ஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது !!!




ஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது.

எனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல் போன ஹாஜி , அடுத்து வரும் இரவில் அங்கு தங்கினாலும் போதும். அவரது ஹஜ்ஜு நிறைவேறிவிடும் என்று ஃபிக்ஹு சட்டம் கூறுகிறது. அதாவது ஹஜ்ஜுடைய (ஃபர்ளு) கடமைகளில் அரஃபாவில் தங்குவதுதான் பிரதானதும் மிக மிக முக்கியமானதுமாகும். மக்காவுக்கு வந்து எல்லா வழிபாடுகள் திருக்கஃபாவில் வைத்து செய்தாலும் மினா,முஸ்தலிபா முதலிய திருத்தலங்களில் வந்து தங்கினாலும் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்கவில்லையானால் ஹஜ்ஜு நிறைவேறாது. எனவே அரஃபாவில் தங்காதவர் ஹாஜியாக முடியாது. ஏனெனில் "ஹஜ்ஜு என்றாலே அரஃபா(வில் தங்குவது)தான்"1  என ஏந்தல் நபி ஸல் கூறியுள்ளார்கள். எனவே எல்லா ஹாஜியும் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடியே ஆகவேண்டும் துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாள் சூரியன் நாடு உச்சியை விட்டும் சாய்ந்த பிறகுள்ள பகலில் அரஃபாவில் தங்குவதுதான் அதற்குரிய அவசியமான (வாஜிபான) நேரம். ஒருவேளை இந்த பகல் நேரத்தில் இங்கு வந்து தங்கும் வாய்ப்பு பெறாதவர்கள் இதைத் தொடர்ந்து வரும் இரவில் தங்கினாலும் ஹஜ்ஜு நிறைவேறிவிடும்.

இதற்கு காரணம் துல்ஹஜ்ஜு பத்தாம் நாள் இரவு முழுதும் ஸுபுஹ் சாதிக்- மெய் விடியற்காலை- வரை ஷரிஅத் முறைப்படி அது ஒன்பதாம் நாளின் பகலுடன் சேர்வதேயாகும் என்று சட்டமேதைகளான ஃபுகஹாக்கள் கூறுவார்கள். இதன்படி அரஃபாவுடைய ஒன்பதாம் நாளுக்கு இரண்டு இரவுகள். ஒன்று எப்போதும்போல அதற்கு முந்திய இரவு. இரண்டாவது அதன் பகலைத் தொடர்ந்து வரும் இரவு. எனவே பத்தாம் நாளுக்கு இரவே இல்லை. ஆகவே பத்தாம் நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினம் நாட்களில் இரவே இல்லாத பகல் என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆதலால்தான் அன்றைய விடியற்காலைப் பொழுதின் மீது சத்தியமாக!-(வல்ஃபஜ்ரி) என்று அல்லாஹ் குர்ஆனில் அதைப் பிரத்தியேகப் படுத்திக் கூறுகிறான். (தஃப்சீர் குர்துபி, மஆரிஃபுல் குர்ஆன்)
  -1(الحج عرفة)
أخرجه أبو داود (1949) والنسائي (2 / 45 - 46 ، 48) والترمذي (1/ 168) والدارمي (2 / 59) وابن ماجه (3015) والطحاوي (1 / 408)وابن الجارود (468) وابن حبان (1009) والدارقطني (264) / 464 ، 2 / 278) والبيهقي (5 / 116 ، 173) والطيالسي (1309) وأحمد(4 / 309 ، 309 - 310 ، 335)



என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு