ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் !!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாட்டின் தென்முனையாகிய குமரி மாவட்டத்தின் தென்மேற்குக் கரையிலுள்ள தேங்காய்ப்பட்டினம் என்ற வரலாற்றுப் பழமை வாய்ந்த கடலோரக் கிராமத்தில் பிறந்த "ஆலிம் கவிஞர் " தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் அவர்களை பற்றிய பல்வேறு தகவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு தருவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் .
தமிழ் முஸ்லிம் சமுதாய மக்களிடையே - சிறந்த ஆன்மீக - சமுதாய மற்றும் இலக்கிய சொற்பொழிவாளர் , எழுத்தாளர் என்ற வகையில் - நன்கு அறிமுகமானவர்.
தமிழ்ச் செம்மல் இறையருள் கவிமணி டாக்டர் கா.அப்துல் கபூர் அவர்களை ஆசானாக ஏற்று தமிழ்க் கவிதை பயின்ற இவர்,அன்னாரின் தலைமையில் 7 கவியரங்குகளில் கவிதை வாசித்தவர்.இவரின் முதல் கவியரங்கிலேயே இறையருள் கவிமணியால் - " தேன் போன்ற கவியெழுதும் கையுடையார் " - " தேங்காய்ப்பட்டினத்தார் " என்ற இரட்டைப் பொருளில் - தேங்கையார் என்று பாராட்டப்பட்டவர்கள்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் 15 கவியரங்குகளில் பங்கேற்றவர்.இவரின் கவிநயத்தால் "மிம்பரில் ஏறும் ஒரு கம்பர்" என்று கவிக்கோவால் பாராட்டப்பட்டவர்கள்.
55 க்கு மேற்பட்ட தமிழ்க் கவியரங்குகளில் பங்கேற்று கவிதை வாசித்த ஒரே ஆலிமான இவர் 2000 ல் ராஐகிரியில் நடைபெற்ற தமிழிலக்கிய மாநாட்டில் - 'தமிழ்வழிக் கல்வி' எனும் தலைப்பில் - கவியரங்கத் தலைமையேற்று கவிதை வாசித்தவர்கள்.
இசையருவி குமரி அபூபக்கர் அவர்களால் பாடப்பட்டு கலைமாமணி கவி.கா.மு.ஷரீப் அவர்களால் நிகழ்த்தப்பட்டுவந்த சீறாப்புராண
விளக்கவுரை நிகழ்ச்சியை கலைமாமணியின் மறைவுக்குப்பின்
தொடர்ந்நு செய்து வருபவர்கள்.
கஃபு (ரலி) எனும் ஸஹாபிக் கவிஞர் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட காரணமாக அமைந்த பானத்சுஆத் எனும் அரபி கவிதையை மொழிபெயர்த்து தமிழ் மொழிக்கு முதன்முதலில் அறிமுகம் செய்ததால் 2007 ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய 7வது மாநாட்டில் அந்நாள் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களால் பொன்னாடையும் பொற்கிழியும் வழங்கப்பட்டவர்கள்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப்பொதுச் செயலாளர் தேங்கை ஹழரத் அவர்கள் இறைமறையின் இதயம் யாஸின் சூறா விரிவுரை ,சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லிது,கன்னித்தமிழில் கஸீதத்துல் புர்தா , கருணை நபி புகழ்க்காவியம் கஸீதத்துல் வித்ரிய்யா, தமிழ் முஸ்லிம்களின் அரபிச் சொல்லகராதி முதலிய நூல்களின் ஆசிரியர் ஆகிய இவர் - தங்கமொழித் தாலாட்டு,முஹ்யித்தீன் ஆண்டகை முத்தமிழ் மாலை,ஏர்வாடி நாதர் முனாஜாத்து மாலை,தவஞானி பீரப்பா முனாஜாத்து மாலை,மாப்பள்ளை ஆலிம் மணிமாலை ,முதலிய கவிதை இலக்கியங்களும் படைத்துள்ளார்கள்.
மலேசியாவிலுள்ள பினாங்கு தமிழ்மன்றத்தில் " தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற தலைப்பில் இலக்கியவுரை நிகழ்த்தி "சொல்லின் செல்வர்" என்ற பட்டம் பெற்றுள்ளார்கள்.
எம்பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மறுமையில் நமக்கு எப்படி மன்றாட்டம் செய்து கை கொடுப்பார்கள்
என்பதை விளக்கும் யாஷபியே! யாஷஹீதே! யாரசூலல்லாஹ் - என்ற பாடலை இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்காக எழுதிக் கொடுத்தவர் தேங்கை ஹழரத் அவர்கள் .
சுன்னத் வல் ஜமாஅத்தின் சுடர் விளக்காக தமிழ் முஸ்லிம் உலகெல்லாம் பிரகாசித்து வந்த ' ஆன்மீகத் தேனருவி ' மவ்லானா S.S கலந்தர் மஸ்த்தான் ஹழரத் அவர்களை முதல் ஆசிரியராகப் பெற்ற தேங்கை ஹழரத் அவர்களின் முதல் மாணவர் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் மவ்லவி M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹழரத் அவர்கள் ஆவார்கள்.
கீழக்கரை, காயல்பட்டினம், தூத்துக்குடி, கோவை ஆகிய ஊர்களிலுள்ள அரபி கல்லூரிகளில் திருக்குர்ஆன் விரிவுரைத் துறை பேராசிரியராக 24 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டு தஞ்சை பாபநாசம் ஆர்.டி.பி கலை அறிவியல் கல்லூரியில் அரபித் துறைப் பேராசிரியராக பணியாற்றிவரும் இவர்களின் அரபி இலக்கிய மொழி பெயர்ப்பு பணி குறித்த தகவல்கள்,சென்னை பல்கலைக் கழக அரபி இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர்களுக்கான பாட நூலில் இடம் பெற்றுள்ளன.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.
Comments
Post a Comment