தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!
இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம்
وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3)
1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3)
இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி)
படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும்
ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام
2. குறிப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் நினைவு கூறுவதற்காக''... (22:28)
இந்த இறைவசனத்தில் வரும் குறிப்பட்ட நாட்கள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும் என விளக்கமளித்துள்ளார்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ( புஹாரி)
அப்படியானால் அல்லாஹ்வை திக்ரு தியானம் செய்வதற்குரிய இந்த பத்து நாட்களின் சிறப்பு மகத்தானதல்லவா?
( ما من أيام العمل الصالح فيهن أحبُّ إلى الله منه في هذه الأيام العشر)
3. நற்செயல்கள் செய்வதற்கு இந்த பத்து நாட்களை விட அல்லாஹ்விற்கு மிகவும் உகந்த நாட்கள் வேறில்லை. (நபிமொழி புஹாரி 969, திர்மிதி 757, அபூதாவூத் 2438)
« مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ سُبْحَانَهُ وَلَا أَحَبُّ إلَيْهِ مِنْ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ »
4. அல்லாஹ்விடத்தில் மிகவும் புனிதமான நாட்கள் நற்செயல் புரிவதற்கு அல்லாஹ்விற்கு மிகவும் உகப்பான நாட்கள் அந்த பத்து நாட்களை விட வேறில்லை. எனவே இதில் அதிகமாக இறைவனைத் துதித்து மகத்துவப் படுத்தி அவனைப் புகழ்ந்து அவனது உண்மை ஏகத்துவத்தை உறுதிப்படுத்தும் உச்சாடனங்களை சொல்லுங்கள் (தபரானி)
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر
5. அல்லாஹ்விடத்தில் இறைவழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த துல்ஹஜ்ஜு மாதத்தின் முதல் பத்து நாட்களில் நோற்கப்படும் ஒவ்வொரு நோன்பும் ஒரு வருட நோன்புக்குச் சமம். அதில் ஒவ்வொரு இரவிலும் நின்று வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குவதற்கு நிகராகும் (நபிமொழி திர்மிதி 758, இப்னு மாஜா 1728)
6. ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அந்த பத்து நாட்கள் மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் கூடுதலாக கொடுத்த பத்து நாட்களாகும். அதாவது மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் தன்னோடு உரையாடுவதற்கு முன்பு முப்பது நாட்கள் நோன்பு இருக்கச் சொன்னான்.
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً
மூசாவிற்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம் பின்னர் அத்துடன் பத்து இரவுகளைச் சேர்த்தோம் ஆகவே அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. அல்குர்ஆன் 7:142)
இப்படி மூஸா நபிக்கு கூடுதலாக அதிகப் படுத்திக் கொடுத்த பத்து நாட்கள் என்பது துல்ஹஜ்ஜு மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களாகும். இதன்படி இந்த பத்து நாட்கள் நோன்பு இருந்தால் மூஸா நபி அலை அவர்களுக்கு உண்டான இறை நெருக்கம் நமக்கும் கிடைக்கும் அல்லவா?
8. இந்த பத்து நாட்களின் தனித்தனமைக்கு என்ன காரணம்?
قال الحافظ ابن حجر: «والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة، لمكان اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره»
நபிமொழி ஆய்வாளர் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுவார்கள்: தொழுகை நோன்பு சதகா தர்மம் ஹஜ்ஜு ஆகிய பிரதானமான எல்லா இறைவழிபாடுகளும் இதில்தான் சங்கமிக்கின்றன கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பு வேறு நாட்களுக்கு இல்லை. எனவேதான் இது சிறந்தது.
இவ்வாறு சிறப்புமிக்க இந்த நாட்களில் செய்யப்ப்டவேண்டிய சிறப்பு அமல்கள்- நற்காரியங்களைப் பற்றி இனி பார்ப்போம்
1. பொதுவாக தொழுகை தர்மம் குர்ஆன் ஓதுதல் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது போன்ற நற்காரியங்கள் (புகாரி 969)
2. குறிப்பாக ஹஜ்ஜு உம்ரா நிறைவேற்றுவது.
«العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة» رواه البخاري ومسلم.
உம்ரா பாவங்களுக்கு பிரயாச்சித்தமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜு இதற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை. (புகாரி 1773)
«تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب، كما ينفي الكير خبث الحديد والذهب والفضة
ஹஜ்ஜு உம்ரா இவ்விரண்டும் தொடர்ந்து நிறைவேற்றுவது, நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் பாவத்தையும் வறுமையும் போக்கி ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும். (திர்மிதி 81, பைஹகீ 4095)
3. இந்த நாட்களில் முழுவதும் அல்லது முடிந்த அளவு நோன்பு பிடிப்பது (திர்மிதி 758)
4. அதிகமாக இறைவனை திக்ரு செய்வது. ஸலவாத் ஓதுவது, தஸ்பீஹ் சொல்வது ( தபரானி, ஸஹிஹ் இப்னு ஹிப்பான்)
5. இஸ்திஃபார் அதிகம் செய்வது. பாவமன்னிப்புக் கோருவது. இதற்கு மூன்று நிபந்தனைகள்: செய்த பாவத்தை நினைத்து வருந்துவது
அந்த பாவத்தை விட்டு விலகி விடுவது மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் திரும்ப மாட்டேன் என உறுதி கொள்வது
அல்லாஹ் ரோஷப்படுபவன் அவன் தடுத்து ஹராமாக்கிய பாவ காரியங்களை மனிதன் செய்கிறபோது அல்லாஹ் ரோஷப்படுவான் (புஹாரி)
அல்லாஹ்வின் கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க அவனிடமே சரணடைந்து விடுவது பாவமன்னிப்புக் கூறுவதே சிறந்த வழியாகும்
6. பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குத்பா சொற்பொழிவை செவிமடுப்பது
7. ஜகாத் கடமையானவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுப்பது. இவாறு குர்பானி கொடுக்க நினைப்பவர் துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையைப் பார்த்துவிட்டால் நகம் முடி களையாமல் இருக்கவேண்டும் (முஸ்லிம் 1977)
« إذا دخل العشر ، فإن أراد أحدكم أن يضحي فلا يمس من شعره ، ولا بشره شيئا
அல்லாஹ்விற்காக குர்பானி-தியாகம் செய்வோம். அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!!
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,
அல்லாமா எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment