹபீபும் தான் அறிவர். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இம்மூன்று பயணங்களிலும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “அப்தாக” அடியாராகவே இருந்துள்ளார்கள். படைப்பினங்களின் சகல தரப்பையும் சுட்டும் பொதுவான சொல் ‘அப்து’ என்பதை தவிர வேறொன்றில்லை. ஆதலால் ‘தனது அப்தை இராவழி நடத்திய நாயன் தூயவன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“இராவழி நடாத்திய நாயன் தூயவன்” என்ற கூற்று இப்பயணம் அல்லாஹ்வின் விருப்பத்தின் அடிப்படையில் அவனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மிஃராஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.
பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமின்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகின்றது. இதனையே ‘பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்’ என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,
புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. புராக்கிலான பயணமும், ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சடநிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், றப் றப் பின் வருகையும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் “நிஃமத்தில்” – அருளில் தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச்செய்வான் என்பதையும் காட்டுகிறது.

கப்ரில் தொழுகை ;-

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா செல்லும் வழியில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கப்ரில் தொழுது கொண்டிருப்பதை கண்டதாகவும், மஸ்ஜிதுல் அக்ஸா சென்றடைந்த போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வரவேற்க மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தயார் நிலையில் நின்றதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

ஆன்மாவின் வேகம் ;-

மேலும் கூடவே மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத நபிமார்கள் பெருமானாரை வழியனுப்பிய பின்பே பிரிந்தார்கள். ஆனால், புராக் விண்ணகம் செல்லும் முன்பே நபிமார்கள் அங்கு சென்று விட்டார்கள்.
இது, நபிமார்களுடைய ஆன்மாவின் வேகம் உச்ச ஒளி வேகங்கொண்ட புராக்கின் வேகத்தை விட வேகமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

மரணித்தவர் உதவுதல் ;-

அல்லாஹ்வை தரிசித்து உரையாடிய பின் ஐம்பது வேளை தொழுகையை பரிசாக கொண்டுவந்த போது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஐந்தாக குறைக்கும் வரை வாதாடியது.
“தொழுகை முஃமினின் மிஃராஜ்” அல்லாஹ்வை காண்பது மிஃராஜின் பூரணம். பெருமானாரை தவிர்த்து ஏனையோர் கலப்பால் அல்லாஹ்வை காணும் பாக்கியத்தை பெறுவார் என்பதனால்.
ஊசிக்காதளவு அல்லாஹ்வுடன் வசநித்து மதிமயங்கிய அனுபவத்தை பெருமானாரிடம் எடுத்துக்கூறி தினமும் ஐம்பது வேளை இறைவனை தரிசிக்கும் ஆற்றல எல்லா உள்ளங்களுக்கும் கிடையாது. எனவே குறைத்து வாருங்கள் என்று கூறியதிலிருந்து........

1. மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்திருக்கின்றார்கள்.
2. உயிருள்ளவர்களின் நடவடிக்கைகளில் மரணித்தவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்.
3. உயிருள்ளவர்களுக்காக மரணித்தவர்கள் உதவி செய்ய முடியும் என்பது தெளிவாகின்றது.

விஞ்ஞான தத்துவம் ;-

மிஃராஜ் பயணம் சிலேடையாகவும், இஸ்ராப் பயணம் வெளிப்படையாகவும் அல்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதானது தெரிந்த உண்மைகளை கொண்டே தெரியாத உண்மைகள் விளக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானத் தத்துவம் எடுத்துக் காட்டப்படுகிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பௌதீக அதீத விடயங்களான மறைஞானங்கள் பகிரங்கமாக பாமரர்கள் மத்தியில் பேசக்கூடியதல்ல என்பதனால்தான் அறிவுள்ளவர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளும் அமைப்பில் அல்குர்ஆன் சிலேடையாக எடுத்துக் கூறுகின்றது.
மிஃராஜ் நிகழ்வு நபித்துவ 11 ½ ல் ரஜப் திங்கள் இரவின் பிற்பகுதியில் நடந்தேறியதிலிருந்து..... பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மார்க்கம் நடுநிலையானது என்பதையும் நடுநிலை – மத்திமமானதே – மேலானது என்பதையும் காட்டுகின்றது அதாவது.

நடுநிலை ;-

1. நபித்துவத்தின் முளுக்காலம் 23 ஆண்டுகள். இதன் சரிபாதி 11 ½ ஆண்டுகள்.

2. நுபுவ்வத்தின் ஆரம்பம் நல்ல கனவுகலாகும். இக்கனவு ரபியுல் அவ்வலில் தொடங்கியது. இதனை நுபுவ்வத்தின் தொடக்கம் என கணக்கிட்டால் ரஜப் வருடத்தின் மத்தியாகும்.

3. ஷரீஅத்தினடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் நாளாகும். இதன்படி கிழமையின் மத்தி திங்களாகம்.

4. முந்திய மார்க்கங்களில் சில ஜவாலியத் – (தீவிரம்) ஆகவும், வேறுசில ஜமாலியத் (சாத்வீகம்) ஆகவும் அமைந்துள்ளன. ஆனால் இறுதி வேதமான இம்மார்க்கம் இரண்டையும் உள்ளடக்கிய சமநிலையான மத்திய மார்க்கமாக இருப்பதனால்,

“ இந்த உம்மத் நடுத்தரமான உம்மத்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நடுத்தரமானதே சிறந்தது” என்ற அடிப்படையில் “இதுவரை தோற்றுவிக்கப்பட்ட உம்மத்துகளில் இந்த உம்மத்தே சிறந்த உம்மத்” என சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளான். இதனால், மிஃராஜ் நிகழ்வு, மத்திமத்தில் நிகழ்ந்திருப்பதால் இஸ்லாம் நடுநிலையையே போதிக்கிறது. அதுவே அழகானது. அழகையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதனை புலப்படுத்திக் காட்டுகிறது.

மிஃராஜ், ஹபீப், மஹ்பூபை நாடிச்செல்லும் பயணமாகும். இப்பயணத்தின் இன்பம் (விஸாவில்) சந்திப்பில் தங்கியிருக்கிறது. இச்சந்திப்பு அடக்கமான இரவு நேரத்தில் நிகழ்வதால் பூரண இன்பத்தை பெற முடியும் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது.

எனவே மிஃராஜ் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் ஆன்மீகப் பயணத்தின் ஒழுக்கத்தை விளக்கும் ஒரு செயல்முறை பயிற்சியாகவும் அமைந்திருப்பது புலனாகின்றது.

தொழுகை மிஃராஜின் பரிசாகும். இது முஃமினீன் மிஃராஜாகும். அதனால், தொழுகையின் அசைவுகள் அடிமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. “அடிமைத்துவத்தின் பலன் வெற்றியாகும். இதனை அத்திய்யாத்தில் பெறமுடியும். அத்தஹிய்யாத் இறைவனுக்கு முன்னாள் நபி ﷺ அவர்கள் உரையாடியதை நினைவுப்படுத்துகின்றது. அதனால், தொழும்போது நாம் நேரே அல்லாஹ்வுடன் வசனிப்பதாகவும், நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறுவதாகவும் கருதிக்கொள்ள வேண்டும். அதனால் நபி ﷺ அவர்களை நேரில் பார்ப்பதாக கற்பனை செய்துகொண்டு ஸலாம் கூறினால் நபி ﷺ அவர்கள் பதில் கூறுவார்கள் என்று ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றி ;- MAIL OF ISLAM.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு