தொழுகையின் தொலை நோக்கு !!!!
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் விஷேசமான கிருபை கொண்டு மிஃராஜ் எனும் வின்னேற்றப் பயணம் மேற்கொண்டு அதில் சமுதாயத்திற்காக வேண்டி ஒரு உன்னதமான ஒரு நினைவுப் பரிசை வாங்கி வந்தார்கள் அது தான் தொழுகை.
அரசாங்கத்தினுடைய மிகப்பெரிய உயர்ந்த விருது நமக்கோ, அல்லது நமது தந்தைக்கோ கிடைத்தால் அந்த உயர்ந்த விருதை நாம் பேணிப் பாதுகாப்போம். அதைப் போல கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த அந்த நினைவு சின்னமான இந்தத் தொழுகை யைப் பாதுகாக்க வேண்டியது நம் கட்டாயக் கடமை.அதை முறையாக ஒழுங்காக பேணி நிறைவேற்ற வேண்டியதும் நமது பொறுப்பாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்கள். தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தது. தங்களுக்கு கிடைக்கப் பெற்ற எல்லா ஏற்றங்களும், பாக்கியங்களும் தன் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதுமே அவர்களுக்கு உண்டு.
இப்படித்தான் உண்மையான குரு இருக்க வேண்டும். ஒரு காமிலான ஷைகு – குருநாதர், தன்னுடைய சீடர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று மட்டும் நினைக்க மாட்டார்.தன்னை விடவும் உயர்ந்து செல்ல வேண்டும் என்று கருதுவார். சீடர்களின் வளர்ச்சியைப் பெருமையாகக் கருதாதவர் பரிபூரணமான குருவாக இருக்க மாட்டார்.
குரு வாயிலானவர். அதன் வழியே சீடன் அப்பால் சென்று விட வேண்டும்.ஷைகு என்பவர் உங்களை விட்டு மட்டுமன்று தன்னை விட்டும் முக்தி தரக்கூடியவர். இந்த வகையில் தான் நபி ஸல் அவர்கள் தங்களுடைய தோழர்களை, உம்மத்தினரை தனிச்சிறப்பு மிக்கவர்களாக ஆன்மீகத்தில் உயர் நிலையைப் பெற்றவர்களாக தரணியில் தனித்துவம் பெற்றவர்களாக உருவாக்கினார்கள்.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ
“அல்லாஹ்வும் அவனது வானவர்களும் நபியே! உங்களுக்கு ஸலவாத்து சொல்கிறார்கள்” என்று வசனம் {33 ; 56} இறங்கிய போது,
“யாஅல்லாஹ்! எனக்கு மட்டும் தான் ஸலவாத்தா! என் சமூகத்திற்கு இல்லையா? நீயும் உன் வானவர்களும் என் சமூகத்திற்கும் ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொண்டான். உடனே
هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ
அல்லாஹ்வும் அவனது வானவர்களும் உங்களி {ன் சமூகத்தி] ன் மீது ஸலவாத்து கூறுகிறார்கள் [33 ; 43] என்ற வசனத்தை அருளினான்.
வஸீலா என்றொரு உயர்ந்த ஸ்தானம் சொர்க்கத்தில் உண்டு. அது பெருமானாருக்குத் தான் நிச்சயிக்கப்பட்டது. என்றாலும் நபி (ஸல்) அவர்கள், எனக்கு வஸீலா என்ற அந்த அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று நீங்கள் அல்லாஹ்விடத்திலே பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார்கள்.
அண்ணல் நபிக்கு அவ்வந்தஸ்து கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. இருந்தாலும் ஏன் நம்மைக் கேட்கும் படி சொன்னார்கள் என்றால், அதிலே நமக்கும் ஒரு பங்களிப்பு வேண்டும் என்பதற்காக. அதை நாம் கேட்கிற போது அதைக் காரணம் காட்டி நமக்குப் பரிந்துரை [ஷஃபாஅத்] செய்யலாம் என்பது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கம்.
மிஃராஜ் எனும் வின்னேற்றப் பயணத்தின் போது அல்லாஹுத் தஆலா, நபியவர்களே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும் என்று சொன்னான். அந்த நேரத்திலும் தன் சமூகத்தை மறக்காமல் எனக்கு மட்டும் தான் ஸலாமா...? என்னுடைய சமூகத்திற்கும் வேண்டுமே என்று கேட்டுப் பெற்றார்கள் காருண்ய நபி [ஸல்] அவர்கள்.
السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين
அவர்கள் மிஃராஜிற்கு சென்று அல்லாஹ்வை தரிசித்தார்கள். அந்த தரிசனம் எனக்கு மட்டும் தானா? என் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டுமே என்று ஏங்கினார்கள். அதற்குப் பரிசாகத்தான் அல்லாஹ் நமக்குத் தொழுகையைக் கொடுத்தான். தொழுகை என்பது நமக்குக் கிடைக்கப் பெறுகிற ஒரு இறை தரிசனம். அந்த தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் தயங்கக் கூடாது.அதை இடை விடாமல் தொடர்ந்து நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாக இருக்கிறது.
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
(நபியே! குர்ஆனாகிய) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் பட்டதை நீர் ஓதுவீராக! தொழுகையையும் (அல்லாஹ் விதியாக்கிய வாறு) நிறைவேற்றுவீராக! நிச்சயமாகத் தொழுகை (அதை நிறை வேற்றுபவரை) மானக் கேடான செயலிலிருந்தும், மார்க்கத்தில் மறுக்கப்பட்டதிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவு கூர்வது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரிதாகும்; இன்னும் நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான். குர்ஆன் [29 ; 45]
தொழுகையில் குர்ஆன் ஓதுவது இருக்கிறது,பிரார்த்தனை இருக்கிறது. எல்லாவற்றையும் விட மிகப் பிரதானமாக அல்லாஹ் வுடைய திக்ர் (தியானம்) இருக்கிறது. நாம் குர்ஆன் ஓதுகிறோம் என்றால், அல்லாஹ் வோடு பேசுகிறோம் என்று அர்த்தம். தூர்சீனா மலையில் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வோடு பேசினார் களே அந்த நிலையை நமக்கு தொழுகை பெற்றுத் தருகிறது.
நாம் தொழுகையில் குர்ஆன் ஓதுகிற போது அது மிஃராஜ்வுடைய ஸ்தானத்திற்கு நம்மைக் கொண்டு செல்கிறது.கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அந்தத் தொழுகையில் குர்ஆன் ஓதி கைகட்டி அல்லாஹ் வுக்கு முன்னிலையில் அவனைப் பார்ப்பதைப் போல வணங்க வேண்டும். பார்க்க முடிய வில்லையெனில் அவன் உங்களைப் பார்க்கிறான் என்ற உணர்வோடு வணங்குங்கள் என்று இஹ்ஸானுடைய உயர்ந்த நிலையைக் கற்றுக் கொடுத்தார்கள்.
உள்ளத்தை உருக வைத்த குர்ஆன்
தொழுகையில் திலாவத் – குர்ஆன் ஓதுவது இருக்கிறது என்பதல்ல. அது தான் தொழுகையின் ரூஹ் - உயிராகும். குர்ஆன் என்பது அல்லாஹ் வுடைய வசனம். அல்லாஹ் தன் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தை. அந்த வசனம் நம்முடைய வாயில் வெளிப் படுகிறது. அது உள்ளத்தில் ஏற்படுத்துகிற புரட்சி, அதனால் ஏற்படுகிற மாற்றம் சாதாரணமானது அல்ல. அது மிகப் பெரிய சிந்தனைப் புரட்சியையும், மிகப்பெரிய இறை நம்பிக்கைப் புரட்சியையும் ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் அது அல்லாஹ் வுடைய அதிசயமான வேதம்.
உலகப் புகழ் பெற்ற காரிகளில் ஒருவர் அப்துல் பாஸித். அவருடைய கிராஅத்தைக் கேட்காத முஸ்லிம்கள் இருக்க மாட்டார்கள். உலகப் பிரசித்த பெற்ற அந்த காரி அப்துல் பாசித் அவர்களிடத்தில் கேட்கப் பட்டது ; குர்ஆனை நீங்கள் உலகெங்கும் கொண்டு சேர்த்து விட்டீர்கள். எல்லோருடைய காதுகளிலும் கேட்க வைத்து விட்டீர்கள். குர்ஆன் ஒரு அற்புதம் தானே என்று. அதிலென்ன சந்தேகம்! குர்ஆன் ஒரு அற்புதம், ஒரு அதிசயம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
அப்படியென்றால் அதை ஓதி ஓதி காலத்தைக் கழித்த உங்களுக்கு அது அற்புதம் என்பதில் ஏதாவது அனுபவம் உண்டா? என்று கேட்டனர். நிறைய அனுபவம் உண்டு என்ற போது, அதில் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை சொல்ல முடியுமா...? தாரளமாகச் சொல்கிறேன்.
எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த நேரம் எகிப்தின் அதிபராக ஜமால் அப்துன் நாஸர் அவர்கள் இருந்தார்கள். அவர் ரஷ்யாவுக்கு செல்கிறார். ரஷ்யா கம்யூனிசத்தின் இரும்புப் பிடியில் இருந்த கால காட்டம் அது. அந்த நேரத்தில் அப்துன் நாசர் அவர்கள் ரஷ்யா வினுடைய சுற்றுப் பயணத்தையெல்லாம் முடித்து விட்டு அங்குள்ள கம்யூனிசத் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்கள்.
அந்த தலைவர்கள் கேட்டார்கள் ; “ஜமால் அவர்களே! எவ்வளவு காலத்திற்கு இஸ்லாத்தைக் கொண்டு திரிவீர்கள். மதத்தை தூக்கி எறியுங்கள், சிகப்பை வேதமாக ஏற்றுக் கொள்ளுங்கள். எங்கள் சித்தாந்ததிற்கு வாருங்கள், எகிப்தை நாங்கள் நவீன டெக்னாலஜி களைக் கொண்டு வளப்படுத்துகிறோம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு அதை இன்னும் நாங்கள் எந்தளவுக்கு கொண்டு செல்ல முடியுமோ அந்தளவுக்குக் கொண்டு செல்கிறோம். இஸ்லாத்தை தூக்கி எறிந்து விட்டு கம்யூனிசத்திற்கு வாருங்கள் என்று சொன்னார்கள். அந்நேரத்தில் எதுவும் கூறாமல் வந்து விட்டார்கள்.
இரண்டு வருடம் கழித்து மீண்டும் அவருக்கு ரஷ்யா செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது நீங்களும் ரஷ்ய பயணத்திற்கு தயாராகுங்கள், என்னோடு நீங்களும் வாருங்கள் என்று எனக்கு ஒரு கடிதம் வந்தது. ரஷ்யாவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ?
எனது வேலை அல்லாஹ்வின் வேதத்தைப் ஓதுவது.எனவே சவூதி, துபாய்,மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்றால் எனக்கு வேலை இருக்கும்.ஆனால் ரஷ்யா கம்யூனிச நாடு, அல்லாஹ்வே இல்லை என்று சொல்லக்கூடிய நாடு. அந்த நாட்டிற்கு என்னை ஏன் அதிபர் அழைக்கிறார் என்று எனக்கு குழப்பமாக இருந்தது.
ஆனாலும், கூட சென்றேன். அங்கே கம்யூனிசத்தினுடைய முக்கியமான தலைவர்களெல்லாம் கூடி இருக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியிலே ஜமால் அப்துன் நாஸர் அவர்கள் ; என்னோடு வந்திருக்கிற இந்த காரி ஸாஹிப் அவர்கள் உங்களுக்கு மத்தியிலே கொஞ்சம் நேரம் ஓதுவார்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். எதை ஓதுவார்கள்...? குர்ஆனை ஓதுவார்கள். தாராளமாக ஓதச் சொல்லுங்கள் என்று அவர்கள் அனுமதித்தார்கள்.
எந்த அத்தியாயம் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வாழ்விலே புரட்சியை ஏற்படுத்தியதோ, அவர்களுடைய வாழ்கையை புரட்டிப் போட்டதோ அந்த தாஹா என்ற அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தேன். இரண்டு பக்கங்கள் ஓதி முடித்து விட்டு கண்களைத் திறந்த பொழுது தான் குர்ஆனுடைய அற்புதத்தைக் கண்டேன்.
அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஒரு பிரலயமே அங்கு ஏற்பட்டிருந்தது. நான் ஓதி முடித்து விட்டு கண்களைத் திறந்து பார்த்த பொழுது அங்கிருந்த கம்யூனிசத் தலைவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்களுடைய கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருக்கிறது, தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள்.
ஜமால் அப்துன் நாஸர், ஏன் அழுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அது தான் எங்களுக்கும் தெரியவில்லை. இவர் என்ன ஓதினார்.....? என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இவர் ஓதியதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. அதில் ஒரு வசீகரம் இருக்கிறது. அது ஏதோ ஒரு மாற்றத்தை எங்கள் இதயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. என்ன காரணம் என்று தெரியாமலேயே அழுகை வருகிறது என்று கூறினார்கள்.
உலகத்திலே அல்லாஹ்வை மறுக்கக் கூடிய, உண்மையான வேதம் என்று ஏற்றுக் கொள்ளாத கம்யூனிசத் தலைவர்களான அவர்களு டைய இதயத்தைக் கூட மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இந்த குர்ஆனுக்கு இருக்கிறது என்றால் அந்த குர்ஆன் நமது இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ன!
அந்த அற்புதக் குர்ஆனை அதிகமதிகம் ஓத வேண்டும். எப்படி ஓத வேண்டும் ? அல்லாஹ்வுடைய வேதம் என்ற நினைப்போடு ஓத வேண்டும், அந்த உணர்வோடு ஓத வேண்டும், அந்த நம்பிக்கை யோடு ஓத வேண்டும். தனியாக மட்டுமல்லாமல் சிந்தனையோடு தொழுகையிலே ஓத வேண்டும். அப்படி ஓதுகிற பொழுது நாம் அல்லாஹ்வை தரிசிக்கக் கூடிய,அல்லாஹ்வோடு வசனிக்கிற ஒரு உன்னதமான மகத்தான பாக்கியத்தை நாம் பெறுகிறோம்.
وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آَمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
இத்தூதர் மீது இறக்கப்பட்டதை அவர்கள் செவியுற்றால், உண்மையை உணர்ந்து கொண்ட காரணத்தினால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நபியே! நீங்கள் காண்பீர்கள்.எங்கள் இறைவனே! நாங்கள் [இவ்வேதத்தின் மீது] நம்பிக்கை கொண்டோம். எனவே [இவ்வேதம் சத்தியமானது என்று] சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக என்று அவர்கள் கூறுவார்கள். [அல்குர்ஆன் : 5 ; 83]
நஜ்ஜாசி பாதுஷா - அபிசீனிய மன்னர் அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்க வில்லை. திருமறைக்குர்ஆனில் மர்யம் என்ற அத்தியாயம் அவருக்கு முன்னிலையில் ஓதப்படுகிறது. ஜாபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அதைக் கேட்ட பாதுஷா அவர்கள் அப்படியே அழுகிறார். அங்கிருந்த சபையோர்களும்,எல்லா பாதிரிமார்களும் அழுகிறார்கள்.
அதன் பின் அந்த மன்னர் பூமான் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைக்கிறார்கள்.அதிலே 70 பேர் கொண்ட கிருஸ்தவ அறிஞர்கள் அங்கே செல்கிறார்கள். அப்பொழுது பூமான் நபி (ஸல்) அவர்கள், யாஸின் என்ற அத்தியாயத்தை அவர் களிடத்தில் அழகாக ஓதினார்கள். அதை ஓதி முடிக்கிற போது அந்த 70 கிருஸ்தவ அறிஞர்களும் அதைக் கேட்டு மனமுறுகி கண்ணீர் சிந்திக் கொண்டிருக் கிறார்கள். இது எங்கள் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இறங்கிய வேதத்தைப் போலல்லவா!!! இருக்கிறது என்று சொல்லி விட்டு இறைவனையும்,இறைத்தூதர் நபி [ஸல்] அவர்களையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றார்கள்.
குர்ஆன் அற்புதமானது, அந்த அற்புதமான வேதத்தை நாம் அழுத்தமாக, திருத்தமாக, நம்பிக்கையோடு ஓதுகிற பொழுது அது இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். புரட்சியை ஏற்படுத்தும், கண்களில் நீர் சிந்த வைக்கும்.
அப்பொழுது தான் அந்தக் குர்ஆன் நமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அர்த்தம். அல்லாஹுத்தஆலா அந்த சிறந்த மாற்றத்தை நம் அனைவருக்கும் தருவானாக!
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment