மன்னர் நபியின் மாண்பார் அற்புதங்கள் !!!
அவர்களின் வாழ்வுக்காலம்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்புவியில் சந்திரக் கணக்குப்படி 63 ஆண்டுகள், 3 நாட்கள், 6 மணி நேரமும்,சூரியக் கணக்குப்படி 61 ஆண்டுகள், 49 நாட்கள், 6 மணிநேரமும் வாழ்ந்து வையகத்திற்கு வெற்றி வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்.
சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
அவர்களின் சரீர சக்தி!
ஒரு நபிக்கு 500 மனிதர்களின் சக்தி உண்டு,காரணம் வஹியைத்தாங்க அதிக சக்தி வேண்டும். ஆனால் நீதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
அவர்கள் 40 நபியின் சக்தியை கொடுக்கப்பட்டவர்கள்.சக்தி மிகப் பெற்ற முக்தி நபிகளார்!..... ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்.1. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் முன்னாலும் சமீபத்தில் இருப்பதைப் பார்ப்பது போன்றே,பின்னாலும் தொலைவிலும் இருப்பதையும் ஏக காலத்தில் ஒன்றாகவே பார்ப்பவர்களாக இருந்தார்கள்.
2. பகலிலும்,வெளிச்சத்திலும் பார்ப்பதைப் போன்றே,இரவிலும்,இருளிலும் சிறியன - பெரியன யாவையும் பார்ப்பார்கள்.
3. தங்களின் வாய் உமிழ் நீர்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும்.
4. பாலருந்தும் பாலர்களின் வாயைத் தங்களின் முபாரக்கான உதட்டுடன் இணைத்து முத்தமிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
அவர்களின் உமிழ் நீர் பட்ட அக் குழந்தை அன்று முழுவதும் பசி தீர்ந்திருக்கும்.தாயைப் பாலுண்ணத் தேடாது.இதனைத் தங்கள் வீட்டுக் குழந்தைகள் விஷயத்தில் அனுபவ ரீதியாக காணப் பட்டிருக்கிறது.
5. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 'அக்குள் ' பகுதி வெண்மையாகவும் நறுமணம் கமழுவதாகவுமிருக்கும்.
6. அவர்கள் வெளியிடும் சப்தம் அருகிலிருப்பவர்களுக்கு, உரத்ததாகத் தோன்றாது. ஆனால் தொலை தூரம் வரை சென்று கேட்கும்.
7. அது போன்றே மற்றவர்களால் கேட்க முடியாத, வெகு தொலைவிலிருந்து வரும் சப்தத்தை ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
அவர்கள் மிகத் தெளிவாக கேட்பார்கள்.
8. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தூக்கத்தின் போது உடல் மட்டும் தூங்கும்,உள்ளம் விழித்தே இருக்கும்.கண்கள் உறங்கும்.கல்பு ( இதயம் ) உறங்காது.
9. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு எப்பொழுதும் கொட்டாவி ஏற்பட்டதில்லை.
10. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை,அம்பர் கஸ்தூரி போன்ற நறுமணத் திரவியங்களை நாணச் செய்து விடும் அளவுக்கு சிறந்த மணமுள்ளதாக இருக்கும்.
11. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் திரு மேனியிலிருந்து நறுமணம்,அவர்கள் சென்ற வழியிலுள்ள காற்றில் கலந்து நின்று,அவர்களை சந்திக்கத் தேடி வருபவர்களுக்கு வழி காட்டும்.
12. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த போது தொப்புள் கொய்யப்பட்ட நிலையில் பிறந்தார்கள்.
13. அது போன்றே கலிமா விரலை வானின் பால் உயர்த்தியவர்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.
14. காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
அவர்கள் கத்னா ( சுன்னத் ) செய்யப்பட்டவர்களாகப் பிறந்தார்கள்.
15. அவ்வாறே தொழுகையின் உச்சகட்டமான சுஜூதுடைய நிலையில் கிப்லாவை முன்னோக்கியவர்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.
16. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சரீரத்தில் ( மலம் ஜலம் ) போன்ற அசுத்தங்கள் எதுவும்,எப்பொழுதும் பட்டதில்லை.
17. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பால்குடித்த பருவத்திலேயே மற்றவ ( மனித ) ர்களிடம் வசனித்திருக்கிறார்கள்.
18. எப்பொழுதும் வெயில் காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தலைக்கு மேல் சூரியன் நிழல் தரும்.
19. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உடைகள்,ஆடைகள் மீது எப்பொழுதும் ஈக்கள் உட்காருவதில்லை.
20. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிறு நீரில் வாடையே ஏற்படுவதில்லை.
21. ஆத்ம உலகில் ( ஆலமுல் அர்வாஹில் ) முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட ஆத்மா (ரூஹ் ) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஆத்மாவே ஆகும்.
22. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு ஒருபோதும் உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டதில்லை.
23. ஒரு கூட்டத்தின் மத்தியில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அமர்ந்தால் அவர்களின் இரு புஜங்களும் மிக
உயர்வாகக் காட்சி தரும்.
24. ஆத்ம உலகில் ' அலஸ்து பிரப்பிகும் ' நான் உங்கள் இறைவனல்லவா? என்று இறைவன் வாக்குறுதி கேட்ட போது '' பலா '' -- ஆம்! என முதன் முதலில் ஒப்புதல் அளித்தவர்களும்,நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே ஆவார்கள். வஸ்ஸலாம்.
நன்றி ;- 1990 ஆம் ஆண்டு, இராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநாட்டு மலர்.
- ; என்றும் தங்களன்புள்ள ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா மர்ஹூம்
S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம்
ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
(முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை )
வெளியீடு ;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.
Comments
Post a Comment