ஜமாலி எனும் பேராளுமை !!!


மணம்சூழ் மல்லிப்பட்டிணத்தில் மங்கலமான நேரமதில் 03-06-1960 ல் மாண்பான தம்பதியாம் முஹம்மது மஜீத், ரஹ்மத்துல் குப்ரா (அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக!) விற்கு மைந்தராக பிறந்தவர்
தமிழகம் தந்ததனியொருவர்
தன்னடக்கத்தில்தன்னிகரில்லாதவர்
புதிய பயணம் எனும் ஹழ்ரத் அவர்களின் மாதஇதழின் 
வழியே அகீதாவை கற்றோர் ஆயிரமாயிரம்.

ஆதாரங்கள் அடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளால் அது நிரம்பி வளிந்தது
எழுத்தெனும் ஆயுதங்களை ஏந்தியும் பேச்செனும் தற்காப்பு கலைகளை சூடியும் வஹ்ஹாபிகளுக்கு எதிரான போர்களத்தில் புகுந்து புகழாரம் பெற்றவர்
இன்றும் சுன்னத் வல் ஜமாஅத்தின் தலைப்புக்களில் தேடுகையில் தனியாக இணையத்தில் வந்து குவிவது ஹழ்ரதவர்களின் பதிவுகளே
அரபி பாண்டித்துவத்தின் அசுர திறமையினை ஹழ்ரத் அவர்களிடம் மண்டியிட்டு ஓதிய மாணவர்களிடம் கேட்கலாம்.

எவரும் தொடுவதற்கு துணியாத தலைப்புக்களான வஸீலா, இஸ்திகாஸா, மவ்லித் போன்றவற்றையும் பொதுமேடைகளில் புரியும்படி போட்டுடைத்தவர்
வாதம் செய்ய வா வா என மாதம் மாதம் கத்திய வம்பர்களையும் ஆதாரங்கள் எனும் வாளால் வாலை வெட்டியவர்.

வாதிப்போர்களின் வாதங்களை அவர்களின் வடிவங்களின் பாணியிலேயே வென்றவர்.

நாகூர் பாதுஷாவை நாகூசாது வசை பாடிய நாதாரிகளை *ஸகீரத்* எனும் வார்த்தையால் நாவடக்கியவர்.

தப்ஸீரின் கருத்தெல்லாம் பிஸ்மியின் நுக்தாவிலுள்ளதோ காட்டுமென கத்தியோரை லேப்டாபில் பிரதிபலிக்கும் புத்தகங்கள் முழுதும் சீடியில் உள்ளதே அவற்றை அப்படியே காட்டுமென கருத்துரைத்து காதறுத்தவர்
கொடுக்க நிதியில்லாத பற்பல ஊர்களில் தன்னுழைப்பால் மஜ்லிஸினை ஏற்படுத்தியவர்.

நேர மேலாண்மையிலும் திட்டவடிவாண்மையிலும் சிறந்தவர்
தான் கலந்து கொள்ளும் எந்த மஜ்லிஸாக இருப்பினும் முன்னரே வருகை தந்து கிராஅத் துவங்கி நன்றியுரை, துஆ வரை முழுவதையும் மும்முரமாய் கவனிப்பவர்.

இந்நாள் வரை தனியாகவே பயணிக்கிறார்கள் வலிமார்களின் துஆ பரக்கத் எனும் பெரும் படை எனக்கிருக்கையில் பூணைபடை எதற்கென கூறுபவர்
வலிமார்களின் அருட்பார்வையினை சம்பூரணமாக பெற்றவர்
நாதாக்களை தேடி தேடி தரிசிப்பதில் அலாதியான இன்பம் கண்டவர்
சூபித்துவ வாழ்வை தன் வாழ்வாக கொண்டவர்.

தரீக்கத் ரீதியில் தர்க்க ரீதியில் பல்வேறு கூறுகளாக பிரிந்திருந்த சுன்னத் வல் ஜமாஅத் நபர்களை முதன்முதலாக ஒரே மேடையில் தஞ்சையில் அணிவகுக்க செய்தவர்.

தன்னோடு தனியாளாக தரணிமுழுதும் தடைநீக்க தன்னிகரில்லா பைசல் எனும் கோவையின் சிம்மத்துடன் ஊர் ஊராக இளைஞர்களை ஒன்றாக்கி சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் எனும் ஆளுமை இயக்கத்தினை உருவாக்கியவர்.

ஹழ்ரத் அவர்களின் நற்குணங்களில் பிரதானமானது *"கண்ணியம் கொடுத்து கண்ணியம் பெறுவது"

வயதில் மிகச்சிறிய ஆலிமாக இருப்பினும் மத்ரஸா மாணவர்கள், பொது மக்கள் என எவரையும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை வெளியாக்கியதேயில்லை வாங்க, போங்க என ஹழ்ரத் அவர்கள் அழைக்கும் போதெல்லாம் மெய் சிலிர்ப்பேன்.

காயல்பதி மஹ்ழராவில் ஹிப்ழ் ஓதும்காலத்தில் ஹழ்ரத் அவர்கள் ஜியாரத்திற்காக காயலிற்கு வருகை தந்தார்கள். முதல் சந்திப்பிலேயே இவர் ஒரு சிறந்த வழிகாட்டி என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டேன்
அன்றிலிருந்து இன்று வரை ஹழ்ரத் அவர்களின் தொடர்பு தொலைபேசி வாயிலாக தொடர்கிறது.

எவ்வளவு நேரமும் ஐயங்களை தீர்க்க ஹழ்ரத் அவர்கள் சளித்ததேயில்லை
பற்பல சமயங்களில் குதர்க்க கேள்விகளால் குத்தும் போதும் குழம்பிய மனதிற்கு குதூகலத்தையே கொடுத்தது குருநாதரின் குரல்
எவராக இருப்பினும் எளிதில் நெருங்கி பேசலாம், தொலை பேசியில் உரையாற்றலாம்.

எச்சூழலிலும் தனக்கென தனி மரியாதையினை ஹழ்ரத் அவர்கள் எதிர்ப்பார்த்ததேயில்லை.அதே சமயம் எந்த சபையிலும் அவர்களின் கண்ணியம் குறைந்ததுமில்லை.

மூத்த ஆலிம்கள் விடயத்தில் தன் இருக்கையை ஒதுக்குவது, எழுந்து கண்ணியப்படுத்துவது, தன் கரங்களாலேயே தண்ணீரும் தேனீரும் ஊற்றிக் கொடுப்பது, கரம் முத்துவது ஏன் காலணி எடுப்பது வரை ஹழ்ரத் அவர்களின் செயல்களை சுற்றியிருந்தோர் பற்பல சூழல்களில் பார்த்துள்ளனர்
ஹழ்ரத் அவர்களின் இந்த பணிவு கலந்த கண்ணியத்தை பெற்ற ஆளுமைகள் வியப்பின் விளிம்பிற்கே சென்றுள்ளனர்.

சமீபத்தில் சென்னையின் ஓர் ஆன்மீக மஜ்லிஸில் கலந்து கொள்ளும் சமயம் மேலப்பாளையம் தந்த பெருமேதை ஒருவர் தானும் ஹழ்ரத்தும் மேற்கொண்ட இலங்கை பயணத்தை பற்றியும் அதில் தன்னுடன் நடந்துகொண்ட நற்குணங்களை பற்றியும் விவரிக்கையில் இறுதியாக ஓர் வாக்கியத்தை உரைத்தது இப்போதும் செவிகளில் ரீங்காரமிடுகிறது
*"நாடி நரம்பு சதையென இயற்கையிலேயே உடல்முழுதும் பணிவு கலந்த ஒருவரால் மட்டும் தான் இது சாத்தியம்"* என்பதாக
ஹழ்ரத் அவர்களின் இந்த பிரமாண்ட நட்பு வட்டாரம் எனும் சமுத்திரத்தில் மூழ்கியவர்களிடம் கேட்கலாம்.

ஹழ்ரத் அவர்கள் எந்த தனிமனிதர் பற்றி குறை கூறியதையோ, புறம் பேசியதையோ இந்நாள் வரை எவரும் செவியேற்றதேயில்லை
ஒற்றுமை களைந்துவிடக் கூடாதென தீவிரப் போக்கை ஹழ்ரத் அவர்கள் பற்பல சமயங்களில் விட்ட போதெல்லாம் தன்னுடன் பயணித்த பலரை இழந்துள்ளார்கள், அவர்களின் வசைப்பாடல்களுக்கு இலக்கானார்கள் ஆனாலும் இன்று வரை தன் முஹிப்பீன்கள் ஏதேனும் சூழலில் அவர்களை பற்றிய கடும் வார்த்தைகளை உபயோகித்து விட்டால் 
*"நமக்கு ஏன் அடுத்தவர்கள் பேச்சு, நம்மை பற்றிப் பேசலாமே"* என பேச்சை திசை திருப்பி விடுவார்கள்.

ஏன் கொள்கையில் நேர்முரணாக உள்ளோரின் கூட்டங்களை கூட வேண்டுமென்று எந்த கூட்டங்களிலும் வசைப்பாடியதில்லை
அவர்களின் பெயர்களை தனியாக குறிப்பிட்டு கூறுவதில்லை *"வஹ்ஹாபிகள்"* எனும் பொது பெயருடனேயே அழைத்தார்கள்
எந்த சூழலிலும் எதிர் தரப்புவாதியின் தனிமனித ஒழுக்கங்களை தாக்கியதோ தரங்கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்ததோயில்லை.

*"கொள்கைகளை கொள்கைகளால் மட்டுமே மோத வேண்டும்"* என்ற கருத்தை கொடுத்தவர்கள்.

பற்பல தருணங்களில் தன்னை சந்திக்க வந்த அல்லது தான் சந்தித்த மாற்றுக் கொள்கையுடையோர்களுக்கு ஹழ்ரத் அவர்கள் செய்த கண்ணியத்தை அவர்களின் நாவுகளாலேயே மெச்சிப் புகழ்ந்ததை பன்முறை நான் செவியேற்றுள்ளேன்.

சமீபத்தில் அல்அஸ்ரார் பத்திரிக்கையின் ஆசிரியர் மௌலவி T.S.A.அபூ தாஹிர் மஹ்ழரி ஹழ்ரத் அவர்களுடன் ஏற்பட்ட உரையாடலின் போதும் ஜமாலி ஹழ்ரத் அவர்களின் மகனார் மௌலவி முஸ்தஃபா பிலாலி ஹழ்ரத் அவர்களுடன் ஏற்பட்ட உரையாடலின் போதும் ஏற்கனவே ஹழ்ரத் அவர்களை பற்றி ஹழ்ரத் அவர்களின் கொள்கைக்கு முரணான ஓர் ஆலிம் கூறியதை உறுதிபடுத்த நேர்ந்தது.

அதாவது *"தனி மனித வாழ்வின் நற்குணங்களை நிரப்பமாக பெற்றவர், தன் வாழ்வின் பெரும் பங்கை வறுமையிலும் சிரமத்திலும் கழிக்க நேரிட்டாலும் தன் குடும்ப உறுப்பினர்களின் ஒரு சில சிகிச்சைக்கு பணம் தேவைபட்ட போதும் இந்நாள் வரை தேவையென ஒரு வாசலிலும் நின்றதில்லை*
*தன் விரலசைவிற்கு கொட்டிக் கொடுக்கும் கொடையாளர்கள் கூடியிருந்தும் அண்ணா நகரில் வீடு கட்டுகிறோம் அம்பத்தூரில் வீடு கட்டுகிறோம் என பன்முறை கூறியிருந்தும் புதுபேட்டையின் வாடகை வீடே போதுமென வாழ்பவர்".

கூறுவதற்குண்டு கூற்றுக்கள் ஆயிரம் ஆயினும் நிறுத்துவது விரிவெனும் சடைவை அஞ்சியேயாகும்.

இத்தகைய பேராளுமையின் பேராசிரியர் மௌலவி அபுத் தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் கிப்லா பெறப் போகும் பெருமைமிகு பட்டயமான முனைவர் பட்டத்தால் மென்மேலும் மேன்மை பெற மனமாற வாழ்த்துகிறேன்.


இருலோக சிறப்புக்களை இரஸூலின் பரக்கத்தாலும் இறைநேசர்களின்
வஸீலத்தாலும் இனிதாக பெற்றிடவே
இருகரமேந்திஇறைஞ்சுகிறேன்
*-நபிநேசன்*
*மௌலவி ஹாபிழ் M.முஹம்மது ஃபாழில் நாஃபிஈ*
*(26-03-19)*

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு