இராமநாதபுரத்தை கலக்கும் இஸ்லாமிய மருத்துவர்கள் குடும்பம் !!!
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மர்ஹூம் அப்துல்லாஹ் இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை.
மறைந்த டாக்டர் மர்ஹூம் அப்துல்லாஹ்வுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர், சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர், அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே. இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள்.
மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா. “சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் மர்ஹூமா செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவிடாமல் தடுக்க, வேலைக்குப் போனார். அவரது ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்தான் வற்புறுத்தி, அப்பாவைப் படிப்பைத் தொடரவைத்தார். நன்றாகப் படித்து, ‘சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி’யில், பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாக வந்தார். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில், ஹானரி டாக்டராக முதலில் பணியாற்றினார். பிறகு, தாயாரின் பெயரில் செய்யதம்மாள் மருத்துவமனையைச் சிறிய அளவில் ஆரம்பித்தார்.
எங்களுடைய மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், குறைந்த செலவில் எல்லோருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்பட்டார். அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. என் தம்பி, தங்கை இருவரும் டாக்டர் இல்லை. ஆனால், எல்லோரும் ஒரே வீட்டில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகள் இன்று டாக்டர்களாகிவிட்டார்கள். சிலர், எங்கள் மருத்துவமனையிலும், சிலர், வெளியூர் மருத்துவமனைகளிலும் பிராக்டீஸ் செய்கிறார்கள்.
அவர்கள் திருமணம் செய்துகொண்டவர்களும் டாக்டர்கள்தான். மொத்தமாக எங்கள் வீட்டில் இப்போது 20 டாக்டர்கள்.’’ என்று பெருமிதமாகச் சொன்னார். ஒரு பழமையான மரத்தை வெட்டுவதற்கு, அரசு நிர்வாகம் முயற்சி எடுத்தபோது, அதில் உள்ள பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்திவர் டாக்டர் பாபு அப்துல்லா.
‘‘வீட்டில் எல்லோரும் டாக்டர்கள் என்பதால், வருடத்துக்கு ஒருமுறையோ, ஏதாவது விசேஷத்துக்கோதான் ஒன்று சேர முடிகிறது. எங்களுக்கு ஓய்வே இல்லை. நாங்கள் வீட்டில் இருந்த நாட்களைவிட, மருத்துவமனையில் இருக்கும் நாட்கள்தான் அதிகம்’’ என்று சிரிக்கிறார் டாக்டர் சுல்தானா. சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சுல்தானா டாக்டரிடம் போனால், சுகப்பிரசவம் என நம்பி வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப, சிசேரியன் பிரசவங்களை முடிந்தவரையில் தவிர்த்து, அதிக அளவில் சுகப்பிரசவங்களை நடத்தி, கைராசிக்காரர் எனப் பெயர் வாங்கியிருக்கிறார்.
“ஓய்வே இல்லாமல் மற்றவர்களின் உடல்நலனைக் கவனித்துக் கொள்கிறீர்கள். உங்கள் உடலைக் கவனிக்க நேரம் இருக்கிறதா?”
“காலையில் எழுந்து தோட்டத்தில் உள்ள செடி, மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவேன். வாக்கிங் போவேன். வீட்டுக்குள்ளேயே சிம்பிளான உடற்பயிற்சிகளைச் செய்வேன். அதுவே சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது, பேட்மிண்டன் விளையாடுவேன். மேலும், சில விளையாட்டு கிளப்களுக்கும் ஆதரவாகச் செயல்படுகிறோம்” என்கிற பாபு அப்துல்லாவைத் தொடர்ந்தார் தம்பி சின்னத்துரை அப்துல்லா. “நானும் என் மனைவியும் சேர்ந்து, வீட்டுத் தோட்டத்தில் வாக்கிங் போவோம். சிம்பிளான உடற்பயிற்சிகள் தினமும் செய்வோம். உடற்பயிற்சியைப் போல, உணவுக்கும் அதிக முக்கியத்துவம் தருவோம். காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வோம். விசேஷ நாட்களில் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவோம். எங்கள் வீட்டிலேயே எல்லா ஸ்பெஷலிஸ்ட்களும் இருப்பதால், உடலில் ஏதாவது பிரச்னை வந்தால், கன்சல்ட் செய்வோம். உடற்பயிற்சி, சரியான உணவு, மருத்துவ வேலைகளில் பிஸி என இருப்பதால், இதுவரை யாருக்கும் எந்த பெரிய நோயும் வந்தது இல்லை.’’
இந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை மருத்துவரான ஷாநாஷ் ஃபாருக் அப்துல்லா, “குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது. டி.விகூட அதிகம் பார்ப்பது இல்லை. வீட்டுக்கு வந்தால் உடனே, ஹாஸ்பிட்டலில் இருந்து ‘சீரியஸ் கேஸ்’ னு போன் வரும். இந்தப் பரபரப்பிலும், வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்கள் வாழ்க்கை மருத்துவத் துறையைச் சார்ந்து இருப்பதால், குடும்பமாகச் சேர்ந்து பேசும் போதுகூட, மருத்துவம் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். ரம்ஜானுக்கு எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. வீடே ஒரு மருத்துவ மாநாடு மாதிரி இருக்கும்.” என்று சிரிக்கிறார்.
“ராமநாதபுரத்தை மருத்துவ நகரமாக மட்டும் இல்லாமல், கல்வி நகரமாகவும் மாற்ற எங்கள் அப்பா கனவு கண்டார். அதை நாங்கள் முடிந்த அளவு நிறைவேற்றிவருகிறோம். கூடுதலாகப் பசுமை நகரமாக்குவதும் எங்கள் குடும்பத்தின் கனவு. யார் போன் செய்து கேட்டாலும் மரக்கன்றுகளை வழங்கியும், நடுவதற்கு இடம் கொடுத்தால் நட்டுப் பராமரிக்கவும் செய்கிறோம். மருத்துவம் மட்டுமல்ல, மக்களுக்காகச் செய்யும் எல்லா சேவையுமே உயர்வானவைதான்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா.
டாக்டர் குடும்பம் தரும் டிப்ஸ் வெயில் காலங்களில், காட்டன் உடைகளை அணியுங்கள். உணவில் காரத்தைக் குறைப்பது நல்லது. பழங்கள் அதிகமாகச் சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். செயற்கையான குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்கள்.
உடல் ஆரோக்கியத்துக்கு, தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி அவசியம். ஒருமணி நேர சிம்பிள் உடற்பயிற்சிகளை வாரம் மூன்று நாட்களாவது செய்யுங்கள். 20 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். எண்ணெயில் பொரித்த, ஜங் ஃபுட் உணவுகளைத் தொடாதீர்கள். குழந்தைகளுக்குக் காய்கறிகள், கீரைகள், மீன் என சத்தான உணவை, சின்ன வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். உடலில் பிரச்னைவந்தால், சுயமாக மருத்துவம் பார்க்காமல் டாக்டரைப் பாருங்கள்.
சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டாலே, பல நோய்கள் நம்மை அணுகாது. மனதை அலைபாயவிடாமல், ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ளுங்கள்.
விதை ஒன்று விருட்சமானது!
ராமநாதபுரத்தின் முதல் டாக்டரான மர்ஹும் அப்துல்லாஹ், தன் தாய் பெயரிலேயே செய்யதம்மாள் பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். வறுமை, அறியாமை காரணமாக, அந்த காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அந்தத் தருணத்தில், டாக்டர் அப்துல்லாஹ், மற்ற ஆசிரியர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று, வயல்வேலை, கால்நடை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை, சாப்பாடுபோட்டுப் படிக்கவைப்பதாக உத்தரவாதம் கொடுத்து, மாணவர்களை விடுதியில் தங்கிப் படிக்க வைத்தார்கள்.. அப்படிப் படித்த மாணவர்களில் இன்று பலர், ஐ.ஏ.எஸ் உட்பட பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்..
Comments
Post a Comment