தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா !!!
தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா தென் இந்தியா தமிழ்நாடு கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா مدرسة العروسية
மறைக்கப்பட்ட வரலாறு
தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்கள் தமிழ்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் எவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டதோ அதேபோன்று தான் இஸ்லாத்திற்கு வழங்கிய பங்களிப்புக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன.
போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பாரிய சமூக சமயப் புணர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனை செவ்வனே நிறைவேற்றிய அறிஞராக செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா) வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
முகலாய மன்னர் அவுரங்கஸீப் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் "பத்வா ஏ ஆலம்கீரி" சட்டவாக்க நூலை தொகுக்கும் குழுவிற்கு பொறுப்பாக இருந்தார்கள்.இமாம் அவர்களின் பரிந்துரைக்கு அமைய மன்னர் அவுரங்கஸீப் அவர்கள், சீதக்காதி அவர்களை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராகவும் நியமித்தார்கள்.
செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் மக்கா, மதீனா, டமஸ்கஸ், பலஸ்தீன் உட்பட பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்கள். மஸ்ஜிதுன் நபவியில் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி ரஹிமஹூல்லாஹ் அவர்களின் மாணவர்களும் செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்களிடம் கற்றதாக வரலாறு கூறுகிறு.
துருக்கியின் சுல்தான் முராத் அவர்களோடும் தொடர்புகளைப் பேணிவந்தார்கள். இவ்வாறான பயணங்களின் பின்னரே கீழக்கரையில் கி.பி 1671ல் அரூஸிய்யா மத்ரஸாவை உருவாக்கினார்கள்.
கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா பல சிந்தனையாளர்களை உருவாக்கியிருக்கிறது. இந்த மத்ரஸாவிற்கு ஆர்காடு நவாபுகள் ஆரம்பம் முதல் உதவி வழங்கிவந்தார்கள். செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை மாப்பிள்ளை லெப்பை ஆலிம், முதல் அரபு - தமிழ் Dictionary ஐ தொகுத்த செய்யித் ஜமாலிய்யா யஸீன் மௌலானா, அமெரிக்காவின் Pacific Colombia பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
வேலூர் அல்பாகியாதுஸ் ஸாலிஹாத்
ஆனால் வேலூர் அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் மத்ரஸாவே முதலாவது தமிழ் அரபு மத்ரஸா என்ற கருத்து தெரிந்தோ தெரியாமலோ சமூகமயப்படுத்தப்படிருப்பதை அவதானிக்க முடியும். அஹ்லா ஹஸ்ரத் என்று அழைக்கப்படும் வேலூர் ஷா அப்துல் வஹாப் ஸாஹிப் அவர்களே வேலூர் அல் பாகியாதுஸ் ஸாலிஹாதின் ஸ்தாபகராவார்.
இந்த மத்ரஸா உருவாக்கப்படுவதற்கு சுமார் 186 வருடங்களுக்கு முன்னரே கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா உருவாக்கப்பட்டது. மற்றுமொரு விடயத்தை நாம் இங்கு அவதானிப்பது அவசியமாகும் அஹ்லா ஹஸ்ரத் என்று அழைக்கப்படும் வேலூர் ஷா அப்துல் வஹாப் ஸாஹிப் அவர்களின் தந்தை அதாஉல் ஹாபீஸ அப்துல் காதிர் லெப்பை ஆலிம் (1784-1866) அவர்கள் கீழக்கரை தைக்கா சாஹிப் றஹிமஹூல்லாஹ் அவர்களிடம் அரூஸிய்யா மத்ரஸாவில் கற்றவராவார்.
அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் மத்ரஸாவில் இருந்து 1930 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட "அல் பாகியாதுஸ் ஸாலிஹாதின் அழகிய சரிதை" என்ற சிறப்பு மலரில் இந்த வரலாறு மறைக்கப்பட்டிருந்தாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆய்வுத்துறையின் முன்னாள் பேராசிரியர் P.M அஜ்மல் ஹான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
வட இந்தியர்கள் தமிழ் முஸ்லிம்கள் செய்த உதவிகளை ஒர் ஆவணத்திலேனும் பதிவு செய்யவில்லை. குறிப்பாக தாருல் உலூம் தேவ்பந்த், ஸஹ்ரான்பூர், முபாரக்பூர் போன்ற தேவ்பந்த் மத்ரஸாக்களுக்கு பொருளாதார ரீதியில் செய்யத உதவிகளைக் கூட நன்றியுடன் நினைவுகூற மறந்துவிட்டார்கள். இவ்வாறு தான் தமிழ் நாட்டில் பேசும் முஸ்லிம்களின் வரலாறுகள் மெதுமெதுவாக மறைய ஆரம்பித்துவிட்டன. விரும்பியோ விரும்பாமலே மறைக்கப்பட்ட எமது வரலாற்றை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
படம் -- கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா
பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை வானொலி
கொழும்பு.
Comments
Post a Comment