ஹிஜ்ரி சகாப்தம் 1435 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!
'' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 47913 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்)
இஸ்லாத்தில் முதன் முதலாக தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. தாரிகுத்தபரி 312)
பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண்டு, யாணை ஆண்டு என பல ஆண்டுகளை நடைமுறையில் வைத்திருந்தனர்.
பின்னர் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் குறிப்பு ஒன்றை தயாரித்து அதில் ஷஃபான் மாதம் என்று குறிப்பிட்டார்கள்.இதனை பின்னர்தான் பார்ப்பின் எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்று விளங்குவ்து? என தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டார்கள்.இந்த நிலையில், கலீபாவிடமிருந்து தங்களுக்கு தேதி குறிப்பிடாமல் கடிதங்கள் வருகிறது.என மாநில ஆளுனர்களிடமிருந்து முறையீடுகள் வந்தன.குறிப்பாக அபூ மூஸல் அஷ்அரி (ரஹ்) அவர்கள் தேதி குறிப்பிடாத தாங்களின் கடிதம் கிடைத்தது'' என நறுக்கென்று எழுதினார்கள்.இதனைத்தொடர்ந்து கலீபா அவர்களின் அவையில் ஆலோசனை நடைபெற்றது.இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என முடிவானது.எதனை அடிப்டையாக வைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் ஆராயப்பட்டது.
நபி(ஸல்) பிறந்தது,நபித்துவம் கிடைத்தது முதலிய பலதையும் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நபி (ஸல்) அவர்கள் திரு மக்காவிலிருந்து திரு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத்தை அடிப்படையாகக்கொண்டு இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏனெனில் நபித்துவம் பிறப்பின் மூலம் தொடங்கினாலும், அது துலங்கியது ஹிஜ்ரத்தின் மூலமேயாகும்.நபித்துவம் தொடங்கியது மக்காவில். ஆனால் அது தொடர்ந்தது மதீனாவில். இறைத்தூது வெளிப்பட்டது மக்காவில். ஆனால் அது வெளிச்சத்தில் வந்ததும்,வளர்ச்சி பெற்றதும் மதீனாவில்தான்.
இந்த வகையில் இஸ்லாம் புத்துணர்ச்சியோடு புதுப்பொழிவு பெற்று,உலகமெல்லாம் பரவியதற்கு காரணம் ஹிஜ்ரத்.ஏகத்துவம் இந்த ஜெகமெங்கும் ஜொலிக்க காரணமான ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் சரித்திரத்தில் திருப்பு முனையாக அமைந்த அழகான அற்புதமான ஒரு நிகழ்வு.இஸ்லாத்தின் குரல் தரையில் கூட ஒலிக்க விடாமல் ஒடுக்கப்பட்டபோது,அது அகிலமெங்கும் ஜெட் வேகத்தில் பறந்து சென்று பரப்ப இறக்கை கட்டிக் கொடுத்தது ஹிஜ்ரத்தாகும்.
ஹிஜ்ரத்திற்கு முன்னர் சொற்ப்பமாக இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரத்திற்குப்பிறகு பல்கிப்பெருகினர். ஹிமுவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரி 6-- ல் நபி (ஸல்) அவர்களோடு உம்ராவுக்கு வந்தவர்கள் 1400-- பேராகவும், ஹிஜ்ரி 8 -- ல் மக்கா வெற்றிக்கு வந்தவர்கள் 12,000 பேராகவும்,ஹிஜ்ரி 10--ல் நபியோடு இறுதி ஹஜ்ஜூ செய்த முஸ்லிம்கள் 1,24,000 மாகவும் உயர்ந்தார்கள்.
இந்த நபித்தோழர்கள் மூலம் உலகமெங்கும் இஸ்லாம் பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.1 PILLIAN (210-- கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு வித்திட்டது ஹிஜ்ரத் அல்லவா! அதனால் தான் இன்று உலகில் நடைமுறையில் உள்ள ஆண்டு அடிப்படையில் ஹிஜ்ரத்தைப்போல அழுத்தமான தாக்கத்தை தரக்கூடியது எதுவும்மில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கின்றார்கள்.
ஹிஜ்ரத் என்பது அச்சமுள்ள குஃப்ரு (இறை மறுப்பு) ஸ்தானத்தை விட்டு புலம்பெயர்ந்து,அச்சமற்ற ஆதரவுள்ள தலத்திற்கு சென்று விடுவதற்குப்பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் 13 -- வது ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.ரபீவுல் அவ்வல் 12 --ஆம் நாள் (28 ஜூன் கி.பி.622) திங்கள் கிழமை லுஹர் நேரம்,தங்களது 53 --வது வயதில் மதீனா நகர் வந்துசேர்ந்தார்கள்.
ஸவ்ர் குகையிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் புறப்பட்டதிலிருந்து 69--நாட்கள் முன்பாயிருந்த முஹர்ரம் மாதம் முதல் நாளே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.காரணம் ஹஜ்ஜு முடிந்து வாணிபம் தொடங்கப்பெறும் மாதமாக முஹர்ரம் இருந்தது.இதல்லாமல் முஹர்ரம் மாதம் பல்வேறு சிறப்புகளைப்பெற்று திகழ்கிறது.
(1) ஷஹ்ருல்லாஹ் அல்லாஹ்வுடைய மாதம் (2) ரமலானுக்குப்பிறகு நோன்பு பிடிக்க சிறந்த மாதம்.(நபிமொழி-- முஸ்லிம் 1163) (3) முஹர்ரமில் ஒரு நாள் நோன்பு பிடித்தால் ஒரு நாளுக்கு முப்பது நாள் (நன்மை) உண்டு (நபிமொழி -- தபரானி மஜ்மவுல் ஹைஸமி --19013) (4) முஹர்ரமில் ஒரு சமூகத்தாருக்கு தௌபா (மன்னிப்பு) வழங்கினான்.மற்ற சமூகத்தாருக்கும் (கேட்டால்) இதில் தௌபா வழங்க இருக்கிறான். (திர்மிதி-- 741) (5) இதில் தான் கஃபாவின் திரைத்துணி மாற்றி புதியது அணிவிக்கப்படும். (தாரிகுத்தபரி -- 412)
ஹிஜ்ரத் என்பது இடம் பெயர்வது மட்டுமல்ல.ஷிர்க் (இறைவனுக்கு இணை வைப்பு) குஃப்ரு (இறை நிராகரிப்பு) ஃபிஸ்க் (பாவ காரியங்கள்) அனைத்தையும் விட்டு விலகி விடுவதுதான் உண்மை ஹிஜ்ரத். '' அல்லாஹ் விலக்கிய அனைத்தையும் விட்டு விலகி விடுவதே ஹிஜ்ரத்'' என்ற (புகாரி --10) நபிமொழியை ஹிஜ்ரத் சிந்தனையாக உங்களின் உள்ளங்களில் விதைத்து எல்லா மக்களுக்கும் எனது இனிய மஅல் ஹிஜ்ரா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அல்லாஹ்வின் பேரருள் நம்மனைவர் மீதும் பொழியட்டுமாக! ஆமீன்!!
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் S.S.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா.கோலாலம்பூர்,மலேசியா)
Comments
Post a Comment